மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 25 செப் 2020

பதவி உயர்வு வழங்கவில்லை: ராஜினாமா செய்யும் காவல் ஆய்வாளர்!

பதவி உயர்வு வழங்கவில்லை: ராஜினாமா செய்யும் காவல் ஆய்வாளர்!

மாதவரம் சட்ட ஒழுங்கு பிரிவு காவல் ஆய்வாளர் ஜவஹர் தனது பதவியை ராஜினாமா செய்யப் போவதாக அறிவித்திருக்கிறார்.

மாதவரம் சட்ட ஒழுங்கு பிரிவு காவல் ஆய்வாளராக இருக்கும் ஜவஹர் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர். 1997ல் காவல் துறையில் உதவி ஆய்வாளராக பணியில் சேர்ந்த ஜவஹர், கடந்த 10 ஆண்டுகளாகச் சென்னையில் திருவான்மியூர், ஆர்.கே.நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பணியாற்றியிருக்கிறார்.

வீரப்பனை பிடிக்கும் தனிப்படையில் பணியாற்றிய இவருக்கு 2004ஆம் ஆண்டு, இந்த தனிப்படையில் சிறப்பாகச் செயல்பட்டதாகக் கூறி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா விருதும், பதவி உயர்வு வழங்கியும் கவுரவித்தார்.

இந்நிலையில், தனக்கு அளிக்கப்பட்ட விருதையும், பதவி உயர்வையும் திரும்ப அளிக்க முடிவு செய்திருப்பதாக, ஜவஹர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டிருக்கிறார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ஜெயலலிதாவால், விருது வழங்கி பாராட்டப்பட்ட, தன்னை போன்ற காவல்துறையைச் சேர்ந்தவர்கள், அரசுத் துறையில் உள்ள சில அதிகாரிகளால், அவமானப்படுத்தப்படுவதாகக் குற்றம்சாட்டியுள்ளார். நீதிமன்ற வழக்கைச் சுட்டிக்காட்டி தனக்கு 6 ஆண்டுகளாகப் பதவி உயர்வு வழங்கவில்லை எனத் தெரிவித்துள்ள அவர் தனக்கு வழங்கப்பட்ட விருதை தற்போதைய முதல்வரிடம் ஒப்படைத்துவிட்டு தனது பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக குறிப்பிட்டிருக்கிறார். இவ்வாறு ட்விட்டரில் பதிவு செய்ததற்காக தன்னிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொள்ளவுள்ளதாக ஜவஹர் ஊடகம் ஒன்றிடம் கூறியிருக்கிறார்.

ஜவஹர், பிரபல ரவுடிகளான ஆர்.கே.நகர் பாபா சுரேஷ், மகாகவி பாரதி நகரைச் சேர்ந்த சுறா சுரேஷ், ஆகியோரை என்கவுண்டர் செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

வியாழன், 25 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon