மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 25 செப் 2020

வளர்ச்சிப் பாதையில் தென்னிந்தியக் குடியரசு!

வளர்ச்சிப் பாதையில் தென்னிந்தியக் குடியரசு!

டினா எட்வின்

ஒன்றிய அரசின் வரிவருவாய்க்கு வடமாநிலங்களை விட தென்மாநிலங்களின் பங்கு அதிகமாக இருக்கிறது. அதனால், ஒன்றியப் பகுப்பு நிதியில் (central divisible pool) இருந்து மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படவிருக்கும் வரித்தொகையின் அளவைத் தீர்மானிக்கும் சூத்திரம் தங்களை வஞ்சிப்பதாகத் தென்மாநிலங்களும், மகாராஷ்டிராவும் கருதுவதற்குப் போதிய காரணங்கள் உள்ளன. இந்திய அரசியல் சாசனத்தின் வழிகாட்டுதலின்படி அமைக்கப்படும் நிதிக்குழு (Finance Commission), ஒவ்வொரு மாநிலத்திற்கும் எவ்வளவு நிதி தேவைப்படுகிறது என்பதை அளவிடுவதற்கு, அம்மாநிலத்தின் மக்கள் தொகை, மக்கள்தொகையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், வருமான இடைவெளி, நிலப் பரப்பளவு, வனப்பகுதியின் பரப்பளவு எனும் அளவீடுகளைப் பயன்படுத்துகிறது. இவை ஒவ்வொன்றிலும் பின்தங்கிய மாநிலங்களுக்கு சாதகமாக நிதிக்குழு செயல்படுவதாகவும், குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்ததற்காகத் தாங்கள் தண்டிக்கப்படுவதாகவும் முன்னேறிய மாநிலங்கள் கருதுகின்றன.

ஒன்றிய அரசு வசூலிக்கும் வருமான வரியில் இந்த மாநிலங்களின் பங்கு என்னவென்பதைப் பார்த்தாலே நமக்கு உண்மை புலப்படும். மேலும், பல பத்தாண்டுகளாகவே, வடமாநிலங்களின் வளர்ச்சிப்பாதையைவிட, ஐந்து தென்மாநிலங்களின் வளர்ச்சிப்பாதை முற்றிலும் மாறுபட்ட ஒன்றாக இருந்துவந்துள்ளது. இதைக் கணக்கில்கொண்டால், தென்மாநிலங்கள் இணைந்து தனியொரு நாடாகவே இருக்கக்கூடும் என்றே நினைக்கத் தோன்றுகிறது. பல்வேறு சமூக மேம்பாட்டுக் குறியீடுகளில் பாராட்டுவதற்குரிய முன்னேற்றம் அடைந்திருப்பது மட்டுமின்றி, பொருளாதார ரீதியாகவும் மக்கள் செழிப்பாக இருப்பதைத் தென்மாநிலங்கள் உறுதிசெய்துள்ளன.

இந்த புள்ளிவிவரங்களைப் பாருங்கள். 2016-17 இல் தென்மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, தெலங்கானாவில் தனிநபர் வருமானம் ஆண்டிற்கு கிட்டத்தட்ட ரூ. 1,18,070 (2011-12 ஆண்டிற்கான விலைவாசியின் அடிப்படையில்). அதே ஆண்டில், உத்தரப்பிரதேசத்தின் தனிநபர் வருமானம் இதில் மூன்றில் ஒரு பங்காக ரூ. 38,965 ஆகவும், பிகாரின் தனிநபர் வருமானம் தென்மாநிலங்களின் சராசரியில் வெறும் 20 விழுக்காடாக ரூ. 25, 950 என்றும் இருந்தன.

வடமாநிலங்களைக் கேரளாவோடு மட்டும் ஒப்பிட்டுப்பார்த்தால், இந்த தனிநபர் வருமானத்தில் இருபகுதிகளுக்கிடையே உள்ள இடைவெளி மேலும் பெரிதாகத் தெரியும். பீகாரில் ஐந்து நபர்கள் கொண்ட ஒரு குடும்பத்தின் மொத்த வருமானம், கேரளாவில் தனிநபர் ஒருவரின் வருமானத்திற்கு சமமாக இருக்கிறது. 2011-12 விலைவாசியின் அடிப்படையில், 2016-17இல் கேரளாவின் தனிநபர் வருமானம் ரூ. 1,28,550. 2016-17 இல், தமிழ்நாட்டின் தனிநபர் வருமானம் ரூ.1,17,806; இது உத்தரப் பிரதேச மாநிலத்திலுள்ள மூன்று நபர்கள் கொண்ட ஒரு குடும்பத்தின் மொத்த வருமானத்திற்கு சமம்.

தென்மாநிலங்கள் மனிதவள மேம்பாட்டில் அடைந்திருக்கும் முன்னேற்றங்களை வடமாநிலங்கள் எட்டிப்பிடிக்க இன்னும் பல பத்தாண்டுகள் தேவைப்படும். சிசு இறப்பு விகிதத்தை (Infant Mortality Rate) எடுத்துக்கொள்வோம். பிறக்கும் ஆயிரம் குழந்தைகளில் ஓராண்டு கூட வாழாமல் இறந்து போகும் குழந்தைகளின் எண்ணிக்கை சிசு இறப்பு விகிதம் என்று வரையறுக்கப்படுகிறது. 2016ஆம் ஆண்டுக்கான புள்ளி விவரங்களின்படி, கேரளாவில் சிசு இறப்பு விகிதம் 10. உத்தரப் பிரதேசத்தில் சிசு இறப்பு 43 ஆகவும், மத்திய பிரதேச மாநிலத்தில் 47 ஆகவும் இருந்தது. வடமாநிலங்கள் சிசு இறப்பு விகிதத்தைக் குறைக்க எந்த முயற்சியும் எடுக்கவே இல்லை என்பதல்ல இதன் பொருள். 2000த்தில் பஞ்சாப் மாநிலத்தில் 52ஆக இருந்த சிசு இறப்பு விகிதம், 2016 இல் 21ஆகக் குறைந்துள்ளது. 2000த்தில் உத்தரப் பிரதேசத்தில் 83ஆக இருந்த சிசு இறப்பு விகிதம், 2016 இல் 43 ஆகக் குறைந்துள்ளது. இதே காலத்தில், தென்மாநிலமான ஆந்திரா பிரதேசத்தில் சிசு இறப்பு விகிதம் 65லிருந்து 34 ஆகக் குறைந்துள்ளபோதும், அம்மாநிலமும் இன்னும் வெகுதூரம் பயணிக்க வேண்டியுள்ளது.

அதேபோல், பிறக்கும் போது 1000 ஆண்களுக்கு எத்தனைப் பெண்கள் இருக்கின்றனர் எனும் பாலின விகிதம் (sex ratio at birth) எனும் அளவீட்டிலும் வடமாநிலங்களுக்கும் தென்மாநிலங்களுக்கும் உள்ள இடைவெளி தெளிவாகத் தெரிகிறது. ஆனால், வடமாநிலங்களுள் பிகார் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் மட்டும் பாலின விகிதம் குறிப்பிடும்படியாக, ஆந்திராவில் உள்ள விகிதத்திற்கு சமமாக இருக்கிறது. தாய்மார்கள் இறப்பு விகிதம், மக்கள்தொகை வளர்ச்சி விகிதம், கருவுறுதல் விகிதம், எழுத்தறிவு மற்றும் வேறுபல குறியீடுகளிலும் தென்மாநிலங்களுக்கும் வடமாநிலங்களுக்கும் பெரும் இடைவெளி உள்ளன.

நன்றி: தி இந்து பிசினஸ்லைன்

தமிழில்: நா. ரகுநாத்

வியாழன், 25 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon