மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 25 செப் 2020

பொள்ளாச்சி விவகாரம்: சிபிஐக்கு நோட்டீஸ்!

பொள்ளாச்சி விவகாரம்: சிபிஐக்கு நோட்டீஸ்!

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பான வழக்குகளை விசாரிப்பது தொடர்பாகப் பதிலளிக்காதது குறித்து விளக்கம் அளிக்கும்படி, சிபிஐ இயக்குநருக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியை சேர்ந்த வழக்கறிஞர் எஸ்.வாசுகி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

அதில், பொள்ளாச்சி பாலியல் கொடுமை சம்பவம் தொடர்பான வழக்குகளில் தொடர்புடையவர்கள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பி விடாமல் இருக்க, விசாரணையைக் கண்காணிக்க உயர் நீதிமன்ற நீதிபதி, ஓய்வு பெற்ற நீதிபதி மற்றும் பெண்கள் அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் அடங்கிய குழுவை நியமிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த மனுவுக்குப் பதிலளித்து சிபிசிஐடி பெண் எஸ்.பி. தாக்கல் செய்த மனுவில், பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையிலும், அவரது சகோதரர் தாக்கப்பட்டது தொடர்பான புகாரின் அடிப்படையிலும் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் செய்ய வசதியாக தொலைபேசி எண் விளம்பரப் படுத்தப்பட்டுள்ளதாகவும், வழக்குகள் விசாரணையை சிபிஐக்கு மாற்றிய போதும், அவற்றை விசாரணைக்கு எடுத்துக் கொள்வது குறித்து சிபிஐ தரப்பிலிருந்து எந்த பதிலும் வரவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதி இளந்திரையன் முன் நேற்று விசாரணைக்கு வந்தபோது, வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றியும் இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை எனவும், எந்த புலனாய்வு அமைப்பு இந்த வழக்குகளை விசாரிக்கப் போகிறது என்ற விவரம் கூட தெரியாத அளவுக்கு நிலைமை உள்ளதாகவும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இதையடுத்து, வழக்கை சிபிஐ வசம் ஏன் ஒப்படைக்கவில்லை என, நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர், சிபிஐ தரப்பிடம் இருந்து இதுவரை எந்த பதிலும் வராததால், சிபிசிஐடி போலீசார் புலன் விசாரணையை மேற்கொண்டு, ஆதாரங்களைத் திரட்டி வருவதாகவும், சிபிஐயிடம் ஒப்படைக்கும் போது, இந்த ஆதாரங்களும். சேர்த்து ஒப்படைக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

இதுதொடர்பாக விளக்கம் அளிக்கும்படி, சிபிஐ இயக்குநர், இணை இயக்குநருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி, இந்த மனு மீதான விசாரணையை ஜூன் 6ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

வியாழன், 25 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon