மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 25 செப் 2020

ஐபிஎல்: கோலி அணியின் ஹாட்ரிக் வெற்றி!

ஐபிஎல்: கோலி அணியின் ஹாட்ரிக் வெற்றி!

ஐபிஎல் தொடர் தொடங்கியதிலிருந்து தோல்விகளையே பெற்றுவந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தற்போது சில போட்டிகளில் வெற்றியைப் பெற்று தன் மீதான விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

நேற்று (ஏப்ரல் 24) பெங்களூருவில் நடைபெற்ற போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை எதிர்கொண்டது. டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது.

பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பார்திவ் படேலும், விராட் கோலியும் களமிறங்கினர். கோலி 13 ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். அடுத்து இறங்கிய டி வில்லியர்ஸ் அதிரடியாக விளையாடினார். பார்திவ் பட்டேல் 43 ரன்களிலும், மொயின் அலி 4 ரன்களிலும், அக்‌ஷதீப் நாத் 3 ரன்களிலும் வெளியேறினர். ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் மறுமுனையில் நின்ற டி வில்லியர்ஸ் தனது அதிரடி ஆட்டத்தைத் தொடர்ந்தார். அரை சதம் கடந்த அவர் 7 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 44 பந்துகளில் 82 ரன்கள் குவித்தார். மார்கஸ் ஸ்டோனிஸ் 34 பந்துகளில் 46 ரன்கள் சேர்த்தார். 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 202 ரன்களை எடுத்தது.

203 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய பஞ்சாப் அணிக்கு அதிரடியான தொடக்கம் அமைந்தது. ஆரம்பம் முதலே கிறிஸ் கெயிலும் கே.எல்.ராகுலும் அடித்து ஆடினர். இருப்பினும் கெயில் தூக்கியடித்த பந்தை பவுண்டரி லைனில் டி வில்லியர்ஸ் பிடித்தார். 10 பந்துகளில் 23 ரன்கள் எடுத்த அவர் வெளியேறினார். ராகுலுடன் மய்ங் அகர்வால் நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தார். இதனால் பஞ்சாப் அணி 8.5 ஓவரிலேயே 100 ரன்களைக் கடந்தது. இதனால் வெற்றி இலக்கை அந்த அணி விரைவாக எட்டிவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. உடனடியாக மய்ங் அகர்வால் 35 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

ராகுலும் 42 ரன்களில் வெளியேறினார். இருப்பினும் ஆட்டம் பஞ்சாப் அணிக்குச் சாதகமாகவே இருந்தது. ஆனால், 19ஆவது ஓவர் வீசிய நவ்தீப் சைனி, டேவிட் மில்லர் (24), நிக்கோலஸ் பூரான் (46) ஆகிய இரு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதனால் ஆட்டத்தின் முடிவு பெங்களூரு அணிக்கு சாதகமாக மாறியது. 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணியால் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 185 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. டி வில்லியர்ஸ் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

வியாழன், 25 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon