மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 25 செப் 2020

ஏற்காடு மலைவாழ் மக்களின் கோரிக்கை: அரசுக்கு உத்தரவு!

ஏற்காடு மலைவாழ் மக்களின் கோரிக்கை: அரசுக்கு உத்தரவு!

ஏற்காடு மலைவாழ் மக்கள் வசிக்கும் கிராமங்களில் தார் சாலை அமைக்கக் கோரிய வழக்கில், நிலை அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் நேற்று (ஏப்ரல் 24) உத்தரவிட்டுள்ளது

ஏற்காட்டில் உள்ள நர்தன்சேடு, கும்பிடிப்பாடி போன்ற மலைக் கிராமங்களில் 200க்கும் மேற்பட்ட பழங்குடி இன குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு சாலை வசதிகள் உட்பட எந்த அடிப்படை வசதிகளும் இல்லாத நிலை இருந்து வருகிறது.

இந்த நிலையில் தார் சாலை அமைத்துத் தரக் கோரி நர்தன்சேடு, கும்பிடிப்பாடி கிராமத் தலைவர் பாலு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அதில், “ஏற்காடு பிரதான சாலையை அடையும் வகையில் தங்களுடைய மலைக் கிராமப் பகுதிகளையும் இணைத்து அத்துபாலம் முதல் செந்திட்டு வரை 22 கிமீ தொலைவுக்குச் சாலையை அமைக்க திட்டமிட்டு சாலைகள் போடப்பட்டது. ஆனால், தங்களுடைய மலைக்கிராமங்களான நர்தன்சேடு, கோட்டசேடு, கும்பிடிப்பாடி வரை தனியாருக்குச் சொந்தமான எஸ்டேட் இடங்கள் வருவதால் 2 கிமீ தூரத்துக்குத் தார் சாலைகள் அமைக்கப்படவில்லை. இதனையடுத்து மலைவாழ் கிராம மக்கள் சார்பில் தார் சாலை அமைக்க நிலம் வழங்க கோரி தனியார் எஸ்டேட் உரிமையாளர்களிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

அந்தக் கோரிக்கையை ஏற்று தனியார் எஸ்டேட் உரிமையாளர்கள் நிலம் வழங்க ஒப்புதல் அளித்தும், இதுவரை அப்பகுதியில் தார் சாலைகள் அமைக்கப்படவில்லை. இது தொடர்பாகப் பல முறை மாவட்டப் பழங்குடியின நல்வாழ்வு திட்ட அதிகாரியிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி மணிக்குமார், சுப்பிரமணிய பிரசாத் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது, அப்போது மனுதாரர் தரப்பில். “தார் சாலைகள் அமைக்கப்படாத காரணத்தால், அவசர மருத்துவ உதவிகளைப் பெற ஏற்காட்டுக்குச் செல்ல முடியாத நிலை உள்ளது. கர்ப்பிணிகளை உரிய நேரத்தில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல முடியாத நிலையும் உள்ளது” என வாதிடப்பட்டது.

இதற்கு அரசு தரப்பில், சாலை அமைக்கும் பணிகள் தொடர்பாக விளக்கம் அளிக்கக் கால அவகாசம் கேட்கப்பட்டது. இதை விசாரித்த நீதிபதிகள், இந்தச் சாலை அமைக்கும் பணிகள் தொடர்பாக நிலை அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை வரும் 29ஆம் தேதி ஒத்தி வைத்தனர்.

வியாழன், 25 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon