மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 25 செப் 2020

ஜெ.சொத்துகளை நிர்வகிப்பது யார்? : நீதிமன்றம் உத்தரவு!

ஜெ.சொத்துகளை நிர்வகிப்பது யார்? : நீதிமன்றம் உத்தரவு!

ஜெயலலிதாவின் சொத்துகளை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்க கோரிய வழக்கின் இறுதி விசாரணையை ஜூன் 6 ஆம் தேதிக்கு தள்ளிவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது..

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சொத்துகளை நிர்வகிக்க தனி நிர்வாகியை நியமிக்க கோரி சென்னை கே.கே.நகரை சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகி புகழேந்தி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அதில் ஜெயலலிதாவிற்கு 913 கோடிக்கு மேல் சொத்துகள் இருப்பதாகவும், இவற்றை யார் நிர்வகிக்க வேண்டும் என ஜெயலலிதா உயில் இல்லாததால், உயர்நீதிமன்றம் நிர்வாகியை நியமிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்..

ஏற்கனவே, இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் ஜெயலலிதாவின் சொத்துகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வருமான வரித்துறைக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று நீதிபதிகள் எம்.எம் சுந்தரேஷ், சரவணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, 2016 - 2017 ஆண்டுக்கான வருமான வரித்துறை கணக்குப்படி ஜெயலலிதாவிற்கு 16.37 கோடி ரூபாய் மதிப்பிலான நிலம், கார் உள்ளிட்ட சொத்துகளும், வங்கியில் 10 கோடி ரூபாய் இருப்பு இருப்பதாகவும், 1990- 91 முதல் 2011 -12 வரை 10.12 கோடி செல்வ வரி பாக்கி இருப்பதாகவும், 2005-06 முதல் 2011-12 வரை 6.62 கோடி வருமான வரி பாக்கி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஜெயலலிதாவின் போயஸ் தோட்டம் இல்லம், ஜதராபாத் வீடு உள்ளிட்ட 4 சொத்துகள் முடக்கம் செய்திருப்பதாக வருமான வரித்துறையின் துணை ஆணையர் ஷோபா அறிக்கை தாக்கல் செய்தார்.

அதேபோல, 1000 கோடி வரையிலான ஜெயலலிதாவின் சொத்துகள் தனி நபர் ஒருவரை நிர்வகிக்க கேட்க முடியாது என்று மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் இந்த மனு விசாரணைக்கு உகந்தது இல்லை என்று தனி நீதிபதி தள்ளுபடி செய்திருப்பதாக தீபக் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து இந்த வழக்கின் இறுதி விசாரணையை ஜூன் 6-ம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

வியாழன், 25 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon