மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 25 செப் 2020

தங்க மங்கைக்கு ரோபோ சங்கர் அறிவித்த பரிசு!

தங்க மங்கைக்கு ரோபோ சங்கர் அறிவித்த பரிசு!

23வது ஆசிய தடகளப் போட்டியில் தங்கம் வென்ற தமிழகத்தை சேர்ந்த கோமதி மாரிமுத்துவுக்கு நடிகர் ரோபோ சங்கர் ஒரு லட்சம் பரிசு வழங்குவதாக அறிவித்துள்ளார்.

23வது ஆசிய தடகளப் போட்டிகள் கத்தாரிலுள்ள தோகாவில் நடைபெற்று வருகிறது. இதில் 800 மீட்டா் ஓட்டப்பந்தயத்தில் தமிழகத்தைச் சோ்ந்த, இந்திய வீராங்கனை கோமதி மாரிமுத்து 2 நிமிடம் 2.70 விநாடிகளில் 800 மீட்டா் தூரத்தை கடந்து முதல் இடத்தை பிடித்தார் .

திருச்சி அருகே உள்ள மணிகண்டம் பகுதியைச் சேர்ந்த மிகவும் ஏழை குடும்பத்தில் பிறந்தவர் கோமதி. தனது விடா முயற்சியால் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்று தமிழகத்துக்கு பெருமை சேர்த்துள்ளார். தங்கம் வென்றதிலிருந்து கோமதி மாரிமுத்துவுக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டுதல்களை தெரிவித்து வருகின்றனர். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் பலர் வாழ்த்து தெரிவித்தனர்.

தமிழக அரசு சார்பில் இவருக்கான பரிசுத் தொகை அறிவிப்பு இன்னும் வெளியாகாத நிலையில், முதல் ஆளாக நடிகர் ரோபோ சங்கர் கோமதி மாரிமுத்துவுக்கு ரூ. 1 லட்சம் பரிசுத் தொகை அறிவித்துள்ளார். இதனால் சமூக வலைதளங்கள் மற்றும் மீடியாக்களின் பாராட்டையும் நன்மதிப்பையும் பெற்றுள்ளார் ரோபோ சங்கர்.

இது குறித்து வீடியோ வெளியிட்ட ரோபோ சங்கர், “தங்கம் வென்ற கோமதி மாரிமுத்துவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். நானும் கஷ்டங்களை அனுபவித்து இந்த நிலைமைக்கு வந்தவன் தான். அதன் கஷ்டம் எனக்கும் தெரியும். கோமதி அவர்களுக்கு எனது சிறிய அன்பு பரிசாக ரூபாய் ஒரு லட்சம் தருவதை பெருமையாக நினைத்துக் கொள்கிறேன். மேலும் இவருடைய வெற்றி பல பெண்களுக்கு உத்வேகம் அளிக்கும்” எனவும் கூறியுள்ளார்.

வியாழன், 25 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon