இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வெப்ப சலனம் காரணமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. தென் மாவட்டங்களில் ஓரளவு மழை பெய்து வந்தாலும் சென்னையைப் பொறுத்தவரை இதுவரை மழை பெய்யவில்லை. சமீபத்தில் இந்தியப் பெருங்கடல் - வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு இருப்பதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், இன்று (ஏப்ரல் 25) இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானதாக தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதாவது, புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது, அடுத்த 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். மேலும் அது வலுப்பெற்று வடகிழக்கு திசை நோக்கி நகர்ந்து, புயலாக மாற வாய்ப்பிருக்கிறது. புயலாக மாறினால் அதற்கு ஃபானி எனப் பெயரிடப்படும். இந்த புயல் 30ஆம் தேதி தமிழக பகுதியில் கரை கடக்க வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புயல் கரையைக் கடக்கும் போது 90 - 100 கிமீ வேகத்தில் காற்று வீசும் எனவும், கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம் மீனவர்கள் நாளை முதல் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று எச்சரித்துள்ளது.
இந்நிலையில், கன்னியாகுமரியில் மேற்கு கடற்கரை கிராமங்களான நீரோடி, சின்னதுறை, வள்ளவிளை ஆகிய பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. மார்த்தாண்டம், கடியபட்டினம் ஆகிய குடியிருப்பு பகுதிகளில் கடல் நீர் புகுந்துள்ளது.