மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 6 ஜுன் 2020

தமிழ்நாட்டில் பொருளாதார மேம்பாட்டு சவால்கள் - 1

தமிழ்நாட்டில் பொருளாதார மேம்பாட்டு சவால்கள் - 1

தமிழ்நாடு கண்டு வரும் பொருளாதார மேம்பாட்டு சவால்கள் குறித்த சிறு தொகுப்பைக் காண்போம்.

தமிழக மாவட்டங்களில் மனிதவள மேம்பாட்டின் நிலை குறித்து “தமிழ்நாட்டில் மனிதவள மேம்பாட்டின் நிலை” எனும் தொடரில் எழுதப்பட்ட கட்டுரைகளில் பார்த்தோம். பாகம் 1, பாகம் 2, பாகம் 3, பாகம் 4, பாகம் 5 இந்தத் தொடரில் பொருளாதார மேம்பாட்டில் தமிழ்நாடு சந்திக்கும் சவால்களைப் பற்றி சுருக்கமாகப் பார்ப்போம்.

தமிழக மாவட்டங்களிடையே மனிதவள மேம்பாட்டில் பெரும் இடைவெளிகள், ஏற்றத்தாழ்வுகள் இருக்கின்றன. தமிழ்நாடு மனிதவள மேம்பாட்டு அறிக்கை 2003, 2017 இரண்டிலும் உள்ள பின்தங்கியுள்ள மாவட்டங்களின் பட்டியலில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டுவிடவில்லை என்பது தெரியவருகிறது. ஏற்கெனவே சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் மாவட்டங்களே மேலும் வளங்களைப் பெருக்கிக்கொண்டுள்ளன. ஆனால், காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்கள் தங்களுடைய பின்தங்கிய நிலையிலிருந்து ஓரளவுக்கு முன்னேற்றம் கண்டுள்ளன. இம்மூன்று மாவட்டங்களிலும் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களுக்கு ஒரு முக்கியக் காரணம், அப்பகுதிகளில் தொடங்கப்பட்டிருக்கும் தொழிற்சாலைகளும், தொழிற்பேட்டைகளும்தான்.

சென்னை மாநகரின் புறநகர்ப்பகுதி விரிவடைந்து கொண்டே போகிறது. அதைச்சுற்றியுள்ள காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள், தொழில்மயம் மற்றும் நகரமயமாதலின் பலன்கள், பாதகங்கள் இரண்டையும் அனுபவிக்கின்றன. பெங்களூருக்கு அருகில் இருப்பதால் கிருஷ்ணகிரி மாவட்டத்தின் சில பகுதிகளும் நல்ல பொருளாதார மாற்றங்கள் கண்டுள்ளன. இந்த மாற்றங்கள் மக்களின் வருமானம், வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் அதே நேரத்தில், சுற்றுச்சூழலையும் பாதிக்கின்றன.

இந்தியாவிலேயே அதிக அளவில் நகரமயமான மாநிலம் தமிழ்நாடுதான். 2011 சமூக-பொருளாதார மற்றும் சாதி மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி (Socio-Economic and Caste Census 2011) தமிழ்நாட்டில் 42 விழுக்காடு குடும்பங்கள் நகர்ப்பகுதியில் வாழ்கின்றனர். அதிக எண்ணிக்கையில் தொழிற்சாலைகளும் (37,220)

தமிழ்நாட்டில்தான் உள்ளன. மேலும் தமிழ்நாடு, புலம்பெயர்ந்து வருபவர்களின் புகலிடமாக மாறிவருவதையும் பொருளாதார ஆய்வறிக்கை 2016-17 பதிவு செய்துள்ளது. புலம்பெயர்ந்து இங்கு வருபவர்களில் பெரும்பாலானோர் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் கோவை, ஈரோடு ஆகிய மாவட்டங்களில்தான் சென்று குவிகின்றனர் என்பதையும் அவ்வறிக்கை நமக்குத் தெரிவிக்கிறது.

ஒரு மாநிலத்துக்குள் புலம்பெயர்வு என்பது தொழில் மயமாதல், நகரமயமாதலின் மற்றும் பொருளாதார வளர்ச்சியின் பிரதிபலிப்பு என்றாகும்போது, அந்த மாநிலத்தின் உட்கட்டமைப்பு வசதிகள் மீது சுமை அதிகரிக்கிறது; அரசின் பொறுப்பும் கூடுகிறது. பின்தங்கியிருந்த சில மாவட்டங்களில் நேர்மறையான பொருளாதார மாற்றங்கள் ஏற்பட்டுவரும் அதேவேளையில், அவற்றின் விளைவாகப் புதுப்புது சவால்களும் உருவெடுத்து வருவதையும் நாம் கவனிக்க வேண்டும்.

வியாழன், 25 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon