மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 25 செப் 2020

கல்வியின் மேன்மையை உணர்வோம்!

கல்வியின் மேன்மையை உணர்வோம்!

கல்வி இன்றியமையாதது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. நல்ல வருமானம் ஈட்டித்தரும் வேலை ஒன்றில் அமர்வதற்காக மட்டும்தான் கல்வியை இன்றியமையாத ஒன்றாக நாம் பார்க்க வேண்டுமா? இல்லை. அதையும் தாண்டி ஒரு முழுமையான வாழ்வை நாம் வாழ்வதற்கு எந்தெந்த வகையில் கல்வி வழிசெய்கிறது என்பதைப் பார்ப்போம்.

முதலாவதாக, எழுத, படிக்க மற்றும் எண்ணத் தெரிவதால், நம்முடைய அன்றாட வாழ்வில் நாம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கும், எடுக்கும் முடிவுகளுக்கும் அடுத்தவரைச் சார்ந்திருப்பதற்கான தேவை குறைகிறது. நம் வாழ்க்கை நம்முடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது எனும் உணர்வு மிகமுக்கியமானது. அது நம்முடைய சுயமரியாதை, தன்னம்பிக்கையை வலுப்படுத்தும். இந்த நவீன உலகில் ஏற்படும் தொழில்நுட்ப மாற்றங்களோடு சேர்ந்து நாமும் பயணிக்க அடிப்படைக் கல்வி என்பது மிகவும் அத்தியாவசியமான ஒன்றாக இருக்கிறது என்பது தெளிவு.

இரண்டாவதாக, சமுதாயத்தில் நியாயமான அதிகாரப்பகிர்வு இருக்க வேண்டும் என்றால், அதை சாத்தியப்படுத்தப் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் கல்விபெற்று மேம்பட வேண்டும். படிப்பறிவற்ற, கல்வி பெறாத மக்களால் தங்களுடைய உரிமைகளுக்காகப் போராடி வெற்றிபெற முடியாது என்பது இதன் பொருள் அல்ல. கல்வி ஏற்படுத்தும் விழிப்புணர்வால், சாதாரண மக்களின் குரல் அதிகாரம் படைத்தவர்களுக்கு உரக்கக் கேட்கும். ஒருசிலர் மட்டுமே பயன்பெறுவதற்காக இயற்றப்பட்ட சட்டங்கள், கொள்கைகளைக் கேள்வி கேட்டு, ஜனநாயக முறையில் போராடி, பரந்துபட்ட மக்களுக்கு சாதகமாக அவற்றை மாற்றுவதற்கு உதவும் சக்திவாய்ந்த கருவி கல்வி.

மூன்றாவதாக, கல்விக்கும் சுகாதாரமான வாழ்விற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. பத்தொன்பதாம் நூற்றாண்டில், நோய்க்கிருமிகள் எவ்வாறு பரவுகின்றன என்பதை மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். நோய்க்கிருமிகள் பரவுவதற்கான காரணத்தை மக்களும் புரிந்துகொண்டதால்தான், சுகாதாரமான வாழ்க்கைமுறையை அவர்கள் தேர்ந்தெடுக்க முடிந்தது. இதன் விளைவாக, சாதாரண மனிதரின் சராசரி ஆயுட்காலம் அதிகரித்தது. இந்தியாவில் மக்கள் திறந்தவெளியில் மலம் கழிப்பதால், அதிலிருக்கும் கிருமிகள் எளிதில் பரவி குழந்தைகளின் வளர்ச்சியைப் பாதிக்கின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதைப்பற்றிய புரிதலையும், விழிப்புணர்வையும் மக்கள் மத்தியில் ஏற்படுத்தக் கல்வி என்பது மிகமிக அவசியம்.

நான்காவதாக, பெண்கல்வியின் பலாபலன்கள் பரவலாக உணரப்பட்டு வருகிறது. குடும்பத்தில் ஆண்-பெண்ணுக்கு இடையில் நிலவும் சமமற்ற அதிகாரப்பகிர்வை சரிசெய்வதற்கு பெண்கல்வி உதவுகிறது. உயர்கல்வி பெற்று, தங்களுடைய திறமைக்கேற்ற நல்ல வேலையைப் பெண்கள் தேடத் தொடங்கும்போது, குழந்தைத் திருமணம் போன்ற அவலங்கள் குறையும். பெண்கள் அதிகளவில் பொதுவெளிக்கு வரும்போது பாலின அடிப்படையில் சமுதாயத்தில் நிலவும் பாகுபாடுகள், ஏற்றத்தாழ்வுகளைக் களைய முடியும்.

வியாழன், 25 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon