மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 26 மே 2020

டாப் ஸ்லிப் 4: காடுகளைக் காக்க ஹ்யூகோ வுட் சொன்ன வழி!

டாப் ஸ்லிப் 4: காடுகளைக் காக்க ஹ்யூகோ வுட் சொன்ன வழி!

எஸ்.எஸ்.மணி

இந்த மலைப்பகுதியில், அதிகமான மரங்களை வெட்டி, காடு திருத்திய வேட்டைகாரன்புதூர் ஒப்பந்த(ஜாமீன்)தாரர் ஒருவருக்கு யானைத் தந்தத்தால் செய்யப்பட்ட பல்லக்கு ஒன்றைப் பிரிட்டிஷ் அரசு பரிசளித்தது என்று சொல்லப்படுகிறது.

“நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்புவரை, வேட்டைக்காரன் புதூர் ஜமீன்தார் வீட்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் பிரிட்டிஷ் அரசுக்கு கொடுக்கப்படும் வரிப் பணத்தை, இந்த யானைத் தந்த பல்லக்கில்தான் எடுத்துக்கொண்டு போவார்கள். பொள்ளாச்சி, சந்குனி ஆஸ்பத்திரிக்குப் பக்கத்திலிருந்த ஆங்கில அதிகாரியின் அலுவலகத்தில் அதைக் கொண்டுபோய் கொடுத்து விட்டு மீண்டும் பல்லாக்கு வேட்டைக்காரன் புதூருக்குத் திரும்பும்” என்று தனது சிறு வயது நினைவை நம்முடன் பகிர்ந்து கொண்டார் வேட்டைக்காரன் புதூரைச் சேர்ந்த 87 வயதான சுந்தரலிங்கம்.

இங்கிலாந்தின் தேவைக்காகவும், இந்தியாவின் வளர்ச்சிக்காகவும் பெருமளவில் மரங்கள் வெட்டப்பட்டு காடுகள் அனைத்தும் மொட்டையான நிலையில், மழைப் பொழிவு குறைந்தது. காட்டு விலங்குகள் உணவுக்காக நாட்டுக்குள் படையெடுத்தன.

இதனால், அருகிலிருந்த விளை நிலங்கள் பாதிக்கப்பட்டன. பல மானிட உயிர்கள் பலியாயின. அடுத்தடுத்து ஏற்பட்ட மரத் தேவையின் காரணமாகப் பிரிட்டிஷ் அரசுக்கும் இந்தியக் காடுகளை வளர்க்க வேண்டிய அவசியமும் ஏற்பட்டது.

இதன் பயனாக, 1855இல், இந்தியக் காடுகளைக் கண்காணித்து வளர்க்கக் காடுகளுக்கென ஒரு தனித்துறை ஏற்படுத்தப்பட்டது.

சமூக அக்கறையுள்ள மருத்துவரான டாக்டர் கிளைஹர் (Dr.H.F.Cleghorn) என்பவர் மெட்ராஸ் பிரசிடென்சியின் முதல் வனப் பாதுகாவலராக நியமிக்கப்பட்டார்.

காடுகளை வளர்க்க தனித்துறை

கிளைஹரின் வழிகாட்டுதலின்படி இந்தியக் காடுகளுக்கென தனிச்சட்டம், தனி அமைச்சகம், தனித்தனிப் பணியிடங்கள் உருவாக்கப்பட்டன. இந்தியாவில் பணியாற்றும் ICS, IPS பணியாளர்கள் போலவே, வனத்துறைக்கு எனத் தனியாக IFS என்ற புதிய படிப்பும் இங்கிலாந்தில் துவங்கப்பட்டது.

இதில் படித்து முடித்த பல ஆங்கிலேயர்கள் இந்தியக் காடுகளை வளப்படுத்தும் பொறுப்புக்கு உயர் அதிகாரிகளாக வந்தனர்.

ஆனைமலை காடுகளெல்லாம் அழிந்து மொட்டையாகக் கிடந்த 1915 ஆண்டு வாக்கில் டாப் ஸ்லிப் பகுதிக்கு ஹியூகோ வுட்(Hugo Wood) என்ற IFS அலுவலர் பணிக்கு வந்து சேர்ந்தார்.

முன்னர் ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள அஜ்மீர் காடுகளில் அவர் செய்த பணியைக் கவனித்த பிரிட்டிஷ் அரசு, ஆனைமலைப் பகுதியை மறு சீரமைப்பு செய்யும் பணிக்காக அவரை கோயம்புத்தூர் (தெற்கு) வனக் கோட்டத்திற்கு அனுப்பியது.

மரங்கள் இல்லாமல் இன்டஞ்செடிகளும், உன்னிச்செடிகளும் நிறைந்து புதராகக் கிடந்த ஆனைமலை காடுகளைச் சுற்றிப் பார்த்தார் ஹுயூகோ வுட்.

சுற்றிலுமுள்ள மலைகளில் வாழ்ந்த பழங்குடிமக்கள், மரம் வெட்டுவோர், மரம் விற்போர் எனப் பலரிடமும் தொடர்புகொண்டு பேசினார்.

மரம் வெட்டப்பட்ட காடுகளில் மலைவாழ் மக்களுடன் சேர்ந்து பயணம் மேற்கொண்டார், ஆய்வுகள் செய்தார்.

முதல் கட்டமாக அழிந்துபோன காடுகளை மீட்டெடுக்க 1915இல் ஒரு செயல் திட்டத்தை தயாரித்து பிரிட்டிஷ் அரசுக்கு அனுப்பினார்.

அரசுக்குத் தேவையான மர அறுவடையை நிறுத்தாமலும், அதே நேரத்தில், காடுகள் அழியாமல் இருப்பதற்குமான செயல் திட்டத்தை வகுத்தார்.

இத்திட்டத்தின் மூலம், இருக்கின்ற காடுகளைப் பாதுகாக்கவும், புதிய காடுகளை வளர்க்கவும் என இருமுனைச் செயல்பாட்டை வலியுறுத்தினார்.

முதலாவது திட்டம். “காடுகளில் வளர்ந்துள்ள மரங்களை வேரோடு வெட்டக் கூடாது. நிலத்துக்கு மேலே ஒரு அடி மரத்தை விட்டு வெட்டினால், நமக்குத் தேவையான வெட்டு மரம் கிடைக்கும். அதே நேரத்தில், வேரின் ஊக்கம் குறையாமல் வெட்டப்பட்ட மரத்தின் அடியிலிருந்து மறுபடியும் துளிர்த்து வேகமாக வளரும். இதன் மூலம் காடுகள் அழியாது” என்று கூறினார்.

Coppice Method எனப்படும் இந்த மர அறுவடை முறையை நம் நாட்டில் முதன் முதலில் ஹியூகோ வுட்தான் அறிமுகப்படுத்தினார். இன்றளவும் நாடு முழுவதும் இந்த முறைதான் கையாளப்படுகிறது.

இரண்டாவது செயல் திட்டம்: “குறிப்பிட்ட சில காட்டுப் பகுதிகளில் உள்ள மரங்களைக் குறைந்தது 25 ஆண்டுகளுக்கு வெட்டாமலிருப்பது. அப்படியே அவசரமான தேவைக்காக மரம் வெட்டினாலும், ஒன்றுக்கு நான்காக மரக்கன்றுகளை நடுவது. இதன் மூலம் இயற்கையாக வளர்ந்துள்ள காடுகளின் வளம் குறையாது. மாறாக மர வளம் பெருகும்” என்று கூறியிருந்தார்.

இந்தியக் காடுகளைக் காக்க வேண்டும் என்று முடிவு செய்த பிரிட்டிஷ் அரசு இந்த செயல் திட்டத்துக்கு ஒப்புக்கொண்டது.

ஹியூ வுட்டுக்குக் காடுகளை வளர்க்க அனுமதியும் கிடைத்தது. டாப் ஸ்லிப் காடுகளில் வெட்டிக் குவிக்கப்பட்டிருந்த தேக்கு மரங்களை எல்லாம் எடுத்து, அறுத்து, சீர்செய்து,விஞ்ச் மூலமாக ஒரே இடத்தில் கொண்டுவந்து சேர்த்தார்.

அங்கே தண்ணீரின் மூலம் இயங்கும் ஒரு மர அறுவை ஆலையைத் துவக்கினார். மரங்களை எல்லாம் அறுத்து சட்டங்களாக்கினார்.

காட்டில் வாழும் பழங்குடியினரான காடர்இன மக்களை இங்கே வேலைக்கு அமர்த்தி, மரங்களை வகைப்படுத்தினார்.

இந்தியா முழுவதுமுள்ள அரசு அலுவலகங்களுக்குத் தேவையான நாற்காலி, மேசை செய்யத் தேவையான மரச்சட்டங்கள் டாப் ஸ்லிப்பிலிருந்து பயணமாகின.

மரச்சட்ட விற்பனையில் கிடைக்கும் பணத்தைக் கொண்டு புதிய மரக்கன்றுகளை இந்த மலைப்பகுதியில் நடவு செய்தார்.

வேலையே இல்லாமல் இருந்த மலைவாழ் மக்களுக்கு மரங்களை அறுத்து இழைக்கும் வேலை மற்றும் புதிய மரங்களை நடவு செய்ய என இருமுறை வேலைவாய்ப்பை ஏற்படுத்தினார்.

இப்போதுள்ள வனத்துறை அதிகாரிகளைப் போல மாவட்ட தலைநகரில் உள்ள அதிகாரிகளுக்கான ஆடம்பரமான பங்களாவில் தாங்காமல், மலைப்பகுதியிலிருந்த அடர்ந்த காட்டுக்குள்ளே இருந்த சிறிய வீட்டிலேயே தங்கினார்.

அடிப்படை வசதிகள்கூட இல்லாத ஒரு சிறிய வீட்டில் வாழ்ந்து கொண்டு, மர வளம் பெருகவும், அதன் மூலம் வன உயிரினங்களை பெருக்கவும் திட்டமிட்டுச் செயல்பட்டார் ஹியூகோ வுட்.

முறையான சாலை வசதி இல்லாமலிருந்த அந்த நாளில், ஹியூகோ வுட் தனது பயணத்துக்காக நான்கு குதிரைகளை வளர்த்து வந்துள்ளார்.

ஒவ்வொரு நாளும் ஒரு குதிரையில் பயணம் செய்யும் வுட் காடுகளில் வசித்து வந்த பூர்வ குடிமக்களான காடர்களுக்குத் தேவையான, வசதியான குடியிருப்புகளை உருவாக்கிக் கொடுத்துள்ளார்.

அவர்களின் குடியிருப்புகளுக்குச் சாலை வசதிகளைச் செய்துள்ளார். அந்த மக்களைக் கொண்டு மரமின்றி வறண்டு கிடந்த ஆனைமலை காடுகளை மறு சீரமைப்பு செய்துள்ளார்.

ஹியூகோ வுட் பொள்ளாச்சி மாற்றும் வெளியூர்களுக்குச் சென்று திரும்பும் வுட், வரும்போது ஏராளமான தேயிலைத் தூள் பொட்டலங்களை வாங்கிக் கொண்டு வருவார்.

டாப்சிலிப் பகுதியில் குடியிருந்த காடர் இன பழங்குடி மக்களுக்கு அந்த தேயிலைத் தூள் பொட்டலங்களைப் பரிசாகக் கொடுப்பார்.

இதற்காக வெளியூருக்குச் சென்று வரும் வுட் அவர்களின் வருகையை அப் பகுதியில் வாழ்ந்த மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருப்பார்கள்.

(பயணம் தொடரும்)

டாப் ஸ்லிப்: மீண்ட சொர்க்கம்

டாப் ஸ்லிப்: நாடு வீழ்ந்ததால் காடும் அழிந்தது!

டாப் ஸ்லிப்: ஆனைமலையின் மரங்கள் வீழ்ந்த கதை!

திங்கள், 29 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon