மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 25 அக் 2020

அரசியலிலிருந்து விலகத் தயார்: திருமாவளவன்

அரசியலிலிருந்து விலகத் தயார்: திருமாவளவன்

வன்னியர் மற்றும் பட்டியலின மக்கள் நல்லிணக்கத்தோடு வாழ அரசியலிலிருந்து விலகத் தயாராக இருப்பதாக விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

பொன்பரப்பியில் நடைபெற்ற வன்முறை சம்பவத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் நேற்று (ஏப்ரல் 24) சென்னை வள்ளுவர் கோட்டத்தில், “பொன்பரப்பியில் ஜனநாயக படுகொலை” என்ற தலைப்பில் விசிக தலைவர் திருமாவளவன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், சிபிஐ மாநிலச் செயலாளர் முத்தரசன், திராவிட இயக்கத் தமிழர் பேரவைத் தலைவர் சுப.வீரபாண்டியன், இயக்குநர் கரு.பழனியப்பன் ஆகியோர் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினர்.

பொன்பரப்பியில் பாதிக்கப்பட்ட பட்டியலின மக்களுக்கு நீதி வழங்க கோரியும், மறு வாக்குப்பதிவு நடத்தப்பட வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் பேசிய தலைவர்கள் வலியுறுத்தினர்.

இறுதியாகப் பேசிய திருமாவளவன், “பாஜகவிடமிருந்து இந்துக்களைக் காப்பாற்றிட வேண்டும். பாமகவிடமிருந்து அப்பாவி வன்னிய சமுதாய மக்களைக் காப்பாற்றிட வேண்டும். இப்படிக் கூறுவதால் நான் இந்துக்கள் மீதும், வன்னியர்கள் மீதும் திடீர் கரிசனம் காட்டுகிறேன் என்று எண்ணிவிடக் கூடாது. இந்து சமூகத்தின் ஒரே எதிரி பாஜக. அதேபோல வன்னியர் சமூகத்தின் ஒரே எதிரி பாமகதான். இதை இந்துக்களும் வன்னியர்களும் புரிந்துகொள்ள வேண்டும்” என்றவர், தன்னை வன்னிய சமூகத்துக்கு எதிரி என்று காட்ட முயல்கிறார்கள் என்றும், ஆனால் தான் வன்னியர் மட்டுமல்ல; எந்த சமூகத்துக்கும் எதிரியல்ல என்றும் தெரிவித்தார்.

தொடர்ந்து, “எந்தக் காலத்திலும் எந்த சமூகத்துப் பெண்களையும் நான் இழிவுபடுத்திப் பேசியதில்லை. நான் பேசாததையெல்லாம் பேசியதாகச் சொல்கிறார்கள். நான் எந்த சமூகத்தையும் வெறுப்பவன் அல்ல. ஆனால், ஜீன்ஸ் பேண்ட், கூலிங் கிளாஸ் போட்டுவந்தால் பெண்கள் பின்னால் சென்றுவிடுகிறார்கள் என்று சொல்லி சொந்த சாதி பெண்களையே இழிவுபடுத்தியவர்கள் அவர்கள்” என்றும் விமர்சித்தார்.

இறுதியாக, “நான் அரசியலிலிருந்து விலகினால் வன்னியர் சமூகம் தலை நிமிரும் என்றால், விலகத் தயாராக இருக்கிறேன். ஆனால், தலித் வெறுப்பு என்ற அடிப்படையில் என்னை பலிகடாவாக்கி உங்கள் மகனை (அன்புமணி ராமதாஸ்) முதல்வராக்க ஆசைப்படாதீர்கள். காடு கழனிகளில் வேலை செய்கிற மக்கள் ஒற்றுமையாக வாழட்டும். எனக்குத் தேவை உழைக்கும் மக்களின் ஒற்றுமைதான். அவர்களின் சமூக நல்லிணக்கம்தான். உழைக்கும் மக்கள் நிம்மதியாக இருக்க என்னுடைய அரசியல் வாழ்க்கையை விடவும் தயார்” என்றும் பேசினார்.

வியாழன், 25 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon