மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 9 ஜூலை 2020

'பாஜகவில் இணைகிறார்': பன்னீருக்கு எதிராக அதிமுகவில் சதி?

'பாஜகவில் இணைகிறார்':  பன்னீருக்கு எதிராக அதிமுகவில்  சதி?

இடைத்தேர்தல் நடைபெறும் நான்கு தொகுதிகளில் ஒன்றான திருப்பரங்குன்றத்தில் அதிமுகவின் தேர்தல் அலுவலகத் திறப்பு விழா, வேட்பு மனு தாக்கல் ஆகியவை நேற்று (ஏப்ரல் 29) நடந்தன. தேர்தல் பணி மனையைத் திறந்து வைத்தார் துணை முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர் செல்வம்.

அதன் பின் திருமங்கலத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள் பலரும், காசி பயணம் என்பது நீங்கள் பாஜகவில் சேர்வதற்கான ஏற்பாடுகளுக்காக போனதா என்று கேள்வி கேட்க ஓ.பன்னீர் செல்வம் டென்ஷனாகிவிட்டார். அவருடன் இருந்த கே.பி.முனுசாமியும் வைத்திலிங்கமும் பத்திரிகையாளர்கள் மீது பாய்ச்சல் நடத்திவிட்டார்கள்.

பிரஸ் மீட்டின் முதல் கேள்வியே, ‘இன்னும் 25 நாட்களில் தமிழகத்தில் ஆட்சியை மாற்றிக்காட்டுகிறேன் என்று துரைமுருகன் சொல்லியிருக்கிறாரே?’ என்பதுதான். அதற்கு ஓ.பன்னீர், ‘துரைமுருகன் கனவுலகத்தில் இருக்கிறார்’ என்று குறிப்பிட்டார்.

திருப்பரங்குன்றத்தில் முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த தங்கதமிழ்செல்வன், ‘ஓ.பன்னீர் பிஜேபியோட டச்சில் இருப்பதால்தான் முதல்வர் பதவியில் இருந்தே அவரை மாத்தினோம். இப்ப அதை காசி போனதன் மூலமா அதை நிரூபிச்சிட்டார். மோடியின் அடிமை என்பதை அவரே ஒத்துக்கிட்டார். பிஜேபிக்கு போகப் போறதா கூடசெய்திகள் வருது’ என்று கூறியிருந்தார்.

இதுபற்றி ஓ.பன்னீரிடம் ஒரு செய்தியாளர் கேள்வி எழுப்ப, “தர்மயுத்தம் தொடங்கிய காலத்தில் இருந்தே தங்கதமிழ் செல்வன் பற்றிய கேள்விகளுக்கு நான் பதில் சொல்வதில்லை. நல்லவர்களுக்கு மட்டும்தான் நான் பதில் சொல்வேன். துஷ்டர்களுக்கு பதில் சொல்வதில்லை” என்று சொன்னார் ஓ.பன்னீர்.

மீண்டும் ஒரு நிருபர், ‘நீங்க காசிக்கு போனதே பிஜேபியில சேருவதற்குத்தான்னு’ என்று கேட்டு முடிப்பதற்குள், ‘முட்டாள்தனமான கருத்து. அடிமுட்டாள் தனமான கருத்து’ என்று மறுத்தார் பன்னீர் செல்வம். எப்போதும் மென்மையாக பேசும் பன்னீரின் குரலில் கொஞ்சம் அழுத்தமும் நிறைய கோபமும் தெரிந்தது.

நோட்டீஸ் அனுப்பப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் தாங்கள் அதிமுகவில்தான் இருப்பதாகச் சொல்கிறார்களே என்ற கேள்விக்கு,

“அமமுகவில் இல்லை என்று சொன்னால் அவர்கள் சபாநாயகரிடம் விளக்கம் அளிக்கலாம். ஆனால் அவர்கள் அந்தக் கட்சியில் இயங்குவதற்கான உண்மையான ஆவணங்கள் பேரவைத் தலைவரிடம் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

அவர்களுக்கு துணிச்சல் இருந்தால், ‘நாங்கள் அமமுகதான் நடவடிக்கை எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொல்ல வேண்டும். அதுதான் அவர்களின் வீரத்துக்கு அழகு. இப்படிச் சொல்வது கோழைத்தனம்” என்று பதிலளித்தார் பன்னீர்.

இவ்வாறு சில கேள்விகளுக்கு பதில் சொல்லி முடித்த பின் மீண்டும் இன்னொரு நிருபர் காசி பற்றிய கேள்வியை எழுப்ப, ஓ.பன்னீர் பதில் சொல்வதற்கு முன்பே கே.பி. முனுசாமி பதில் சொல்ல ஆரம்பித்தார்.

“உங்களை யார் இப்படி கேட்கச் சொல்றது? அவர் அதிமுகவை வழிநடத்துகிற தலைவர். ஒரு கட்சியின் தலைவராக இருக்கிறவரை வேற கட்சியில சேருகிறீர்களா என்று எப்படி நீங்கள் கேட்கலாம். இதற்கு என்ன காரணம்?” என்று எகிற ஆரம்பித்தார். கூட இருந்த வைத்திலிங்கமும், ‘தமிழ்செல்வன் எல்லாம் இவருக்கு இணையான தலைவர் கிடையாது. அவர் சொல்றாருனு இப்படி கேட்கலாமா?’ என்று கொந்தளித்தார். லேசான சலசலப்போடு பிரஸ்மீட் முடிந்தது.

காசி விசிட்டுக்குப் பின் தான் பாஜகவில் சேரப் போவதாக வந்த தகவல்களால் ஓ.பன்னீர் செல்வம் மிகவும் அப்செட் ஆகியிருக்கிறார். அதிமுகவின் பொதுச் செயலாளர் ஆவதற்கான ஏற்பாடுகளில் இருக்கும் பன்னீரை பாஜகவில் சேருவதாக தகவல்களை தமிழக உளவுத்துறையே கிளப்பிவிடுகிறது. இதற்குப் பின்னால் எடப்பாடி பழனிசாமி இருக்கிறாரோ என்றும் கூட பன்னீரின் நெருங்கிய வட்டாரத்தில் விவாதிக்கப்பட்டு வருகிறது என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.

மேலும், “தர்மயுத்தம் நடத்தி முடித்து அணிகள் இணைப்புக்கு பின் பன்னீரின் அணியில் இருந்த அவைத் தலைவர் மதுசூதனனிடம்தான் இரட்டை இலை ஒப்படைக்கப்பட்டது. அப்படிப் பார்த்தால் இரட்டை இலை இப்போது பன்னீரிடம்தான் இருக்கிறது. இதையெல்லாம் வசதியாக மறைத்துவிட்டு நான்கு நாள் காசி போனதற்காக பாஜகவில் சேருகிறார் என்று பன்னீரை வைத்து கதைகட்டி விடுவதெல்லாம் கட்சியை முழுமையாக கைப்பற்றுவதற்காக எடப்பாடி ஆதரவாளர்கள் செய்யும் வேலைதான். தேர்தல் முடிவுகளுக்குப் பின் இன்னும் பல அதிரடிகள் அதிமுகவில் அரங்கேறும்” என்றும் பொருமுகிறார்கள் தர்மயுத்த சீனியர்கள்.

செவ்வாய், 30 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon