மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 23 ஜன 2021

சந்தேகத்துக்குரிய 9 பேர்: படங்களை வெளியிட்ட இலங்கை

சந்தேகத்துக்குரிய 9 பேர்: படங்களை வெளியிட்ட இலங்கைவெற்றிநடை போடும் தமிழகம்

இலங்கை தொடர் குண்டுவெடிப்பில் தொடர்புடைய பயங்கரவாதிகள் ஒன்பது பேரின் புகைப்படங்களை இன்று (ஏப்ரல் 25) வெளியிட்டுள்ளது கொழும்பு போலீஸ்.

ஈஸ்டர் ஞாயிறு தினத்தன்று கொழும்பின் தேவாலயங்கள், நட்சத்திர ஹோட்டல்களில் நடந்த குண்டு வெடிப்புகளில் 350க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட நிலையில் இன்று வரை இலங்கை முழுதும் பதற்றம் நிலவி வருகிறது. நாடு முழுவதும் அவசர நிலை பிரகடனம் நீட்டிக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் போலீசாரும் ராணுவத்தினரும் யாரை வேண்டுமானாலும் சந்தேகத்தின்பால் பிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாமலேயே கைது செய்து விசாரிக்க சிறப்பு அதிகாரம் அளிக்கப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில் தொடர் வேட்டைகளில் ஈடுபட்டிருக்கும் இலங்கை காவல்துறை இன்று மாலை 6 மணியளவில் இலங்கை குண்டுவெடிப்புகளில் தொடர்புடையோர் என ஒன்பது பெயர்களின் புகைப்படங்களை பெயர்களோடு வெளியிட்டிருக்கிறது. சிங்கள மொழியில் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பில் ஒன்பது பேரில் மூவர் பெண்கள் ஆவார். இவர்களைப் பற்றி தகவல் அறிந்தால் 0718591771, 0112422176 , 0112395606 ஆகிய தொலைபேசி எண்களுக்கு தெரிவிக்குமாறு இலங்கை காவல்துறை கேட்டுக்கொண்டிருக்கிறது. இந்தப் படங்கள் இலங்கையின் பொது இடங்களில் ஒட்டப்பட்டு வருகின்றன. சமூக தளங்களிலும் பரவி வருகின்றன.

இதற்கிடையே இலங்கையின் முக்கியமான முஸ்லிம் அமைப்பான ‘அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா ’ அமைப்பின் நிர்வாகிகள் இன்று இன்று கொழும்பில் செய்தியாளர்களை சந்தித்தனர்.

“இலங்கையில் கொடூரத் தாக்குதல்களில் ஈடுபட்ட தற்கொலை வெடிகுண்டுதாரிகளின் உடல்களை இலங்கை முஸ்லிம்கள் ஒரு போதும் ஏற்க மாட்டோம். இலங்கையிலுள்ள எந்த மசூதிகளிலும் அவர்களது உடல்களை அடக்கம் செய்ய அனுமதிக்க மாட்டோம். காட்டுமிராண்டித் தனமான கொடூரமான தாக்குதலை நடத்திய அவர்களை நாங்கள் முஸ்லிம்களாகவே மதிக்கமாட்டோம்” என்று அறிவித்துள்ளனர்.

வியாழன், 25 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon