மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 23 ஜன 2021

வாரணாசி: மோடி பேரணியில் ஓ.பன்னீர்செல்வம்

வாரணாசி: மோடி பேரணியில் ஓ.பன்னீர்செல்வம்வெற்றிநடை போடும் தமிழகம்

வாரணாசியில் இன்று நடைபெற்ற பிரமாண்டப் பேரணியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். அதில் தமிழக துணை முதல்வர் பன்னீர்செல்வமும் கலந்துகொண்டார்.

வரும் மக்களவைத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி, மீண்டும் உத்தர பிரதேசம் மாநிலம் வாரணாசி தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் ராகுல் சகோதரி பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால் அஜய் ராய் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். பிரதமர் மோடி நாளை தனது வேட்புமனு தாக்கல் செய்ய இருப்பதையடுத்து, இன்று (ஏப்ரல் 25) அவர் கலந்துகொள்ளும் பிரமாண்டப் பேரணிக்கு உத்தர பிரதேச பாஜகவினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

பிகார் மாநிலத்தில் நடந்த பிரச்சாரப் பொதுக் கூட்டத்தை முடித்துக்கொண்டு அங்கிருந்து வாரணாசி சென்ற பிரதமர் நரேந்திர மோடி, பேரணியில் கலந்துகொண்டார். பனாரஸ் இந்து பல்கலைக் கழகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த மதன் மோகன் மாளவியாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பேரணியைத் தொடங்கிய மோடி, வாரணாசி சாலைகளில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்களிடம், திறந்த வாகனத்தில் நின்றபடி சென்று வாக்கு சேகரித்தார்.

அவருக்கு பின்னால் உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட தலைவர்களின் கார்கள் அணிவகுத்துச் சென்றன. பிரதமரின் காரை நோக்கி பூக்களை தூவியும் மோடி, மோடி என்று முழக்கம் எழுப்பியும் பாஜகவினர் வரவேற்றனர். இந்தப் பேரணியில் தமிழகத்திலிருந்து அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் தனது மகன் ரவீந்திர நாத்துடன் கலந்துகொண்டுள்ளார். பேரணி முடித்து கங்கை கரையில் நடைபெறும் பூஜைக்கு பிரதமர் நரேந்திர மோடி வரவுள்ள நிலையில், அதிலும் பன்னீர்செல்வம் கலந்துகொள்ளவுள்ளார்.

பேரணியானது லங்கா, கோடோலியா வழியாக சுமார் 6 கி.மீ தூரம் வரை பயணித்து தஷ்வமேத்தில் முடிகிறது. இதனைத் தொடர்ந்து காசி விஸ்வநாதர் ஆலயத்துக்குச் சென்று வழிபாடு நடத்தும் மோடி, இரவு டே பாரீஸ் விடுதியில் தங்குகிறார். அங்கு வாரணாசியின் செல்வாக்கு மிக்க 3000 பிரமுகர்களை சந்தித்து ஆதரவு கோருகிறார்.

நாளை காலை காலபைரவர் கோயிலுக்குச் சென்று வழிபாடு நடத்தும் மோடி, பாஜகவின் பூத் கமிட்டி ஏஜெண்டுகள், நிர்வாகிகளிடம் தேர்தலில் வெற்றிபெறுவது குறித்த அறிவுரைகளை வழங்கவுள்ளார். அதனைத் தொடர்ந்து காலை 11.30 மணிக்கு வாரணாசி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்புமனுவைத் தாக்கல் செய்யவுள்ளார். இந்நிகழ்வின்போது தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வியாழன், 25 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon