மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 25 செப் 2020

அட்லி கதை திருட்டு: ஜுன் 10ஆம் தேதி வழக்கு விசாரணை!

அட்லி கதை திருட்டு: ஜுன் 10ஆம் தேதி வழக்கு விசாரணை!

இயக்குநர் அட்லி இயக்கிவரும் ‘விஜய் 63’ படத்தின் கதை திருட்டு வழக்கு விசாரணையை ஜுன் 10ஆம் தேதிக்கு நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.

மிகப் பிரம்மாண்டமான முறையில் தயாராகிவரும் புதிய படம் குறித்து அளவுக்கு அதிகமாக சர்ச்சைகள் வெளியாகிவருகிறது. கதை திருட்டு வழக்கு, துணை நடிகை மீதான அவதூறு வழக்கு, லைட்மேன் படுகாயம் என சர்ச்சைகள் ஒரு புறம், ஷாருக்கான் விஜய்க்கு வில்லனாக நடிக்கிறார்(?) என சமூக வலைதளங்களில் வெளியாகும் தகவல்கள் ஒரு புறம் என தினமும் செய்திகளில் ‘விஜய் 63’ ஹாட் டாபிக்காகி வருகிறது.

கே.பி. செல்வா எனும் குறும்பட இயக்குநர், நடிகர் விஜய் சேதுபதி நடித்த ரெக்க திரைப்படத்திலும், விஷ்ணு விஷால் நடிக்கும் புதிய படத்திலும் உதவி இயக்குநராக பணியாற்றி வருகிறார். ‘விஜய் 63’ என தற்காலிக தலைப்பிடப்பட்டிருக்கும் படத்தின் கதை மற்றும் திரைக்கதை தன்னுடையது என சில நாட்களுக்கு முன் வழக்கு தொடர்ந்துள்ளார்.

நேற்று முன் தினம் (ஏப்ரல் 23) நீதிமன்றத்துக்கு இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது, விஜய் படத்தைத் தயாரிக்கும் ஏஜிஎஸ் நிறுவன வழக்கறிஞர் ஆஜராகியிருக்கிறார். அப்போது இரு தரப்பினரின் கதைகளையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். அதற்கு ஏஜிஎஸ் வழக்கறிஞர் ஜூன் பத்தாம் தேதி வரை அவகாசம் கேட்டிருக்கிறார் . அதை ஏற்றுக்கொண்டு வழக்கைத் தள்ளி வைத்துள்ளார் நீதிபதி.

இப்பட அறிவிப்பு வந்ததும், தென்னிந்திய எழுத்தாளர்கள் சங்கத்தில் புகார் அளித்திருக்கிறார் கே.பி.செல்வா. ஆனால் அச்சங்கத்தின் விதிகளின்படி சங்க உறுப்பினராக இணைந்து ஆறுமாத காலத்துக்குப் பிறகே கதை திருட்டு புகார் அளிக்க முடியும் என்று கூறி அவரது புகாரை நிராகரித்திருக்கின்றனர். இதனால் கே.பி.செல்வா, நீதிமன்றத்தை நாடியிருக்கிறார்.

கே.பி.செல்வா இதனைப் பற்றி டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழுக்கு அளித்த பேட்டியில், “எனக்கு அட்லியை தனிப்பட்ட முறையில் தெரியாது. சினிமா வட்டத்தில் எனக்கு நெருங்கியவர் மூலம் கிடைத்த தகவலின்படி அட்லி இயக்கி வரும் கதையும் எனது கதையும் ஒரே போல் உள்ளது என அறிந்தேன். உடனே நான் அவரை சந்திக்க முயற்சி செய்தேன், ஆனால் அவரது மேனேஜர்கள் அட்லியை சந்திக்க என்னை அனுமதிக்கவில்லை. அப்போது தான் என்னை அவர்கள் தவிர்க்கிறார்கள் என புரிந்தது. நீதிமன்றத்தில் என்னுடைய கோரிக்கை என்னவெனில், அடிப்படை கதையை மட்டும் ஒப்பிடாமல் திரைக்கதை முழுவதையும் ஆராய்ந்து பார்க்க வேண்டுமென்பது தான். நான் எழுதிய 265 பக்க முழு திரைக்கதையை அட்லி பயன்படுத்தியுள்ளார் என சந்தேகிக்கிறேன், அதனால் தான் நீதிமன்றத்தை நாடியுள்ளேன்” என கூறியுள்ளார்.

வியாழன், 25 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon