மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 25 செப் 2020

காங்கிரஸ், பாஜகவுக்குப் பெரும்பான்மை கிடைக்காது: ஆ.ராசா

காங்கிரஸ், பாஜகவுக்குப் பெரும்பான்மை கிடைக்காது: ஆ.ராசா

பாஜக, காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளுக்குமே பெரும்பான்மை கிடைக்காது என்றும், மாநிலக் கட்சிகளின் ஆதரவுடன் காங்கிரஸ் தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி அரசு ஆட்சியமைக்கும் என்றும் திமுக கொள்கை பரப்புச் செயலாளர் ஆ.ராசா கூறியுள்ளார்.

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் நீலகிரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டிருப்பவர் ஆ.ராசா. 4 முறை எம்.பியாக இருந்த இவர் தற்போது நீலகிரியில் 3ஆவது முறையாகப் போட்டியிட்டுள்ளார். இம்முறை மக்களவைத் தேர்தலில் 543 தொகுதிகளில் பாஜகவுக்கு 200 தொகுதிகளில்கூட வெற்றி கிடைக்காது என்று பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டியில் ஆ.ராசா கூறியுள்ளார். அந்த பேட்டியில், “காங்கிரஸ் கட்சிக்கு இம்முறை 150 இடங்களுக்கு மேல் கிடைக்கும். எஞ்சிய இடங்களைப் பிராந்திய கட்சிகளே பெறும்.

காங்கிரஸ், பாஜக ஆகிய இரண்டு கட்சிகளுக்கும் ஆட்சியமைக்கப் போதுமான பெரும்பான்மை கிடைக்காது. ஆனால் தேர்தலுக்குப் பிறகு மாநிலக் கட்சிகளின் ஆதரவைப் பெற்று காங்கிரஸ் தலைமையிலான மதச்சார்பற்ற அரசு அமைய அதிக வாய்ப்புகள் உள்ளது. எவ்வளவு இடங்கள் காங்கிரஸுக்கு கிடைக்கும் என்ற உறுதியான எண்களை என்னால் சொல்ல இயலாது” என்றார்.

அதேபோல தமிழகத்தில் தேர்தல் நடைபெற்ற 38 மக்களவைத் தொகுதிகளில், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி 30 முதல் 33 இடங்களில் வெற்றி பெறும். திமுக போட்டியிட்ட 20 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்ற ஆ.ராசா, “மதசார்பின்மையைப் பாதுகாக்க காங்கிரஸ் கட்சியின் தலைமையிலான அரசை பாஜக எதிர்ப்பு பிராந்திய கட்சிகள் ஏற்று, ஆதரவளிக்கும் என்று திராவிட முன்னேற்றக் கழகம் நம்புகிறது. தெலங்கானா ராஷ்ட்ர சமிதி மற்றும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் இரண்டு கட்சிகளும் காங்கிரஸுக்கு ஆதரவளிக்க வேண்டும்.

தெலங்கானா ராஷ்ட்ர சமிதி, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், திருணமூல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ், தேசியவாத காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி கட்சிகளுக்கு காங்கிரஸுடன் சிறு சிறு மாறுபாடுகள்தான் உள்ளன. ஆனாலும் அவர்கள் எல்லோரும் மதச்சார்பின்மையைப் பாதுகாக்க இணைந்து நிற்கிறார்கள். தமிழகத்தைப் பொறுத்தவரையில் மத்திய, மாநில அரசுகள் இரண்டுக்குமே கடுமையான எதிர்ப்பலை மக்கள் மத்தியில் நிலவுகிறது” என்றார்.

வியாழன், 25 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon