மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 6 ஜுன் 2020

டிஜிட்டல் திண்ணை: அதிமுக நடத்திய எக்சிட் போல்!

டிஜிட்டல் திண்ணை: அதிமுக  நடத்திய எக்சிட் போல்!

மொபைல் டேட்டா ஆன் செய்யப்பட்டது. கொஞ்ச நேரத்தில் வாட்ஸ் அப்பில் இருந்து தடதடவெனெ மெசேஜ்கள் குவிந்தன. அதில் ஒன்று மிக முக்கியமான மெசேஜ்,.

“அதிமுகவின் கொள்கைப் பரப்புச் செயலாளரும், கருர் மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளருமான தம்பிதுரை தேர்தல் பணிகள் முடிந்து ரெஃப்ரெஷ் செய்வதற்காக கோவையில் ஆயுர்வேத சிகிச்சை எடுத்துவருகிறார். அவர் மூலமாக இன்று ஒரு முக்கியமான ஃபைல் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் கொண்டு சேர்க்கப்பட்டிருக்கிறது.

மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்கள் முடியும் வரை எக்சிட் போல் எனப்படும் வாக்குக் கணிப்புகளை வெளியிடக் கூடாது என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருக்கிறது. ஆனால் எக்சிட் போல் நடத்தக் கூடாது என்று சொல்லவில்லை. இதன் அடிப்படையில் பல்வேறு கட்சிகள் தேர்தல் நடந்த அன்று எக்சிட் போல் நடத்தி ரிசல்ட் தருமாறு அந்தத் துறையில் நிபுணத்துவம் பெற்ற நிறுவனங்களைக் கேட்டுக்கொண்டிருந்தன. அதன் முடிவுகள் அந்தந்தக் கட்சிகளுக்கு மட்டுமே கொடுக்கப்படும்.

இதேபோல அதிமுகவும் வாக்குப் பதிவு தினத்தன்று மும்பை நிறுவனம் ஒன்றின் மூலமாக எக்சிட் போல் நடத்தியிருக்கிறது. தமிழகம் முழுதும் இதற்காக 850 பேரை களமிறக்கிய அந்த நிறுவனம் ஒவ்வொரு சட்டமன்ற வாரியாக வாக்களித்துவிட்டு வருபவர்களிடம் பேசி எக்சிட் போல் நடத்தியிருக்கிறது. தமிழகத்தில் இருந்து எக்சிட் போல் மாதிரிகள் மும்பைக்கு அனுப்பப்பட்டு, ஒரு வார காலம் அங்கே ஆய்வுக்குப் பின் வாக்குக் கணிப்பு முடிவுகள் தயாராகியிருக்கின்றன. இந்த மொத்தப் பணிகளுக்காகவும் அந்த நிறுவனத்துக்கு அதிமுக செலுத்திய கட்டணம் 80 லட்சம் ரூபாயாம். இந்த நிறுவனத்தை முதல்வருக்கு தம்பிதுரை பரிந்துரை செய்திருக்கிறார். எக்சிட் போல் பணிகளுக்காக தம்பிதுரை மூலமாகவே பணம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதனால் எக்சிட் போல் ரிசல்ட்டை வெகு பத்திரமாக தம்பிதுரையிடம் சேர்த்திருக்கிறது அந்த நிறுவனம்.

ஓட்டுப் போட்டு வரும் வாக்காளர்களிடம் பேசி அவர்கள் சொன்ன காரண காரியங்களோடு விரிவான அறிக்கை போலவே எக்சிட் போல் ரிப்போர்ட் கொடுக்கப்பட்டிருந்ததாம். இதைத்தான் இன்று தன் உதவியாளர் மூலம் முதல்வரிடம் சேர்த்திருக்கிறார் தம்பிதுரை.

அந்த ரகசிய எக்சிட் போல் ரிசல்ட்டில் அதில் 14 முதல் 17 மக்களவை இடங்களை அதிமுக கூட்டணி கைப்பற்ற வாய்ப்பிருப்பதாக சொல்லப்பட்டிருக்கிறது. அது எந்தெந்த இடங்கள் என்பதும் தெரிவிக்கபட்டிருந்தது. அதன்படி அதிமுக அணி வெற்றிபெற வாய்ப்புள்ள தொகுதிகளில் ஓ.பன்னீரின் மகன் ரவீந்திரநாத் போட்டியிடும் தேனி தொகுதி இடம்பெறவில்லையாம். தம்பிதுரை ஜெயிப்பார் என்றும் அந்த எக்சிட் போல் ரிசல்ட்டில் வந்திருந்ததாம்.

எக்சிட் போல் அறிக்கையை முழுதாகப் பார்த்த எடப்பாடி பழனிசாமி இதுபற்றி தம்பிதுரையிடம் போனில் பேசியிருக்கிறார். சிரித்துக்கொண்டே, ‘நம்புற மாதிரியே இல்லையே?’ என்றாராம் எடப்பாடி. இதைக் கேட்டதும் தம்பிதுரை, ‘இதில் எதை உங்களால நம்ப முடியலை? இந்தக் கணக்கை விட குறைச்சலா வரும்னு நினைக்கிறீங்களா, இதை விட அதிகமா வரும்னு எதிர்பார்க்குறீங்களா?’ என்று கேட்டிருக்கிறார். அதற்கும் பதில் சொல்லாமல் எடப்பாடி பழனிசாமி சிரித்தபடியே போனை வைத்திருக்கிறார். அதிமுகவின் டாப் லெவலில் இன்று இந்த எக்சிட் போல் பற்றிதான் பேச்சு. அதுவும் குறிப்பாக ஓ.பன்னீரின் மகன் பற்றிய ரிசல்ட்தான் அதில் முக்கிய இடம்பிடித்திருக்கிறது.

தம்பிதுரை ஏற்பாட்டில் நடந்த இந்த எக்சிட் போல் நிறுவனம் மக்களவைத் தொகுதிகளுக்கு மட்டுமே நடத்தியது. சட்டமன்ற இடைத்தேர்தல்களைப் பற்றி எக்சிட் போல் நடத்தவில்லை. அதேநேரம் மக்களவைத் தொகுதிகளில் அவர்கள் எக்சிட் போல் நடத்தும்போது சட்டமன்றத் தொகுதி வாரியாகவே நடத்தியதால்... இடைத்தேர்தல் நடந்த 18 தொகுதி வாக்காளர்களின் எம்.பி. தேர்தல் ரியாக்‌ஷன் எப்படி இருக்கிறது என்பதைப் பொறுத்து சட்டமன்ற இடைத்தேர்தலுக்கும் அதை பொருத்திப் பார்த்து ஒரு ரிப்போர்ட் தருமாறு கேட்டிருக்கிறாராம் எடப்பாடி” என்று முடிந்தது அந்த வாட்ஸ் அப் மெசேஜ்.

தலை சுற்றும் ஸ்மைலியோடு அதைப் பகிர்ந்துகொண்ட ஃபேஸ்புக் தனது சுவரில் ஒரு தகவலை டைப்பிங் செய்ய ஆரம்பித்தது.

“சில நாட்களுக்கு முன் சென்னை விமான நிலையத்தில் டெல்லியிலிருந்து தனி விமானத்தில் வந்திறங்கினார் ஒரு விவிஐபி. அவர் வந்திறங்கிய விமானத்தில் இருந்து டிராலி சூட்கேஸ் போல வடிவம் கொண்ட சுமார் 30 பெரும் பெரும் சூட்கேஸ்கள் விமான நிலைய ஊழியர்களால் இறக்கி வைக்கப்பட்டன. பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக அந்த விவிஐபி தனி காரில் புறப்பட்டுப் போக அந்த முப்பது சூட்கேஸ்களும் சில இன்னோவா கார்கள் மூலம் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு கிண்டியைக் கடந்து சென்றன. அந்த சூட்கேஸ்களில் என்ன இருக்குமோ என்று விமான நிலைய அதிகாரிகளிடையே பட்டிமன்றமே நடந்துகொண்டிருக்கிறது” என்று முடிந்த அந்த மெசேஜை போஸ்ட் செய்துவிட்டு சைன் அவுட் ஆனது ஃபேஸ்புக்.

வியாழன், 25 ஏப் 2019

அடுத்ததுchevronRight icon