மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 21 அக் 2020

கோவை போலீசாருக்கு தொல்லை: இளைஞருக்கு சிறை!

கோவை போலீசாருக்கு தொல்லை: இளைஞருக்கு சிறை!

உங்க அக்கா, தங்கச்சியை நிர்வாணமா வீடியோ எடுத்திருந்தா நீங்க சும்மா இருப்பீங்களா என குடிபோதையில் போலீசாருக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வந்த நபரை கோவை போலீசார் கைது செய்திருக்கின்றனர்.

கோவை மாநகர் காவல் ஆணையர் அலுவலகம் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள காவல்துறை கட்டுப்பாட்டு அறைகள் மற்றும் சாய்பாபாகாலனி, கவுண்டம்பாளையம், துடியலூர் ஆகிய காவல் நிலையங்களுக்கு கடந்த ஒரு மாதமாக இரவு 11,௦௦ மணிக்கு மேல் போன் செய்யும் அந்த நபர், முதலில் அன்பாகப் பேசுவார்.

பிறகு, பொள்ளாச்சியில் பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்த விவகாரத்தில் என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? என்று கேட்பார். அல்லது, துடியலூர் அருகில் ஆறு வயது பெண் குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது குறித்தும், இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் தமிழகத்தில் வேறு எங்கும் நடக்கமால் இருக்க என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்? என்றும் கேட்பார்.

சார் அது எங்க லிமிட் இல்லை, இப்போது சிபிசிஐடி போலீசார் விசாரிக்கிறார்கள். அதனால் எங்களுக்கு அது பற்றிய தகவல்கள் எதுவும் தெரியாது என்று சொல்லும் போலீசாரிடம், உன் புள்ளையை ஒருத்தன் ஏமாத்திக் கூட்டிக்கிட்டுப் போய் நிர்வாணமா நிற்கவெச்சு வீடியோ எடுத்து வாட்ஸ் அப்பில் போட்டிருந்தால் இப்படி தான் பதில் சொல்லுவீங்களா? உங்க அக்கா, தங்கச்சிக்கு இந்த மாதிரி நடந்திருந்தால் நீங்க சிபிசிஐடி போலீசார் விசாரிக்கறாங்கன்னு சும்மா இருப்பீங்களா? என்று ஆரம்பிக்கும் அந்த நபர் அடுத்து, காவல்துறையில் உள்ள உயர் அதிகாரிகளின் பொண்டாட்டி புள்ளைகளுக்கு இப்படி நடந்தால் நீங்க என்ன செய்வீங்க? அப்போதும் இப்படித்தான் பதில் சொல்லுவீங்களா? அமைச்சர் புள்ளையை வீடியோ எடுத்திருந்தா இப்படித்தான் பேசுவீங்களா? என்று சாதாரண மனிதனான தனக்கு ஏற்படும் ஆதங்கத்தை வெளிக்காட்டும் வகையில் போலீசாரை திட்டீத் தீர்த்து வந்துள்ளார்.

இதனால் கடந்த இரண்டு வாரமாக துடியலூர், கவுண்டம்பாளையம் காவல் நிலையங்களுக்கும், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கும் இரவு 11 மணிக்கு மேல் வரும் தொலைபேசியின் மணி அடித்தாலே அதை எடுக்க போலீசார் தயங்குவர்.

செல்போன் நம்பரிலிருந்து கூப்பிடும் அந்த நபரின் நம்பரை கண்காணித்து உடனடியாக போலீசார் திருப்பிக் கூப்பிட்டாலும், மறுநாள் காலை கூப்பிட்டாலும் அந்த நம்பர் அணைத்து வைக்கப்பட்டிருக்கும். அந்த சிம்கார்டு தொடர்பான முகவரிகளும் தெளிவில்லாமல் இருந்துள்ளது.

அந்த நபருடன் பேசும்போது,இடையில் வேறு யாருக்கும் தகவல் சொல்ல முயற்சி செய்தாலோ, அல்லது ஒரு நிமிஷம் இருங்க எங்க எஸ்.ஐ. அய்யாகிட்டே கொடுக்கிறேன் என்று தொலைபேசியை வேறு ஆளுக்கு கொடுத்தாலோ தொடர்பை துண்டித்து விடும் அந்த நபரைப் பிடிக்க போலீசார் பல வகையிலும் முயற்சி செய்தும் பயனில்லாமல் போனது.

பல்வேறு செல்போன் சிம்கார்டுகளைப் பயன்படுத்தி போலீசாரை வெறுப்பேற்றி வந்த நபரை பிடிக்க கோவை மாநகர சைபர் க்ரைம் போலீசார் உதவியுடன் ஒரு தனிப்படை அமைத்துள்ளனர்.

அதன்படி காவல் கட்டுப்பாட்டு அறையிலும், இரவு நேர பணியில் இரண்டு காவலர்கள் பணியமர்த்தப்பட்டனர். ஒருவர் தொலைபேசியை கையில் எடுத்து பேசும்போது, அந்த நபர் தொடர்புக்கு வந்துள்ளார் எனத் தெரிந்தால், அருகில் இருக்கும் இன்னொரு காவலர் சைபர் க்ரைம் போலீசாருக்கு தகவல் கொடுக்கவேண்டும்.

உடனடியாக அவர் பேசிக்கொண்டுள்ள காவல் நிலைய எண்ணுக்கு எங்கிருந்து அழைப்பு வருகிறது என்பதை அவர்கள் குறிப்பிட்ட செல்பேசி சேவையை வழங்கும் நிறுவனத்தின் உதவியுடன் கண்டுபிடிக்கும் வரையிலும், காவல் நிலையத்தில் உள்ள காவலர் போனை வைக்காமலும், சந்தேகப்படும் வகையில் இல்லாமலும் பேசிக்கொண்டே இருக்கவேண்டும். அப்போதுதான் அந்த நபரை பிடிக்கமுடியும் என திட்டம் போட்டுள்ளனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் (ஏப்ரல் 23) இரவு 11.3௦ மணிக்கு அந்த நபர் சாய்பாபாகாலனி காவல் நிலையத்துக்கு தொடர்பு கொண்டு பேசினார். அங்ருந்த தலைமைக்காவலர் இதுகுறித்து பக்கத்தில் இருந்த காவலருக்கு சிக்னல் கொடுத்துள்ளார்.

உடனடியாக மாநகர சைபர் க்ரைம் போலீசாரின் உதவியுடன், அந்த நபர் எந்த பகுதியில் இருந்து பேசுகிறார் என்பது குறித்து கண்காணித்தபோது அவர், கோவை அருகே உள்ள கவுண்டம்பாளையம் மாரியம்மன் கோவில் அருகிலுள்ள ஒரு கோபுரத்தின் தொடர்பில் இருந்து பேசுவது தெரியவந்தது.

உடனே அங்கு விரைந்து சென்ற தனிப்படை போலீசார் குறிப்பட்ட அந்தப்பகுதியில் தேடிய போது யாரையும் கண்டுபிடிக்க முடியவில்லை. நேற்று காலை அந்த பகுதியில் போலீசார் விசாரணை நடத்தியபோது, இரவு நேரத்தில் கோயில் மண்டபத்தில் உட்கார்ந்து கொண்டு ஒரு நபர் தொடர்ந்து செல்போனில் பேசிக்கொண்டு இருப்பார் என்பது தெரியவந்துள்ளது.

யார் எந்த நபர் என போலீசார் விசாரித்தில், அதே பகுதியை சேர்ந்த செல்லசாமி என்பவரின் மகன் வேல்குமார் (40) என்பதும், அவர் உள்ளூரில் எலெக்ட்ரீசியனாக வேலை செய்து வருவதும் திருமணம் ஆகாத அவர் தினமும் மது குடித்துவிட்டு, தனது செல்போன் மூலம் காவல் நிலையங்களுக்கு தொடர்பு கொண்டு போலீசாரிடம் பேசியதும் தெரியவந்தது.

இதையடுத்து சாய்பாபா காலனி போலீசார் வேல்குமார் மீது, அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தல், தகாத வார்த்தைகளை பயன்படுத்தி பேசுதல், கொலை மிரட்டல் விடுத்தல் என மூன்று பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர். பின்னர் போலீசார் வேல்குமாரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

குடிப்பழக்கத்துக்கு அடிமையான வேல்குமார் தினமும் குடித்துவிட்டு வந்து போலீசாருக்கு போன் செய்து பேசுவதை வழக்கமாககொண்டுள்ளார். இதற்காக அவர் 10க்கும் மேற்பட்ட சிம்கார்டுகளை பயன்படுத்தியுள்ளார். அந்த சிம்கார்டுகளும், செல்போனும் பறிமுதல் செய்யப்பட்டு ள்ளது என போலீசார் தெரிவித்தனர்.

வியாழன், 25 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon