மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 4 டிச 2020

கொடநாடு விவகாரம்: மேத்யூவுக்கு அவகாசம்!

கொடநாடு விவகாரம்: மேத்யூவுக்கு அவகாசம்!

கொடநாடு விவகாரத்தில் முதல்வர் தொடர்ந்த வழக்கில் பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் பதிலளிக்க ஜூன் 10ஆம் தேதி வரை அவகாசம் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு பங்களாவில் 2017ஆம் ஆண்டு நடந்த கொலை மற்றும் கொள்ளை விவகாரம் தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை குற்றம்சாட்டி பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டார். அதில் கொள்ளையில் தொடர்புடைய சயன், மனோஜ் ஆகியோர் பேட்டியளித்திருந்தனர்.

இந்தக் குற்றச்சாட்டை மறுத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தன் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் உள் நோக்கத்தோடு பொய்யான குற்றச்சாட்டுகளை வெளியிட்டதாகக் கூறி, மேத்யூ சாமுவேல், சயன், மனோஜ் உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக 1 கோடியே 10 லட்சம் ரூபாய் மான நஷ்ட ஈடு கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அந்த வழக்கில் மேத்யூ சாமுவேல், சயன், மனோஜ் உள்ளிட்ட 7 பேருக்கு முதலமைச்சரை பற்றிப் பேசவும், எழுதவும் தடை விதித்த நீதிமன்றம், இதுதொடர்பாக அவர்கள் பதில் அளிக்க உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி ஆர். சுப்ரமணியன் முன்பு இன்று (ஏப்ரல் 25) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மேத்யூ சாமுவேல் தரப்பில் அவரது வழக்கறிஞர் ஆஜராகி பதில் மனு தாக்கல் செய்ய கூடுதல் கால அவகாசம் கோரினார். இதை ஏற்று ஜூன் மாதம் 10ம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய மேத்யூ சாமுவேலுக்கு அவகாசம் வழங்கிய நீதிபதி, முதல்வரை பற்றி பேசவும்,எழுதவும் ஏற்கனவே விதித்த தடையை நீட்டித்து உத்தரவிட்டார்.

வியாழன், 25 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon