மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 27 மே 2020

இளைய நிலா: அன்பே சுமையாகலாமா?

இளைய நிலா: அன்பே சுமையாகலாமா?

இளைஞர்களின் உறவுச் சிக்கல்களைத் தீர்க்க என்ன வழி? பகுதி – 47

ஆசிஃபா

நமக்குப் போதுமான அன்போ, அக்கறையோ கிடைக்காமல் போவது மிகப் பெரிய உளவியல் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். அதேபோல, அளவுக்கு அதிகமான அன்பு / அக்கறையும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். அதைப் பற்றி நாம் அவ்வளவாகப் பேசுவதோ சிந்திப்பதோ இல்லை. காரணம், “இவ்ளோ அன்பு தாங்க முடியல!” என்று சொன்னாலே, உணர்ச்சியை மதிக்கத் தெரியாத ஜடம் என்று பெயர் வந்துவிடக்கூடும்.

அளவிற்கு மீறினால் அமிர்தமே நஞ்சுதானே? அன்பும் அப்படித்தான். அன்பை எப்படி அளப்பது, அன்பிற்கு அளவு இருக்கிறதா என்று கேட்பது இயல்புதான். அன்பு /அக்கறையில் இருவரின் மனநிலையைப் பொறுத்து இந்த அன்பு மாறுபடும். சிலருக்கு தினமும் ‘குட் மார்னிங்’, ‘குட் நைட்’ போன்ற மெசேஜ்களும், பலமுறை பேசிக்கொள்வதும் நன்றாக இருக்கும். சிலருக்கு அது மிகுந்த எரிச்சலைத் தரும். இரு நபர்களுக்கு இடையில் உரையாடி முடிவு செய்துகொள்ள வேண்டிய விஷயம் இது.

இன்னொரு மிக முக்கியமான விஷயம், அன்பு என்ற பெயரில் சுய மரியாதையை இழப்பது. இதை நான் பலரிடம் பல சூழல்களில் கண்டிருக்கிறேன். ஏன், நானே இப்படி இருந்திருக்கிறேன். நட்போ காதலோ, ஒரு சண்டை வருகிறது. நியாயம் நம் பக்கம்தான் என்பது தெரிகிறது. அது நண்பருக்கும் தெரிகிறது. ஆனாலும் அவர் / அவள் திட்டுவதை, கோபப்படுவதை நாம் பொறுமையாகக் கேட்டுக்கொண்டிருக்கிறோம். எவ்வளவு மோசமாகத் திட்டினாலும் கேட்டுக்கொண்டு அழுதுகொண்டிருக்கிறோம்.

இதற்குப் பெயர் புரிதல், தியாகம், அளவு கடந்த அன்பு என்று சிலர் சொல்லக்கூடும். இருவரும் சண்டை போட்டால் உறவில் விரிசல் வரும், அதனால் ஒருவர் பொறுத்துப்போக வேண்டும். எனவே இந்த அணுகுமுறைதான் சரி என்றும் சொல்லலாம். ஆனால், உண்மையில் இங்கே என்ன நடக்கிறது? ஒருவர் இன்னொருவர் மீது அதிகாரம் செலுத்துகிறார். மற்றவரின் அன்பையும் அறியாமையையும் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.

உறவில் கோபம் சகஜம்தான். ஆனால், அது ஒருவழிப் பாதையாக இருந்து, ஒரு அளவுக்கு மேல் போனால் அப்போதும் அதைப் பொறுத்துக்கொண்டிருக்க வேண்டுமா என்ன? பொறுத்துப்போவதற்குக் காரணம் அன்பு என்றால் அந்த அன்பு திட்டுபவருக்கு இருக்கக் கூடாதா? அவர் அளவோடு நிறுத்தக் கூடாதா? தன் அன்புக்குரியவர் எதுவுமே பேசாமல் இருப்பதைப் பார்த்தாவது சற்று தணிந்து பேசக் கூடாதா?

ஒருவர் தவறு செய்யும்போது அதைச் சுட்டிக்காட்டக்கூடிய உரிமை எங்கே இருக்கிறதோ அங்கேதான் ஆரோக்கியமான உறவு இருக்கும். என்ன தவறு செய்தாலும், எவ்வளவு அத்துமீறிப் பேசினாலும் அதைச் சொன்னால் உறவில் பாதிப்பு வரும் என்றால் அது உறவே இல்லை.

அன்பின் சுமை என்று கேள்விப்பட்டிருக்கிறேன். உண்மையில், சிலரின் அன்பு மிகவும் சுமையாகவே இருக்கிறது. நம்மால் என்றுமே திரும்பிச் செலுத்த முடியாத அன்பு, சுமைதான். நமக்குப் பிடித்த மாதிரி தன்னை மாற்றிக்கொள்வதும் நமக்குத் தேவையான பொருட்களைப் பரிசாகக் கொடுப்பதும் நாம் எப்போது பேசினாலும் நமக்காக நேரம் ஒதுக்குவதும் நாம் திட்டினால் பொறுமையாக ‘பரவாயில்ல’ என்று சொல்வதும் ஒரு எல்லைக்கு மேல் மிகப் பெரிய குற்றவுணர்ச்சியை ஏற்படுத்திவிடும்.

சிலரின் அடிப்படை குணமே இதுதான். அதிகப்படியான அன்பைக் கொடுப்பது அவர்களுக்கு ஒரு மகிழ்ச்சி. ஆனால், எதிராளின் மனநிலையைப் புரிந்துகொள்ள வேண்டும் இல்லையா? சில நாட்களுக்கு இவையெல்லாம் நன்றாகவே இருக்கும். ‘நமக்குள் நல்ல புரிதல் இருக்கிறது!’ என்று தோன்றும். ஆனால், இப்படியே போனால் ஒரு கட்டத்தில் விரக்தி ஏற்படத் தொடங்கும். அது நம் மீது நமக்கே வரும் கோபம். நம்மால் அப்படி இருக்க முடியவில்லையே என்ற கோபம். அதை நாம் அவர் மீதே காட்டுவோம். மீண்டும் அவர் அதைப் புரிந்துகொண்டு ‘பரவாயில்ல’ என்று சொல்ல, மீண்டும் விரக்தி, மீண்டும் கோபம். இது ஒரு சுழற்சி முறையில் நடந்துகொண்டே இருக்கும்.

இறுதியாக, யாரோ ஒருவர் அந்த உறவை நிரந்தரமாக முறித்துவிடுவார். அது நிகழும் வரை, இரு தரப்பினருக்கும் அதிகமாக மனதளவில் போராட்டம் நடக்கும்.

உறவை ஏன் இவ்வளவு சிக்கலாக்கிக்கொள்ள வேண்டும்? ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்துவம் இருக்கும். அதை யாருக்காகவும் எதற்காகவும் விட்டுக்கொடுக்க வேண்டிய அவசியமில்லை. அன்பு என்பதுடன் சுய மரியாதையும் இருந்தால் அனைவருக்கும் நல்லது. அன்பைக் கொடுப்பது நல்லதுதான். அதே சமயம் மரியாதையையும் கொடுக்க வேண்டும். ஒருவருடைய உணர்வுகளுக்கும் விருப்பங்களுக்கும்.

இந்த நொடி, இந்தக் கணம், இந்த வாழ்க்கை…!

செவ்வாய், 30 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon