மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 25 செப் 2020

புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு 41 தீவிரவாதிகள் பலி!

புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு 41 தீவிரவாதிகள் பலி!

புல்வாமா தாக்குதலில் மத்திய ரிசர்வ் படையைச் சேர்ந்த 40 வீரர்கள் பலியானதையடுத்து, ஜம்மு & காஷ்மீரில் இதுவரையில் 41 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர் என ஜம்மு & காஷ்மீர் டிஜிபி தில்பக் சிங் கூறியிருக்கிறார்.

காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் இந்த ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி துணை ராணுவ வீரர்கள் பயணம் செய்த வாகனத்தைக் குறிவைத்து பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது என்ற பயங்கரவாத அமைப்பினர் நடத்திய தற்கொலைப் படைத்தாக்குதலில் 40 இந்தியத் துணை ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவத்தை தொடர்ந்து புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடியாக இந்திய விமானப்படை வீரர்கள், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் நுழைந்து பயங்கரவாதிகளின் முகாம்களை குறிவைத்து தாக்கினர்..

அதேபோல காஷ்மீரில் பதுங்கியிருந்த ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகளை தேடி அழிக்கும் பணியிலும் இந்திய பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர். இந்த ஆண்டில் இதுவரையில் கிட்டத்தட்ட 70 தீவிரவாதிகள் காஷ்மீரில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாகவும், அதில் புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு 41 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாகவும் லெப்டினென்ட் ஜெனரல் தில்லோன் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் நேற்று (ஏப்ரல் 24) செய்தியாளர்களிடம் பேசுகையில், ”இந்தாண்டு இதுவரையில் 69 தீவிரவாதிகளைக் கொன்றுள்ளோம், 12 பேரை கைது செய்துள்ளோம். புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு மட்டும் 41 தீவிரவாதிகளைக் கொன்றுள்ளோம். இந்த 41 தீவிரவாதிகளில் 25 பேர் ஜெய்ஷ் இ முகமது அமைப்பைச் சேர்ந்தவர்கள். அந்த அமைப்பைச் சேர்ந்த 25 பேரில் 13 பேர் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள். இவர்கள் 13 பேரும் A+ வகை தீவிரவாதிகள்” என்றார்.

மேலும், “தீவிரவாதிகளால் முன்பு போல சுதந்திரமாக இனி இருக்க முடியாது. இனியும் தீவிரவாதத்தை வளரவிடமாட்டோம். நாங்கள் எங்கள் முழு சக்தியைக் கொண்டு தீவிரவாதத்தை அடக்குவோம். உள்ளூர் தீவிரவாதிகள் தாங்களாக முன்வந்து சரணடையுங்கள். புல்வாமா தாக்குதலை நடத்திய ஜெய்ஷ் இ முகமது அமைப்பிற்கு நான் தான் பொறுப்பு என யாரும் இதுவரை முன்வரவில்லை” என்றும் தில்லோன் கூறினார்.

ஜம்மு & காஷ்மீர் டிஜிபி தில்பக் சிங் கூறுகையில், “நாங்கள் 2018ல் மட்டும் 272 தீவிரவாதிகளைக் கொன்றுள்ளோம். இது நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் விளைவாக இளைஞர்கள் தீவிரவாதப் பாதையில் செல்வது முன்னெப்போதும் இல்லாத அளவிற்குக் குறைந்துள்ளது. தீவிரவாதத்தை ஒழிப்பது எங்கள் நோக்கமாக இருந்தாலும், நடந்து கொண்டிருக்கும் மக்களவைத் தேர்தல் அமைதியாகவும் சுமுகமாகவும் நடத்த வேண்டி சில இடங்களில் தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கையை நிறுத்தியுள்ளோம். நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு காஷ்மீரில் அமைதியாக நடந்து வருகிறது” என்றார்.

வியாழன், 25 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon