மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 25 செப் 2020

மோடியை எதிர்த்து பிரியங்கா போட்டியில்லை!

மோடியை எதிர்த்து பிரியங்கா போட்டியில்லை!

வாரணாசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடியை எதிர்த்துப் போட்டியிடும் வேட்பாளரின் பெயரை காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் பிரதமர் நரேந்திர மோடியை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தியின் சகோதரி பிரியங்கா காந்தி போட்டியிடலாம் எனக் கடந்த இரு வாரமாக யூகங்கள் பரவி வந்தன. ராகுல் காந்தி அனுமதித்தால் தான் வாரணாசியில் போட்டியிடுவேன் என்று வயநாட்டில் பிரியங்கா காந்தி கூறியிருந்தார். பிரியங்கா காந்தியை வாரணாசியில் போட்டியிட வைப்பது குறித்து காங்கிரஸ் மேலிடத்தில் ஆலோசனைகள் நடந்து வருவதாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பெயர் குறிப்பிட விரும்பாத நபர் ஒருவர் என்.டி.டி.வி. ஊடகத்திடம் பேசுகையில் நேற்று (ஏப்ரல் 24) கூறியிருந்தார்.

இதனால் பிரியங்கா காந்தி வாரணாசியில் போட்டியிடுவார் என்று அக்கட்சி தொண்டர்கள் எதிர்பார்த்திருந்தனர். இந்நிலையில் வாரணாசி தொகுதியில் கடந்த முறை போட்டியிட்ட அஜய் ராய் மீண்டும் போட்டியிடுவார் என்று காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் முகுல் வஸ்னிக் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “கோரக்பூர் தொகுதியில் மதுசூதன் திவாரியும், வாரணாசி தொகுதியில் அஜய் ராயும் போட்டியிடுவார்கள்” என்று அறிவித்துள்ளார். இதனால் பிரியங்கா காந்தி மோடியை எதிர்த்து போட்டியிடவில்லை என்பது நிரூபணமாகியுள்ளது.

வாரணாசி தொகுதிக்கு ஏப்ரல் 22 முதல் 29 வரை வேட்பு மனுத்தாக்கல் நடைபெறுகிறது. கடைசி கட்டத் தேர்தல் நடக்கும் மே 19ஆம் தேதி வாரணாசிக்கு வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி வாரணாசி தொகுதியில் நாளை வேட்பு மனுத்தாக்கல் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி இன்று தனது வேட்பாளரை அறிவித்துள்ளது.

வியாழன், 25 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon