மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 28 நவ 2020

விசாரணை ஆணையத்திலிருந்து என்.வி.ரமணா விலகல்!

விசாரணை ஆணையத்திலிருந்து என்.வி.ரமணா விலகல்!

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் புகார் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட 3 நீதிபதிகள் கொண்ட குழுவிலிருந்து நீதிபதி என்.வி.ரமணா விலகியுள்ளார்.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது 33 வயது பெண் ஒருவர் பாலியல் புகார் கூறியதையடுத்து, இந்தப் புகார் குறித்து விசாரிக்க மூத்த நீதிபதி எஸ்.ஏ.போப்தே தலைமையில் 3 நீதிபதிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவில் நீதிபதிகள் என்.வி.ரமணா மற்றும் இந்திரா பானர்ஜி ஆகிய இருவரும் இருந்தனர். இக்குழுவின் விசாரணை நாளை (ஏப்ரல் 26) தொடங்குகிறது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்திய பெண் விசாரணை ஆணையத்தில் நாளை நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

விசாரணை ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்தும், நீதிபதி என்.வி.ரமணா விசாரணை ஆணையத்தில் இணைக்கப்பட்டிருப்பது குறித்தும் அதிருப்தி தெரிவித்து தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது பாலியல் புகார் கூறியிருந்த பெண் விசாரணை ஆணைய நீதிபதி போப்தேவுக்கு கடிதம் அனுப்பியிருந்தார். அந்தக் கடிதத்தில், “தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு குடும்ப நண்பரைப் போல மிக நெருங்கிய நண்பர் நீதிபதி என்.வி.ரமணா. என் மீதான பாலியல் துன்புறுத்தல் குறித்து உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு நான் கடிதம் எழுதியபோது அதை நிராகரித்துப் பேசியவர் இவர்” என்று குற்றம்சாட்டியிருந்தார்.

இந்நிலையில் இந்த விசாரணை ஆணையத்திலிருந்து நீதிபதி என்.வி.ரமணா திடீரென விலகியுள்ளார். விலகியதற்கான கடிதத்தை விசாரணைக் குழுவின் தலைவர் போப்தேவிடம் அளித்துள்ளார். இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு எந்தவிதமான அடிப்படை ஆதாரமும் இல்லை என்றும் இவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து இன்றே புதிய நீதிபதி விசாரணை ஆணையத்தில் இணைக்கப்படவுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. விசாகா கமிட்டியின் வழிகாட்டுதல்கள் மற்றும் POSH சட்டத்தின்படி விசாரணைக் குழு இருக்க வேண்டுமென பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கைகள் எழுந்துவரும் நிலையில், இதனைக் கருத்தில்கொண்டு விசாரணை ஆணையம் புதுப்பிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு நபர் ஆய்வுக் குழு

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது பாலியல் புகார் தொடுத்தால் ரூ.1.50 கோடி தருவதாக சிலர் தன்னை அணுகியதாக உச்ச நீதிமன்றத்தில் சில ஆவணங்களை தாக்கல் செய்துள்ள உத்சவ் பெயின்ஸ் மனு மீதான விசாரணை நீதிபதிகள் அருண் மிஸ்ரா, ரோஹிந்தன் நாரிமன் மற்றும் தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வில் தொடர்ந்து இரண்டு நாட்களாக விசாரிக்கப்பட்டு வருகிறது. டெல்லி சிபிஐ இயக்குநர், காவல் ஆணையர் மற்றும் புலனாய்வுத் துறை இயக்குநரிடம் நேற்று நீதிபதிகள் ஆலோசனை நடத்திய நிலையில், இதுதொடர்பாக விசாரிக்க ஒரு நபர் ஆய்வுக் குழுவை இன்று நீதிபதிகள் அமைத்துள்ளனர்.

நீதிபதி பட்நாயக் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள விசாரணைக் குழுவுக்கு சிபிஐ இயக்குநர், டெல்லி காவல் ஆணையர் மற்றும் புலனாய்வுப் பிரிவு இயக்குநர் உதவ வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா மீதான முறைகேட்டையும் ஆய்வு செய்ய பட்நாயக் தலைமையில் ஆய்வுக் குழு அமைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

வியாழன், 25 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon