விமல் கதாநாயகனாக நடித்துள்ள களவாணி - 2 படத்தை அதன் முதல் பாகத்தை இயக்கிய சற்குணம் தயாரித்து இயக்கியுள்ளார். தனலட்சுமி பிக்சர்ஸ் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் இப்படத்தை 6 வார காலத்திற்கு வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தது.
இந்த வழக்கில் தனலட்சுமி பிக்சர்ஸ் எதிர்மனுதாரர்களாக சிங்காரவேலன், நடிகர் விமல், படத்தின் இயக்குநர் சற்குணம், ஜெமினி லாபரேட்டரி, கியூப் ஆகியோரை குறிப்பிட்டிருந்தது.
களவாணி - 2 படத்திற்கு தடை விதித்தது சம்பந்தமாக நீதிமன்றத்தை நாடிய இயக்குநர் சற்குணம் தனலட்சுமி பிக்சர்ஸிடம் நான் கடன் வாங்கவில்லை, எனவே இந்த நீதிமன்ற தடையாணையில் இருந்து எனது பெயரை விடுவிக்குமாறு கோரியுள்ளார்.
தடையுத்தரவு பெற்ற தனலட்சுமி பிக்சர்ஸ் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்காததால் இயக்குநர் சற்குணம் தனது சொந்த பொறுப்பில் தயாரித்ததாக கூறும் களவாணி - 2 படத்தை அவர் நேரடியாக வெளியிட தடை இல்லை என நீதிமன்றம் ஆணை பிறபித்திருக்கிறது.
அதே நேரம் தனலட்சுமி பிக்சர்ஸ் களவாணி - 2 படத்தை திரையிட பெற்ற தடையுத்தரவுபடி எதிர்மனுதாரர்களாக குறிப்பிடப்பட்ட கியூப் நிறுவனம் இப்படத்தை வெளியிட முடியாது, ஏனென்றால் இயக்குநர் சற்குணம் மட்டுமே விடுவிக்கப்பட்டிருக்கிறார் என கூறும் சிங்காரவேலன் இது வித்தியாசமான உத்தரவு என்கிறார்.
களவாணி படத்தின் காப்பிரைட் உரிமை எனக்கு சொந்தமானது, அதன் தமிழ்நாடு உரிமையை என்னிடம் வாங்கிய தனலட்சுமி பிக்சர்ஸ் படத்தை வெளியிட தடையாணை பெற தொடர்ந்த வழக்கில் இயக்குநர் என்ற முறையில் மூன்றாவது எதிர்மனுதாரராக குறிப்பிடப்பட்டார்.
ஒட்டு மொத்தமாக களவாணி -2 படத்திற்கு எதிராக விதிக்கப்பட்ட தடையாணையை நீக்க கோராமல் தனது பெயரை இதில் சேர்த்தது தவறு என சற்குணம் தரப்பு வழக்கறிஞர் வாதாடியதால் அவரது பெயர் விடுவிக்கப்பட்டுள்ளது. வழக்கின் உண்மைத்தன்மை புரியாமல் சற்குணம் செயல்பட்டிருக்கிறார். இதனால் களவாணி - 2 படத்திற்கு எதிரான நீதிமன்ற தடை நீடிக்கிறது என்கிறார் சிங்கரா வேலன்.