மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 25 செப் 2020

தலைமை நீதிபதி மீது புகார் அளித்த பெண் அதிருப்தி!

தலைமை நீதிபதி மீது புகார் அளித்த பெண் அதிருப்தி!

தன்னிடம் விசாரிக்காமலேயே தன்னுடைய நடத்தை குறித்து தவறாகப் பேசப்படுவதாகத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது பாலியல் புகார் தெரிவித்த பெண் குற்றம்சாட்டியுள்ளார்.

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் பெண் ஊழியர் ஒருவர் ஏப்ரல் 20ஆம் தேதி பாலியல் புகார் கூறியதையடுத்து, உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து சிறப்பு அமர்வு ஒன்றை அமைத்தது. குற்றம்சாட்டப்பட்ட தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயையும் உள்ளடக்கிய இந்தச் சிறப்பு அமர்வுக்குப் பல்வேறு தரப்பிலிருந்து கடும் எதிர்ப்புகள் கிளம்பியதோடு, நீதிபதிகள் மீதான பாலியல் புகார் குறித்து விசாரிக்க ஏற்படுத்தப்பட்டுள்ள சட்ட நடவடிக்கைகள் எதுவும் இதில் பின்பற்றவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.

இதையடுத்து மூத்த நீதிபதி எஸ்.ஏ.போப்தே தலைமையில் நீதிபதிகள் ரமணா மற்றும் இந்திரா பானர்ஜி ஆகிய மூவரைக் கொண்ட விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. உச்ச நீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் மீதான பாலியல் புகார் குறித்து விசாரிக்க ஏற்படுத்தப்பட்டுள்ள in-house procedureஇன்படி இந்த விசாரணை ஆணையம் செயல்படும் என்று எஸ்.ஏ.போப்தே கூறியுள்ளார். இந்த ஆணையத்தின் முதல் விசாரணை ஏப்ரல் 26ஆம் தேதி தொடங்கும் நிலையில், அன்றைய தினத்தில் பாலியல் புகார் தெரிவித்த பெண் நேரில் ஆஜராகவும் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்த நிலையில் விசாரணை ஆணையத்தின் மீது கடும் அதிருப்தி தெரிவித்து பாலியல் புகார் தெரிவித்த பெண், எஸ்.ஏ.போப்தேவுக்குக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். பாலியல் புகார்களுக்கான சட்ட முறைப்படியிலான விசாகா கமிட்டியின் பரிந்துரை மற்றும் POSH சட்டத்தின்படி இந்த விசாரணை ஆணையம் அமைக்கப்படவில்லை என்று அப்பெண் கடிதத்தில் குற்றம்சாட்டியுள்ளார். விசாரணைக் குழுவில் பெரும்பான்மையாகப் பெண்கள் இருக்க வேண்டும் என்பதும், வெளிப்புற உறுப்பினர்கள் இருக்க வேண்டும் என்பதும் அச்சட்டங்களில் கட்டாயமாக்கப்பட்ட விதி என்றும் குறிப்பிட்டு, இவை பின்பற்றப்படவில்லை என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

என்னை விசாரிக்காமல் மரியாதைக்குரிய நீதிபதிகளும், மூத்த சட்ட அலுவலர்களும் இது பொய்யான குற்றச்சாட்டு என்று கூறுவது கவலை அளிப்பதாகக் கூறியுள்ள அப்பெண், “உச்ச நீதிமன்றம் இவ்விவகாரத்தில் தானாக முன்வந்து சிறப்பு அமர்வை ஏற்படுத்தி ஏப்ரல் 20ஆம் தேதி கூட்டிய அமர்வில் நீதிபதிகளும், மூத்த சட்ட அலுவலர்களும் கூறிய கருத்துகளைச் செய்திகளில் பார்த்தபோது எனக்குப் பயத்தை அளித்தது. தனக்கு உதவியற்ற தன்மையும் இருப்பதை வெளிக்காட்டியது” என்று கூறியுள்ளார்.

“இது ஜூனியர் அசிஸ்டெண்ட் செய்கிற சதி என்று எனக்குத் தோன்றவில்லை. இதற்குப் பின்னால் மிகப்பெரிய சதி இருக்கிறது. தலைமை நீதிபதி அலுவலகத்தைச் செயலிழக்கச் செய்வதற்கான சதி நடக்கிறது” என்று ஏப்ரல் 20ஆம் தேதி தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தன் மீதான பாலியல் புகார் குறித்துக் கருத்து தெரிவித்திருந்தார். இந்தச் சிறப்பு அமர்வில் உள்ள மற்றொரு நீதிபதியான அருண் மிஸ்ரா, “இந்தக் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது” என்று கூறியிருந்தார். அதேபோல மற்றொரு நீதிபதியான சஞ்சீவ் கானா, அட்டர்னி ஜெனரல் வேணுகோபால், சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா மற்றும் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி உள்ளிட்டோரும் புகார் கூறிய பெண்ணுக்கு எதிராகவும், தலைமை நீதிபதிக்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்திருந்தனர்.

இவற்றைக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ள அப்பெண், “எந்தவொரு காரணமும் இல்லாமல், என்னிடம் எந்தவொரு விசாரணையும் நடத்தாமல் என் நடத்தை மீது தாக்குதல்கள் தொடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கருத்துகள் எல்லாம் எனக்குப் பயத்தையும், நான் தனிமைப்படுத்தப்பட்டது போன்ற உணர்வையும், மிகுந்த மன அழுத்தத்தையும் அளித்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

நீதிபதி ரமணா தலைமை நீதிபதியின் குடியிருப்புக்கு அடிக்கடி வந்து செல்லும் நபர் என்றும், அவர் இந்த in-house panel விசாரணை ஆணையத்தில் இணைக்கப்பட்டுள்ளார் என்றும் ஆட்சேபம் தெரிவித்துள்ள அப்பெண், “தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்குக் குடும்ப நண்பரைப் போல மிக நெருங்கிய நண்பர் நீதிபதி ரமணா. என் மீதான பாலியல் துன்புறுத்தல் குறித்து உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு நான் கடிதம் எழுதியபோது, ஏப்ரல் 20ஆம் தேதி இந்தக் குற்றச்சாட்டை முற்றிலும் நிராகரித்துப் பேசியவர் நீதிபதி ரமணா” என்று அதிருப்தி தெரிவித்துள்ளார்.

அன்று நீதிபதி ரமணா கூறுகையில், “இதுபோன்று குற்றம்சாட்டும் முயற்சிகளை நாங்கள் கடந்த காலங்களில் பார்த்துள்ளோம். வருங்காலங்களிலும் இதுபோன்று குற்றச்சாட்டுகள் வரலாம். அத்தகைய விமர்சனங்களைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். நீதித் துறையின் கண்ணியத்தை நாம் நிலைநாட்ட வேண்டும்” என்று கூறியிருந்தார். இதனால் இவர் விசாரணை ஆணையத்தில் இருக்கும்போது விசாரணை நியாயமாகவும், நேர்மையாகவும் நடக்குமா என்று அப்பெண் கவலை தெரிவித்துள்ளார்.

போப்தே தலைமையிலான விசாரணை ஆணையத்தால் அளிக்கப்பட்டுள்ள நோட்டீஸில் இதுவரையில் பின்பற்றப்பட்டு வருகிற நடைமுறையைப் பற்றி எதுவும் பேசப்படவில்லை என்று குற்றம்சாட்டியுள்ள அப்பெண், “எனக்கு நீதிபதிகளைப் போல சட்டங்களைப் பற்றி போதிய அறிவும், அனுபவமும், பயிற்சியும் இல்லை. எனவே ஆணையத்தின் விசாரணைக்கு முன்பு எனக்குச் சட்டப்படி பயிற்சி பெற்ற நபரின் உதவி வேண்டும். விசாரணை ஆணையத்தின் செயல்பாடுகளை வீடியோ பதிவு செய்ய வேண்டும். வீடியோ பதிவு செய்யப்பட்டால் விசாரணை மீது தேவையற்ற சர்ச்சைகள் இருக்காது” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இறுதியாக ”நான் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளேன். நான் அனுபவித்த துன்பங்கள் மற்றும் என் குடும்பம் அனுபவித்த சித்ரவதைகள் விரைவில் முடிவுக்கு வரும் என்று நம்புகிறேன். நான் குறிப்பிட்டுள்ளவற்றை நீதிபதிகள் கருத்தில் கொள்ளுமாறு உங்களைக் கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

நன்றி: லைவ் லா

வியாழன், 25 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon