மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 25 செப் 2020

ஓட்டப்பிடாரம் அதிமுக வேட்பாளருக்கு 'ஜெயலலிதா' எதிர்ப்பு!

ஓட்டப்பிடாரம் அதிமுக வேட்பாளருக்கு 'ஜெயலலிதா' எதிர்ப்பு!

ஓட்டப்பிடாரம் தொகுதி அதிமுக வேட்பாளரை மாற்ற வேண்டும் என்று அக்கட்சியின் பெண் நிர்வாகி ஜெயலலிதா போர்க்கொடி தூக்கியுள்ளார்.

திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம், சூலூர், அரவக்குறிச்சி ஆகிய தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் வரும் மே 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஓட்டப்பிடாரம் தொகுதியில் அதிமுக சார்பாக தூத்துக்குடி வடக்கு மாவட்டத் துணைச் செயலாளரும், அந்த தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான மோகன் போட்டியிடுகிறார். இந்த நிலையில் மோகனை வேட்பாளராக அறிவித்ததற்கு அதிமுகவின் ஓட்டப்பிடாரம் ஒன்றிய இளம்பெண்கள் பாசறை தலைவியும் வழக்கறிஞருமான ஜெயலலிதா எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியுள்ளார்.

ஓட்டப்பிடாரம் தொகுதியில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்த 28 பேர்களில் ஜெயலலிதாவும் ஒருவர். தனக்கு போட்டியிட வாய்ப்பளிக்கப்படும் என்று எதிர்பார்த்த நிலையில், நேர்காணலுக்கு அழைக்கப்பட்டும் சீட் கிடைக்காததால் தற்போது போர்க்கொடி உயர்த்தியுள்ளார்.

இதுதொடர்பாக ஜெயலலிதா நேற்று (ஏப்ரல் 24) செய்தியாளர்களிடம் கூறுகையில், “ஓட்டப்பிடாரம் தொகுதிக்கு தற்போது வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளவர், முன்பு நடைபெற்ற தேர்தல்களில் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக பணியாற்றவில்லை. தன்னைத் தவிர யாருக்கும் பதவிகள் கிடைக்கக் கூடாது என்று நினைப்பவர்” என்று விமர்சித்தார்.

ஓட்டப்பிடாரம் தொகுதியில் போட்டியிடுவதற்கு உங்களை விட தகுதியானவர் யாரும் இல்லை, இந்தமுறை உங்களுக்கு வாய்ப்பு வழங்குகிறோம் என்று கடம்பூர் ராஜு எனக்கு நம்பிக்கை தந்தார் என்ற ஜெயலலிதா, “எனது பெயர்தான் கடைசிவரை வேட்பாளர் பட்டியலில் இருந்தது என்று தலைமைக் கழகத்திலிருந்தவர்கள் மூலம் கேள்விப்பட்டேன். ஆனால் பணபலத்தின் மூலம் என்னுடைய பெயரை நீக்கிவிட்டு அவர்களுடைய பெயரைச் சேர்த்துக் கொண்டனர்” என்றும் தெரிவித்துள்ளார்.

28 பேர் விருப்ப மனு அளித்திருந்தோம். அதில் தற்போது வேட்பாளராக அறிவிக்கப்பட்டவரை விட அனைவரும் தகுதி வாய்ந்தவர்கள்தான். அவர்களில் யாராவது ஒருவரை அறிவித்தால் அவர்களுக்கு பணியாற்றி வெற்றிபெறச் செய்வோம். இவருக்காக எங்களால் பணியாற்ற முடியாது என்றும் ஜெயலலிதா தெரிவித்தார்.

முன்பு தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளராக சின்னப்பன் அறிவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுயேச்சையாக களமிறங்கினார் அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் மார்க்கண்டேயன். கடம்பூர் ராஜுதான் தனக்கு சீட் கிடைக்காமல் செய்ததாக அவர் குற்றம் சாட்டியிருந்தார். இந்த நிலையில் தற்போது தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மற்றொரு தொகுதியான ஓட்டப்பிடாரம் வேட்பாளருக்கும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

வியாழன், 25 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon