மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 6 ஜுன் 2020

ஹைதர் அலிக்கு அழைப்பு: மமக வார்டு கலைப்பு!

ஹைதர் அலிக்கு அழைப்பு: மமக வார்டு கலைப்பு!

மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லாவுக்கும் தமுமுக பொதுச் செயலாளர் ஹைதர் அலிக்கும் இடையே ஏற்பட்டுள்ள பிணக்கு இன்னும் ஓயவில்லை என்பதையே நெல்லையில் நடந்த சம்பவம் எடுத்துக் காட்டுகிறது.

தமுமுக பொதுச் செயலாளர் ஹைதர் அலியை சிறப்பு விருந்தினராக அழைத்து விழா நடத்தத் திட்டமிட்டதைத் தொடர்ந்து, நெல்லை மேலப்பாளையம் 29 ஆவது வார்டு மமக நிர்வாகமே ஒட்டுமொத்தமாக நேற்று (ஏப்ரல் 24) நள்ளிரவு கலைக்கப்பட்டிருக்கிறது.

மேலப்பாளையம் 29 ஆவது வார்டுக்கு உட்பட்ட ,மதரஸத்துல் இக்லாஸ் என்ற மதரஸாவின் 5 ஆம் ஆண்டு கோடை கால விழா வரும் 27 ஆம் தேதி சனிக்கிழமை நடக்க இருக்கிறது. இதில் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரை ஆற்ற தமுமுக பொதுச் செயலாளர் ஹைதர் அலியை அழைத்திருந்தார்கள்.

இதற்காக சில நாட்கள் முன்பு மேலப்பாளையம் காவல்நிலையத்தில் நிகழ்ச்சிக்காக முறைப்படி அனுமதி கோரி மதரஸா நிர்வாகிகள் அணுகினர். அந்த மதரஸா நிர்வாகிகள் 29 ஆவது வார்டு தமுமுக- மமகவிலும் பொறுப்பில் இருக்கிறார்கள். இந்தத் தகவல் கிடைத்து மேலப்பளையத்தை உள்ளடக்கிய நெல்லை கிழக்கு மாவட்ட மமக தலைவர் ரசூல் மைதீன் தரப்பில் அந்த நிகழ்ச்சிக்கு போலீஸ் அனுமதி அளிக்கக் கூடாது என்று அழுத்தம் தரப்பட்டது.

ஆனால் மதரசா தரப்பிலோ, ‘இந்நிகழ்ச்சிக்கும் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை. கட்சிக்குள் எங்களுக்குள் இருக்கும் பிரச்னைகளை பேசித் தீர்த்துக் கொள்வோம். அதற்கும் மதரசா நிகழ்ச்சிக்கு அனுமதி அளிப்பதற்கும் இதற்கு தொடர்பில்லை’ என்று எடுத்துக் கூறினார்கள். ஆனால் மமகவின் மாவட்ட நிர்வாக அழுத்தம் காரணமாக அந்த நிகழ்ச்சிக்கு காவல்துறை அனுமதி இதுவரை தரப்படவில்லை.

இந்த நிலையில் நேற்று இரவு கூட நெல்லை கிழக்கு மமக, தமுமுகவின் நிர்வாகக் குழு கூட்டம் கூடியது.

அதில், “நெல்லை கிழக்கு மாவட்ட தமுமுக - ம ம க நிர்வாக குழு இன்று (24-04-19) நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் கே.எஸ். ரசூல் மைதீன் தலைமை வகித்தார். தமுமுக மாநில செயலாளர் மைதீன் சேட் கான் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

தமுமுக மாவட்ட செயலாளர் பிலால் ,ம ம க மாவட்ட செயலாளர் டவுண் ஜமால் , பொருளாளர் சுல்தான் , மாவட்ட துணைச் செயலாளர்கள் பேட்டை சேக் , பெஸ்ட் ரசூல், பாளை யாசிர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் மேலப்பாளையம் 29 வது வார்டு கிளை நிர்வாகம் தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்திற்கு கட்டுப்படாமலும் , தன்னிச்சையாகவும், அமைப்பு நலனுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும் செயல்பட்டு வந்தததால் மேற்படி 29 வது வார்டு தமுமுக - மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகம் கலைக்கப்பட்டது” என்று தீர்மானம் நிறைவேற்றி 29ஆவது வார்டுக்கு பொறுப்புக்குழு உறுப்பினர்களாக 5 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

“ஒரு மதரசா நிகழ்ச்சிக்கு தமுமுக பொதுச் செயலாளர் ஹைதர் அலியை சிறப்பு விருந்தினராக அழைத்ததற்காக கட்சி -இயக்கத்தின் ஒரு கிளையையே கலைக்க முடிவெடுக்கிறார்கள் என்றால் இது எங்கே போய் முடியுமோ என்று தெரியவில்லை. நேற்று மமக தலைவர் ஜவாஹிருல்லா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக சென்று சந்தித்த குழுவில் ஹைதர் அலி இல்லை. ஏன் அவரை அழைத்துச் செல்லவில்லை என்று சமூக தளங்களில் தமுமுகவினரே பலத்த கேள்விகளை எழுப்பினர். இந்த நிலையில் அதே நாள் இரவு ஹைதர் அலியை நிகழ்ச்சிக்கு அழைத்தமைக்காக ஒரு வார்டு கலைக்கப்படுகிறது என்பது வருத்தம் அளிக்கிறது” என்கிறார்கள் நெல்லை மமக நிர்வாகிகள் சிலர்.

வியாழன், 25 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon