மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, ஞாயிறு, 12 ஜூலை 2020

ஆசிய தடகளம்: இந்தியாவுக்கு 4ஆவது இடம்!

ஆசிய தடகளம்: இந்தியாவுக்கு 4ஆவது இடம்!

ஆசிய தடகளப் போட்டியில் இந்தியா 18 பதக்கங்களை வென்று நான்காம் இடத்தைப் பிடித்துள்ளது.

23ஆவது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி கத்தார் தலைநகர் தோகாவில் ஏப்ரல் 21ஆம் தேதி தொடங்கி நடைபெற்றுவந்தது. பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் 30 வயதான இந்திய வீராங்கனை கோமதி 2 நிமிடம் 2 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து தங்கப் பதக்கம் வென்றார். தமிழகத்தைச் சேர்ந்த கோமதிக்கு பாரட்டுகள் குவிந்துவருகிறது.

தொடரின் கடைசி நாளான நேற்றும் ஒரு தங்கப் பதக்கம் இந்தியாவுக்கு வசமானது. பெண்களுக்கான 1,500 மீட்டர் ஓட்டத்தில் இந்திய வீராங்கனை பி.யூ.சித்ரா 4 நிமிடம் 14.46 விநாடிகளில் இலக்கை கடந்து தங்கப்பதக்கத்தை வென்றார். கேரளாவைச் சேர்ந்த 23 வயதான சித்ரா ஏற்கனவே 2017ஆம் ஆண்டு போட்டியிலும் தங்கம் வென்றிருந்தார்.

1,500 மீட்டர் ஓட்டத்தில் ஆண்கள் பிரிவில் இந்திய வீரர் அஜய் குமார் சரோஜ் வெள்ளிப்பதக்கத்தை (3 நிமிடம் 43.18 வினாடி) கைப்பற்றினார்.

பெண்களுக்கான 200 மீட்டர் ஓட்டத்தில் ஒடிசாவைச் சேர்ந்த டுட்டீ சந்த் 23.24 வினாடிகளில் இலக்கை கடந்து வெண்கலப்பதக்கத்தை வென்றார்.

ஆண்கள் மற்றும் பெண்களுக்கான 4 x 400 மீட்டர் தொடர் ஓட்டம் இரண்டிலும் இந்தியாவுக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்துள்ளது. இதில் ஆண்கள் அணியில் இடம் பெற்ற 4 பேரில் தமிழக வீரர் ஆரோக்ய ராஜீவும் ஒருவர். இவரும் திருச்சியை சேர்ந்தவர்.

4 x 400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டத்தில் முகமது அனாஸ், பூவம்மா, விஸ்மயா, ஆரோக்ய ராஜீவ் ஆகியோர் அடங்கிய இந்திய அணி 3 நிமிடம் 16.47 வினாடிகளில் இலக்கை எட்டி வெள்ளிப்பதக்கத்தை பெற்றது.

4 நாள்கள் நடைபெற்ற போட்டிகளின் முடிவில் இந்தியா 3 தங்கம், 8 வெள்ளி, 7 வெண்கலம் என்று மொத்தம் 18 பதக்கங்களை குவித்து பதக்கப் பட்டியலில் 4ஆவது இடத்தை பெற்றுள்ளது. 11 தங்கம், 7 வெள்ளி, 4 வெண்கலம் வென்று பஹ்ரைன் முதலிடத்தைப் பெற்றுள்ளது. சீனா இரண்டாம் இடத்திலும், ஜப்பான் மூன்றாம் இடத்திலும் உள்ளன.

வியாழன், 25 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon