மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 25 செப் 2020

பொன்பரப்பி தாக்குதல் கண்டனத்துக்குரியது: வேல்முருகன்

பொன்பரப்பி தாக்குதல் கண்டனத்துக்குரியது: வேல்முருகன்

பொன்பரப்பியில் பட்டியலின மக்களின் வீடுகளில் தாக்குதல் நடத்தப்பட்டது கண்டனத்துக்குரியது என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவு முடிந்த நிலையில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் கூட்டணியின் தலைவரான ஸ்டாலினை அடுத்தடுத்து சந்தித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன் இன்று (ஏப்ரல் 25) சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த வேல்முருகன், “மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது மக்களிடையே இருந்த ஆதரவு குறித்து ஸ்டாலினுடன் பகிர்ந்துகொண்டேன். 4 தொகுதி இடைத் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவளிப்பதாகவும், நானும் தேர்தல் பரப்புரையில் ஈடுபடுவதற்கு தயாராக உள்ளதாகவும் தெரிவித்தேன். 22 தொகுதிகளுக்கான இடைத் தேர்தலிலும் திமுக வெற்றிபெற்று ஸ்டாலின் முதல்வராகும் செய்தியை மக்கள் எங்களுக்கு வழங்குவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது” என்று தெரிவித்தார்.

அவரிடம் பொன்பரப்பி சம்பவம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. “பொன்பரப்பி சம்பவத்தில் குற்றம் இழைத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். பட்டியலின மற்றும் வன்னிய சமுதாய மக்கள் என இரு தரப்பிலும் பிரச்சினைக்குக் காரணமானவர்கள் யாரோ அவர்களை காவல் துறையினர் கண்டறிந்து சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்க வேண்டும். எங்கேயோ ஒரு சம்பவம் நடந்ததற்காக அப்பாவி பட்டியலின மக்களின் வீடுகள் தாக்கப்படுவதும், அப்பாவி வயதான பெண்களை தாக்குவதும் கண்டனத்துக்குரியது” என்று தெரிவித்துள்ளார்.

“குற்றமிழைத்தவர்கள் யார், அவர்கள் எந்தக் கட்சியை சேர்ந்தவர்கள் என்று கூறி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர, பொன்பரப்பியில் வாழும் 4,000 மக்களையும் குற்றவாளிகள் போல சித்தரிப்பது ஏற்புடையதல்ல” என்று குறிப்பிட்ட வேல்முருகன், வன்னிய சமுதாய இளைஞர்கள் அமைதிகாக்க வேண்டும். ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் புகார் தெரிவியுங்கள் அல்லது இரு சமுதாயத்தின் பெரியவர்களிடம் பேசி சாதிச் சண்டை வராத அளவு செயல்படுங்கள் என்றும் அறிவுறுத்தினார்.

கடந்த கால் நூற்றாண்டு கால வரலாற்றில் சாதிச் சண்டைகளில் ஈடுபட்டதால் வழக்குப் பதியப்பட்டதன் விளைவு பல வன்னிய இளைஞர்கள் தங்களது எதிர்காலத்தை தொலைத்துவிட்டதாகவும், அது மேலும் தொடரக்கூடாது என்பதுதான் தங்களின் எண்ணம் எனவும் இனி இதுபோன்ற சம்பவங்கள் தொடரக் கூடாது என்றும் வேல்முருகன் தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

வியாழன், 25 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon