மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 16 ஜன 2021

ரஞ்சன் கோகாய் மீதான புகார்: பிற்பகலில் தீர்ப்பு!

ரஞ்சன் கோகாய் மீதான புகார்: பிற்பகலில் தீர்ப்பு!

ரஞ்சன் கோகாய் மீது பொய்யான பாலியல் குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் உத்சவ் பெயின்ஸ் ஆவணங்கள் தாக்கல் செய்த விவகாரத்தில், அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக இன்று பிற்பகல் 2 மணிக்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது பொய்யான பாலியல் புகார் அளித்தால் ரூ.1.5 கோடி அளிப்பதாக தன்னிடம் சிலர் பேரம் நடத்தியதாக உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் உத்சவ் பெயின்ஸ் சில ஆவணங்களை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். உத்சவ் பெயின்ஸ் அளித்துள்ள தகவல்களை வாக்குமூலமாகப் பதிவு செய்ய வேண்டுமென நேற்று (ஏப்ரல் 24) நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து நீதிபதிகள் அருண் மிஸ்ரா, ரோஹிந்தன் நாரிமன் மற்றும் தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று அவர் தனது வாக்குமூலத்தைத் தாக்கல் செய்தார்.

அப்போது பேசிய நீதிபதி அருண் மிஸ்ரா, “கடந்த சில ஆண்டுகளாகவே நீதித்துறை மீது இது போன்ற தாக்குதல்கள் நடந்து வருகின்றன. இது தொடர்பாகக் கடுமையான முடிவு எடுக்கும் நேரம் வந்துவிட்டது. வசதி படைத்தவர்களும், அதிகாரம் மிக்கவர்களும் நெருப்புடன் விளையாடுகிறார்கள். நீதித் துறையைக் கட்டுப்படுத்த முயல்பவர்களைக் கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும். பணம் மற்றும் அதிகாரம் படைத்தவர்கள் நீதித் துறையை ஒரு போதும் கட்டுப்படுத்த முடியாது. 3 முதல் 5 விழுக்காடு வழக்கறிஞர்கள் பெரிய வழக்குகளில் மட்டுமே ஆஜராகிறார்கள். அவர்கள் வழக்கறிஞர் சமூகத்துக்கும், நீதித் துறைக்கும் கெட்ட பெயரை உருவாக்குகிறார்கள்” என்றார்.

நீதிபதி போப்தே ஆணையம் சட்டவிரோதமானது: கண்டிக்கும் பெண் வழக்கறிஞர்கள்

ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் புகார் குறித்து விசாரணை நடத்த மூத்த நீதிபதி போப்தே தலைமையில் அமைக்கப்பட்டுள்ள விசாரணை ஆணையமானது சட்ட விரோதமானது என்று நாடு முழுவதும் உள்ள பெண் வழக்கறிஞர்கள் கண்டித்துள்ளதோடு, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தனது அலுவல்களிலிருந்து வெளியேற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். வழக்கறிஞர்கள், அறிஞர்கள், பெண்கள் குழுக்கள் மற்றும் சிவில் சமூக குழுக்களைச் சேர்ந்த 295 பெண்கள் இந்திய உச்ச நீதிமன்றத்துக்கு இவ்விவகாரம் தொடர்பாகக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.

அந்தக் கடிதத்தில், “நீதிபதி போப்தே தலைமையிலான விசாரணை ஆணையத்தில் வெளிப்புற உறுப்பினர்கள் யாரும் இல்லாதது பணியிடங்களில் பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல்கள் தடுப்பு மற்றும் நடவடிக்கைகள் சட்டத்துக்கு முற்றிலும் எதிரானதாகும். இதுதொடர்பாக சிறப்பு விசாரணை ஆணையம் அமைத்து விசாரிக்க வேண்டும். விசாரணை முடியும் வரை தலைமை நீதிபதி அரசு அலுவல்களில் ஈடுபடக் கூடாது. புகாரளித்த பெண்ணுக்கு சட்ட உதவிகள் வழங்க அனுமதிக்க வேண்டும். 90 நாட்களுக்குள் விசாரணையை முடிக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

வியாழன், 25 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon