மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 21 ஜன 2021

இலங்கை குண்டுவெடிப்பு: யாழ்ப்பாணத்தில் 5 பேர் கைது!

இலங்கை குண்டுவெடிப்பு: யாழ்ப்பாணத்தில் 5 பேர் கைது!வெற்றிநடை போடும் தமிழகம்

இலங்கைத் தலைநகர் கொழும்பில் இருந்து 40 கிலோ மீட்டர் தூரத்தில் இன்று காலை மீண்டும் ஒரு குண்டு வெடித்திருக்கிறது. ஆனால் அதனால் எந்த சேதமும் இல்லை என்று இலங்கை பாதுகாப்புத் துறையினர் தெரிவித்திருக்கிறார்கள்.

ஈஸ்டர் தின கொண்டாட்டங்களின் போது இலங்கைத் தலைநகர் கொழும்பில் தொடர் குண்டுவெடிப்பு நடத்தப்பட்டு சுமார் 350க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதையடுத்து கொழும்பில் ஒரு வேனில் குண்டு வெடித்தது. வெடிகுண்டினை செயலிழக்கச் செய்தபோது அது வெடித்ததாக பின்னர் அதிகாரிகள் கூறினர்.

இந்த நிலையில் இன்று (ஏப்ரல் 25) காலை கொழும்பின் கிழக்குப் பகுதியில் ஒரு குண்டு வெடித்திருக்கிறது.

காவல் துறை பேச்சாளர் ருவான் குணசேகரா இதுகுறித்து தகவல் தெரிவிக்கையில், “கொழும்பில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள புகோடா நகர நீதிமன்றத்துக்குப் பின் பக்கமுள்ள பகுதியில் இருந்து வெடித்திருக்கிறது. இன்று காலை 9.45 மணியளவில் இந்த குண்டு வெடித்திருக்கிறது. இந்த குண்டுவெடிப்பால் சேதங்கள் எதுவுமில்லை என்று முதல் கட்டத் தகவலில் தெரியவருகிறது” என்று அவர் சொல்லியிருக்கிறார். இன்று காலை இலங்கை அதிபர் சிறிசேனா அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை கூட்டிய நிலையில் இந்த குண்டு வெடித்திருக்கிறது.

இதற்கிடையில் தொடர் குண்டுவெடிப்புகள் தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் நேற்று வரை 70 க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். நாடு முழுவதும் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று காலை யாழ்ப்பாணம் போலீசார் 5 பேரை சந்தேகத்தின் அடிப்படையில் கைதுசெய்திருப்பதாக இலங்கையிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தென்னிலங்கையில் கைதுகள் நடந்துவரும் நிலையில் தமிழர்கள் பகுதியான யாழ்ப்பாணத்திலும் கைதுகள் தொடர்கின்றன. கைது செய்யப்பட்டவர்கள் தமிழர்களா அல்லது சிங்களர்களா என்ற தகவல் இதுவரை வெளியிடப்படவில்லை.

வியாழன், 25 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon