மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 17 ஜன 2021

ஆட்டுக் கறியில் விஷம்:50 உயிரினங்கள் பலி!

ஆட்டுக் கறியில் விஷம்:50 உயிரினங்கள் பலி!

நாய்கள் கடித்து இறந்து போன ஆட்டுக் கறியில் விஷம் கலந்து வைத்து ஐம்பது உயிரினங்கள் பலியான விவகாரத்தில் கணவன் மனைவி கைது செய்யப்பட்டுள்ளனர்.

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே உள்ள சிங்கிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் குமார் (35). கூலித்தொழிலாளி. இவருக்குச் சொந்தமான விவசாய நிலம் சிங்கிபுரம் காலனிப் பகுதியில் உள்ளது. இந்த இடத்தில் ஆடுகளை வளர்த்து வருகிறார்.

இரவு நேரத்தில் ஆடுகளைத் தோட்டத்தில் உள்ள பட்டியில் கட்டிவிட்டு வீட்டுக்கு வந்துவிடுவது வழக்கம், கடந்த சில நாட்களாக காலனிப் பகுதியில் சுற்றிக்கொண்டிருக்கும் நாய்கள் குமாரின் பட்டியிலிருந்த நான்கு ஆடுகளைக் கடித்துத் தின்று விட்டது.

இதனால் அக்கம்பக்கம் உள்ள வீட்டுக்காரர்களிடம் நாய்களை கட்டி வைக்குமாறு குமார் சொல்லியுள்ளார். அதையும், தாண்டி நேற்று இரவு மீண்டும் ஒரு ஆட்டை நாய்கள் கடித்து கொன்று பாதி ஆட்டை தின்று விட்டது.

இதனால் ஆத்திரமடைந்த குமார் நாய்கள் கொன்று தின்றுவிட்டுப் போட்டிருந்த மீத ஆட்டு கறியில் குறுணை மருந்தைக் கலந்து காலனிப் பகுதியில் வீசி உள்ளார். விஷம் கலந்த ஆட்டு இறைச்சியைச் சாப்பிட்ட வளர்ப்பு பிராணிகளான நாய், பூனை, கோழி, பன்றி மற்றும் காக்கைகள் என ஐம்பதிற்கும் மேற்பட்ட உயிரினங்கள் அந்தப் பகுதி முழுவதும் செத்து விழுந்துள்ளது.

இதனால், சிங்கிபுரம் காலனிப் பகுதியில் திடீரென பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்துத் தகவலறிந்த வாழப்பாடி போலீசார் நிகழ் விடத்துக்கு விரைந்து சென்று இறந்து போன கால்நடைகள் மற்றும் பறவைகளைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக வாழப்பாடி கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து, சிங்கிபுரம் ஊர்மக்கள் கொடுத்த புகாரின் பேரில், குமார், அவருடைய மனைவி ஆனந்தி (30), இருவரையும் கைது செய்துள்ளனர். குமாரின் வீட்டிலிருந்த குறுணை மருந்தையும் பறிமுதல் செய்து சேலத்தில் உள்ள வேதியியல் பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

வியாழன், 25 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon