மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 25 செப் 2020

டிக் டாக் செயலிக்குத் தடை நீக்கம்!

டிக் டாக் செயலிக்குத் தடை நீக்கம்!

டிக் டாக் மீதான தடையை சில நிபந்தனைகளுடன் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீக்கியுள்ளது.

டிக் டாக் செயலி இளைஞர்கள் மத்தியில் பெரும் சவாலாக உள்ளது. இது ஒரு பொழுது போக்கு அம்சம் என்பதையும் தாண்டி, இளைஞர்கள் டிக் டாக் செயலியை முழு நேரமும் பயன்படுத்தி அதற்கு அடிமையாகி வருகின்றனர். குறிப்பாக, பயனாளிகள் பதிவு செய்யும் உள்ளடக்கங்களுக்கு எந்தவிதமான கட்டுப்பாடோ, தணிக்கையோ இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதுமட்டுமின்றி பயனாளிகள் பலரும் ஆபாசம் நிறைந்த பாடல்களையும், காட்சிகளையும் அதிகளவு பதிவிடுவதாகவும் புகார்கள் எழுந்தன.

இந்த நிலையில் இந்தச் செயலிக்குத் தடை விதிக்க கோரி, வழக்கறிஞர் முத்துக்குமார் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் டிக் டாக் செயலியைப் பதிவிறக்கம் செய்யவும், அதுதொடர்பான வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றத் தடை விதிக்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.

இதையடுத்து டிக் டாக் செயலி கூகுள் ப்ளே ஸ்டோர், ஆப்பிள் ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டது. செயலிக்குத் தடை விதிக்கப்பட்டதற்கு எதிராக டிக் டாக் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த உச்ச நீதிமன்றம் டிக் டாக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க மறுத்துவிட்டது.

இந்த நிலையில், இவ்வழக்கு மீண்டும் நேற்று (ஏப்ரல் 24) சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ். சுந்தர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது டிக் டாக் நிறுவனம் சார்பில், “நீதிமன்றத்தின் தடைக்குப் பிறகு, செயலியிலிருந்து ஆறு மில்லியன் வீடியோக்கள் நீக்கப்பட்டுள்ளன. 18 வயதுக்குக் கீழ் உள்ளவர்கள், வீடியோக்களைப் பதிவேற்றம் செய்ய முடியாது. பெண்களின் ஆபாச வீடியோக்களைப் பதிவேற்றம் செய்ய முடியாது. ஆபாச வீடியோக்களைப் பதிவேற்றினால் டிக் டாக் செயலி தானாகச் செயலிழந்துவிடும். ஃபேஸ்புக், வாட்ஸ் அப் செயலிகளைக் காட்டிலும் டிக் டாக்கில் அதிக பாதுகாப்பு வசதிகள் உள்ளன” என்று வாதிடப்பட்டது.

இதை கேட்ட நீதிபதிகள் சிறுவர், சிறுமியர் பாதுகாப்புக்குச் சரியான சட்டங்கள் இல்லை என்று கருத்து தெரிவித்தனர்.

டிக் டாக் வாதத்தைத் தொடர்ந்து மத்திய மின்னணுத் துறை சார்பில், பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், சிறுவர்கள் பாதுகாப்புக்காகச் சட்ட முன் வரைவு தயாராக இருப்பதாகவும், அடுத்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் ஒப்புதலுக்காக வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து சில நிபந்தனைகளுடன் டிக் டாக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர். சிறார், பெண்களின் ஆபாச வீடியோக்கள் மற்றும் சமூகத்துக்குச் சீர்கேட்டை ஏற்படுத்தும் வகையிலான வீடியோக்களைப் பதிவேற்றம் செய்யக் கூடாது என்று டிக் டாக் நிறுவனத்துக்கு நிபந்தனை விதிக்கப்பட்டது.

இந்த நிபந்தனையை ஏற்ற டிக் டாக் நிறுவனம், இந்தச் செயலி தொடர்பாக இந்தியாவிலிருந்து வரும் புகார்களை விசாரிக்க நோடல் அலுவலர் ஒருவர் நியமிக்கப்படுவார் என்று உறுதி அளித்திருக்கிறது.

இதைத்தொடர்ந்து டிக் டாக்குக்குத் தடையை நீக்கிய நீதிபதிகள், டிக் டாக் நிறுவனம் கொடுத்த உறுதிமொழியை மீறும் பட்சத்தில் நீதிமன்றம் தானாக முன்வந்து எடுக்கும் அவமதிப்பு வழக்கைச் சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

புதன், 24 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon