மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 23 ஜன 2021

குழந்தை விற்பனை ஆடியோ:செவிலியர் கைது!

குழந்தை விற்பனை ஆடியோ:செவிலியர் கைது!வெற்றிநடை போடும் தமிழகம்

ராசிபுரத்தில் குழந்தைகள் விற்பனை செய்வது தொடர்பான ஆடியோ வெளியாகி தமிழக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் உத்தரவிட்டிருக்கிறார்.

இன்று (ஏப்ரல் 25) காலை முதல் இணையத்தில் குழந்தை விற்பனை தொடர்பான ஆடியோ ஒன்று வெளியாகி வருகிறது. அதில், செவிலியர் பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றதாக தெரிவிக்கும் அப்பெண், கடவுள் புண்ணியத்தில் 30 ஆண்டுகளாக எந்த பிரச்சனையும் இல்லாமல் குழந்தை விற்பனை செய்வதாக கூறுகிறார்.

ஆண் குழந்தைக்கு ஒரு விலையும், பெண் குழந்தைக்கு ஒரு விலையும் நிர்ணயிக்கப்படும் என்று தெரிவிக்கும் அவர், ஆண் குழந்தையாகவும் வெண்மை நிறத்தில் 3 கிலோ எடையுடனும் இருந்தால் குறைந்தபட்சம் 4 லட்சம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாகவும், பெண் குழந்தை என்றால் 3 லட்சம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படும் என்றும் சொல்கிறார்.

இதுமட்டுமின்றி குழந்தை வேண்டுமென்றால் தன் வீட்டுக்கு வந்து பணம் கொடுத்தோ அல்லது அவரது வங்கிக் கணக்கில் செலுத்தியோ முன்பதிவு செய்யலாம் என்றும் இதற்காக முதல் தவணையாக ரூ.30 ஆயிரம் கொடுக்க வேண்டும் என்றும் மீத பணத்தைக் குழந்தையை எடுத்துச்செல்லும் போது கொடுங்கள் என்கிறார்.

சட்டப்படி தத்து எடுக்க பல்வேறு கட்டுப்பாடுகள் இருப்பதாகக் கூறும் அவர், குழந்தைக்குப் பிறப்பு சான்றிதழ் வேண்டும் என்றால் ரூ. 70,000 கொடுத்தால் வாங்கித் தரப்படும் என்றும் கூறுகிறார். குழந்தையை எடுத்துச் சென்றால் அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் குழந்தை எப்படி வந்தது என்று கேட்பார்களா இதனால் எதாவது பிரச்சனை ஏற்படுமா என்றும் முன்னெச்சரிக்கையாகக் கேட்டுக்கொள்கிறார்.

இந்த ஆடியோவில் பேசுவது ராசிபுரத்தைச் சேர்ந்த அமுதா என்பது தெரியவந்திருக்கிறது. இவர் ராசிபுரம் அரசு மருத்துவமனையில் 10ஆண்டுகளாகச் செவிலியராக பணியாற்றியதாகவும், 2ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்றதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக ராசிபுரம் மகளிர் காவல் நிலைய போலீசார் அமுதாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவரிடம் சில வாக்குமூலங்கள் பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. பல மணி நேரம் நடைபெற்ற விசாரணையைத் தொடர்ந்து அமுதா அளித்த வாக்குமூலத்தின், அடிப்படையில் அவரது கணவர் ரவிச்சந்திரனும் கைது செய்யப்பட்டிருக்கிறார். எனினும் முழுமையான விசாரணைக்கு பிறகே உண்மையான விவரங்கள் குறித்துத் தெரிய வரும் என்று காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆடியோவில் குழந்தையை எடுத்து வந்து தருவதாக அந்த பெண் கூறும் நிலையில், எங்கிருந்து குழந்தைகள் எடுத்து வரப்படுகிறது என்பது குறித்துத் தெரிவிக்கப்படவில்லை. எனவே குழந்தைகள் எங்கிருந்து எடுத்து வரப்படுகிறது? பிறப்பு சான்றிதழ்கள் எப்படிப் பெறப்படுகிறது? என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷும் உத்தரவிட்டிருக்கிறார்.

இதற்கிடையே இந்த செவிலியருக்கு பின்னணியில் ஒரு கும்பல் இருப்பதாகக் கூறப்படுகிறது. வெளி மாநிலங்களில் இருந்தும் தொண்டு நிறுவனங்கள் மூலமாகவும் குழந்தைகள் இருக்கும் இடங்களையும், குழந்தை தேவைப்படும் தம்பதிகளையும் தெரிந்துகொண்டு விற்பனை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

வியாழன், 25 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon