மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 22 அக் 2020

இளைய நிலா: இதுக்குப்போய் அலட்டிக்கலாமா?

இளைய நிலா: இதுக்குப்போய் அலட்டிக்கலாமா?

இளைஞர்களின் உறவுச் சிக்கல்களைத் தீர்க்க என்ன வழி? பகுதி – 45

ஆசிஃபா

“என்னால இப்போ எல்லாம் முன்னாடி மாதிரி பெய்ண்ட் பண்ண முடில அஸி. இது ஒண்ணுதான் எனக்குத் தெரியும், இதுதான் எனக்கு ஆறுதல். இதுவே இல்லன்னா நா என்ன பண்ணுவேன்? நேத்து முழுக்க கேன்வாஸ அப்டியே வெறிச்சு பாத்துட்டு இருந்தேன். கடைசி வரைக்கும் ஒரு புள்ளிகூட வைக்கல. இன்னிக்கும் அப்டித்தான் ஆச்சு. எனக்கு ஒருவேள உண்மையா பெயிண்டிங் திறமை இல்லபோல. நானா கற்பனை பண்ணிக்கிட்டேனோ என்னவோ?”

இதில் பெயிண்டிங் என்ற சொல்லை நீக்கிவிட்டு, நாம் செய்யும், நமக்குப் பிடித்த எந்த சொல்லையும் போட்டுப் பார்க்கலாம். ஏறத்தாழ பலரும் இதை ஒரு முறையாவது கடந்து வந்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். இன்று முழுவதும், என்ன எழுதுவது என்றே தெரியாமல் காலையில் இருந்து ஸ்க்ரீனைப் பார்த்துக்கொண்டிருந்தேன். ஒரு சின்ன யோசனைகூட வரவில்லை. இப்படி இருப்பது இது ஒன்றும் முதல் முறை அல்ல. இப்படிச் சிக்கிக்கொண்டிருக்கும் போதெல்லாம், எனக்கு ஏற்படும் சந்தேகம் ஒன்றுதான், “உண்மையிலேயே நமக்கு எழுத வராது போல! நாமதான் கற்பனை பண்ணிக்கிறோம்!”

சில தினங்களுக்கு முன்பு இதைப் பற்றி என் ஆசிரியர் ஒருவரிடம் பேசும்போது, “இது ரொம்ப சகஜம். நானே சில நாட்கள் இப்படி என்ன பண்றதுன்னு தெரியாம இருந்து இருக்கேன். அப்போ, நமக்கு கொஞ்சம் ஸ்பேஸ், நேரம் தேவை. அந்த சின்ன பிரேக் எடுத்துக்கிட்டா, மறுபடியும் நார்மல் மோடுக்கு வந்துருவோம். Don’t beat yourself up, Azeefa!”

இது நினைவிற்கு வந்ததும், பகிர்ந்துகொள்ளலாம் என்று தோன்றியது. உண்மையில், நாம் எல்லோருமே நம்மை அழுத்தத்திலேயே வைத்திருக்கிறோம். வேலை, வீடு, படிப்பு, கடன் அடைக்க வேண்டும் என்றோ, இந்த வருடத்திற்குள் இவ்வளவு எழுத வேண்டும் / வாசிக்க வேண்டும் என்றோ ஏதோ ஒரு குறிக்கோள் வைத்துக்கொள்வதில் தவறேதும் இல்லை. அது நம் வேலையை துரிதப்படுத்த உதவும். ஆனால், அதே குறிக்கோளுக்காகத் தொடர்ந்து மனதிற்கு அழுத்தம் கொடுப்பதுதான் சிக்கல்.

என்றோ ஒருநாள் / சில நாட்கள் வேலை செய்யப் பிடிக்கவில்லை என்றாலோ, ஐடியா வரவில்லை என்றாலோ, நம் மனநிலையைச் சிறிது நெகிழ்த்திக் கொடுப்பது நல்லது. “ஐயயோ! அவ்வளவுதான். இனி நமக்கு இது வரவே செய்யாது!” என்று பதற்றம் அடைந்து மேலும் மனநிலையைச் சிக்கலாக்கிக்கொள்ள வேண்டாமே!

அப்படி ஏதோ ஒரு வேலை செய்ய முடியவில்லையா, என்ன செய்தால் வேலை நடக்கும் என்று பார்ப்போம்; இல்லையென்றால், ‘இன்று வேறு வேலை செய்துவிட்டு, நாளை மீண்டும் இதற்கு வருவோம்’ என்று வேறு வேலைகளுக்குச் சென்றுவிடலாம். மாறாக, தொடர்ந்து அதிலேயே கவனத்தைக் குவித்து, கவலைப்பட்டு அடுத்து வரும் நாட்களில் ஒரு வேலையும் செய்ய முடியாமல் போக வேண்டாம்.

அடுத்த முறை இப்படி ஏதோ ஒரு சூழலில் வேலை செய்ய முடியாமல் சிக்கிக்கொண்டால், இதைச் சொல்லிக்கொள்ளுங்கள்: Don’t beat yourself, darling!

மறுத்தால் மாறிவிடுமா?

வியாழன், 25 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon