மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 25 செப் 2020

இலங்கை: வெளிநாட்டுப் புலனாய்வு அமைப்புகள் தீவிரம்!

இலங்கை: வெளிநாட்டுப் புலனாய்வு அமைப்புகள் தீவிரம்!

இலங்கை தொடர் குண்டுவெடிப்பின் முக்கிய சூத்திரதாரியாகக் கருதப்படும் அப்துல் லத்தீப் ஜமீல் முகமது என்பவர், இங்கிலாந்து பல்கலைக்கழகத்தில் படித்தவர் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

கடந்த ஈஸ்டர் பண்டிகை அன்று இலங்கை தலைநகர் கொழும்பிலும் அதை ஒட்டியுள்ள பகுதிகளிலும் தேவாலயங்களிலும், நட்சத்திர ஹோட்டல்களிலும் குண்டுகள் வெடித்ததில் இதுவரை 350க்கும் மேற்பட்டோர் பலியாகியிருக்கிறார்கள்.

இந்த நிலையில் இந்தத் தாக்குதல் பற்றிய விசாரணையில் இலங்கை புலனாய்வுத் துறைக்கு ஒத்துழைக்க, இந்தியா, இங்கிலாந்து மற்றும் அமெரிக்க புலனாய்வு அமைப்புகளும் களமிறங்கியுள்ளன.

அந்த வகையில் இங்கிலாந்து நாட்டின் தீவிரவாத எதிர்ப்புப் புலனாய்வு அமைப்பினர், மேற்கண்ட குண்டுவெடிப்புகளில் சம்பந்தப்பட்டிருக்கும் அப்துல் லத்தீப் ஜமீல் முகமது என்பவர் தென்மேற்கு லண்டனில் இருக்கும் கிங்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் 2006-07 ஆண்டில் படித்தவர் என்பதை உறுதி செய்திருக்கிறது.

இதுகுறித்து இலங்கை பாதுகாப்புத் துறை அமைச்சர் ருவான் விஜயவர்தனே செய்தியாளர்களிடம் பேசுகையில், “குண்டுவெடிப்பில் சந்தேகத்துக்குரிய நபர்களில் ஒருவர் இங்கிலாந்திலும், ஆஸ்திரேலியாவிலும் மேல் படிப்பு படித்துவிட்டு இலங்கைக்குத் திரும்பியிருக்கிறார்.

மேலும், இந்த குண்டுவெடிப்பில் ஈடுபட்ட தற்கொலை குண்டுதாரிகள் அனைவருமே படிப்பிலும், பணத்திலும் உயர்ந்த வகுப்புகளைச் சேர்ந்தவர்கள். மிகவும் செல்வாக்கான குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். வெளிநாடுகளில் சட்டம் உள்ளிட்ட மேல் படிப்பு முடித்தவர்கள்” என்று கூறியுள்ளார்.

பயங்கரவாதிகளின் தாக்குதல் இலக்குகளில் ஒன்றாகக் கொழும்பில் இருக்கும் இந்தியத் தூதரகமும் இருந்திருப்பது தெரியவருகிறது என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கூறியிருக்கிறார். இதனால் இவ்விவகாரத்தில் இந்தியா உள்ளிட்ட வெளிநாட்டுப் புலனாய்வு அமைப்புகள் கொழும்பில் முகாமிட்டிருக்கின்றன.

வியாழன், 25 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon