மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 25 செப் 2020

வாக்களிக்கும் கடமையில் கிராம மக்கள் முன்னிற்பது ஏன்?

வாக்களிக்கும் கடமையில் கிராம மக்கள் முன்னிற்பது ஏன்?

அ.குமரேசன்

ஜனநாயகத் தேர்தல், அந்த ஜனநாயகம் சார்ந்த பல்வேறு சிந்தனைகளை ஏற்படுத்துகிறது. அந்தச் சிந்தனைகள் விவாதிக்கப்பட வேண்டும், விரிவுபடுத்தப்பட வேண்டும், மேம்படுத்தப்பட வேண்டும். ஒரு கருத்துக்கு மாற்றுக் கருத்து வருவதும், இரண்டும் கலந்து புதிய கருத்து உருவாவதும் ஜனநாயகத்தில் ஒரு மையக் கூறு .

இந்தியாவில் தற்போது ஏழு கட்டங்களாக நடந்து கொண்டிருக்கும் மக்களவைத் தேர்தல், ஆந்திரம், ஒடிசா, அருணாசல், சிக்கிம் ஆகிய மாநிலங்களின் சட்டமன்றங்களுக்கான தேர்தல், தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் சில சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் ஆகியவை பற்றிய செய்திகளில் ஓர் அவதானிப்பு வெளிப்படுத்தப்படுகிறது. முந்தைய தேர்தல்களிலும் இந்த அவதானிப்பு இருந்துள்ளது. தேர்தல் பங்கேற்பில் நகர்ப்புற மக்களைக் கிராமப்புற மக்கள் விஞ்சி நிற்கிறார்கள் என்று மதிப்பிடப்படுகிறது. ஊரகப் பகுதிகளில் 70 முதல் 80 சதவிகிதம் வரையில் வாக்குகள் பதிவாகின்றன. நகரப் பகுதிகளில் 53 முதல் 60 சதவிகிதம் வரையில்தான் பதிவாகிவந்துள்ளன.

இந்தியாவில் கிராமப்புறம், நகர்ப்புறம் என்ற வரையறைகளே சரியாக இல்லை என்ற கருத்தையும் சில ஆய்வாளர்கள் முன்வைக்கிறார்கள். சரியாக வரையறுக்கப்பட்டால், தற்போது கிராமப்புறங்கள் என்று கருதப்படும் பல வாக்குச்சாவடிப் பகுதிகள் நகரப் பகுதிகளாகிவிடும், அப்போது இந்தப் புள்ளிவிவரம் மாறிவிடும், ஓரளவுக்கு இரு பகுதிகளிலும் சமநிலை விகிதங்கள்கூட வெளியாகக்கூடும் என்று அவர்கள் கூறுகிறார்கள்.

ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுவதில் எளிய உழைப்பாளி மக்களாகிய கிராமப்புற மக்கள் கூடுதல் முனைப்போடு ஈடுபடுகிறார்கள். நகர்ப்புற மக்கள், குறிப்பாக நடுத்தர வர்க்கத்தினர், தேர்தல் நடைமுறைகளை விமர்சித்துவிட்டுப் பங்கேற்பில் பட்டுக்கொள்ளாமல் ஒதுங்கிவிடுகிறார்கள் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது.

இந்த நாடாளுமன்ற ஜனநாயக முறை அறிமுகமாவதற்கு முன் நாட்டின் எந்தவிதமான அரசியல் செயல்பாட்டிலும் கிராம மக்களுக்கு, குறிப்பாக உழைக்கும் விவசாயத் தொழிலாளிகள், ஒதுக்கப்பட்ட சமூகத்தினர், பெண்கள் ஆகியோருக்கு, இடம் இருந்ததில்லை. அவர்களின் குரல் முணுமுணுப்பாகக் காற்றில் கரைந்துபோகும்.

குடிமக்களில் வாக்களிக்கும் வயது வந்த ஒவ்வொருவருக்கும் வாக்குரிமை, சொந்த நிலம் வைத்திருப்பவரா, இன்னொருவர் நிலத்தில் வேலை செய்பவரா, மேட்டுத் தெருக்களில் வசிப்பவரா, பள்ளத் தெருக்களுக்குத் தள்ளப்பட்டவரா, படித்தவரா படிக்காதவரா, ஆணா பெண்ணா என்ற எவ்விதப் பாகுபாடும் இல்லை என்ற ஜனநாயகம், நிலப்பிரபுத்துவத்திலிருந்து முதலாளித்துவத்துக்கு மாறுகிற சமுதாய அமைப்பில் அவர்களின் குரலுக்கு ஒரு மதிப்பை உருவாக்கிக் கொடுத்தது. நாட்டின் மிகப்பெரும் பணக்காரருக்கும் ஓர் ஓட்டு, நடைமேடையில் சுருண்டு கிடப்பவருக்கும் ஓர் ஓட்டு, மிக உயர்ந்த பதவியில் இருப்பவருக்கும் ஓர் ஓட்டு, பணிந்து பணியாற்றுகிறவருக்கும் ஓர் ஓட்டு.

ஒற்றை விரல் அதிகாரம்

தற்போதைய தேர்தல் முறைகளில் உள்ள போதாமைகளைப் பற்றியும், பாசாங்குத்தனம் பற்றியும் நிறைய பேசலாம். அடிப்படையான சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும், உண்மையான ஜனநாயகமும் முழுமையான பிரதிநிதித்துவமும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதிலெல்லாம் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், காலமெல்லாம் ஆண்டைகளையும் ஆதிக்கவாதிகளையும் பார்த்துக் கையை நீட்டிக்கூடப் பேச முடியாதவர்களாக அடக்கி வைக்கப்பட்டிருந்த பாமர மக்களுக்கு, ஒற்றை விரல் அதிகாரம் அசாதாரணமானது. வாக்குப்பதிவு முடிந்த பிறகு கையை மடக்கிவைத்துக் கொள்ள வேண்டும் என்றபோதிலும் அந்த ஒரு நாள் கிடைக்கிற விரல் நீட்டும் அதிகாரத்தை முழுமையாக, தங்கள் விருப்பப்படி பயன்படுத்த முடியும் என்ற வாய்ப்பைத் தவறவிட அவர்கள் தயாராக இல்லை.

ஆகவேதான் அனுபவத்தின் அடிப்படையில், அடுத்த தேர்தல் வரையில் தட்டிக்கேட்க முடியாது என்ற நிலைமையைப் புரிந்துவைத்துள்ள போதிலும், குறை கூறி ஒதுங்குகிறவர்களாக இல்லாமல், குறைவின்றிப் பங்கேற்பவர்களாக இருக்கிறார்கள் கிராம மக்கள். “ராமன் ஆண்டால் என்ன, ராவணன் ஆண்டால் என்ன” என்பது போன்ற சொலவடைகள், மேல் மட்டத்தில் நடைபெறும் ஆட்சி மாற்றங்களில் அடித்தட்டு மக்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்ற நிலைமையிலிருந்தே உருவாகின. இப்போது தன்னை ஆள வேண்டியது ராமனா, ராவணனா என தன்னாலும் தீர்மானிக்க முடியும் என்ற உண்மையிலிருந்து ஏற்படும் மனக்கிளர்ச்சி தனித்துவமானது.

அந்த வகையில் புலம்பல்வாதிகளாகவோ, புறக்கணிப்பார்களாகவோ கறுப்பு மைக்கறை படியாத விரல்களைவிட, சேற்றுக் கறை படிந்த ஊரக உழைப்பாளி மக்களின் கைவிரல்கள் மரியாதைக்குரியவை ஆகின்றன.

“இவரு நம்ம ஆளு”

அதேவேளையில், அவர்களின் இந்தக் கூடுதல் பங்கேற்பு ஏன் என்ற கேள்வி வேறு சில ஆழமான உண்மைகளுக்கும் இட்டுச் செல்கிறது. முழுக்க முழுக்க ஜனநாயக உரிமை, பங்கேற்புக் கடமை என்ற உணர்வோடுதான் கிராமப்புற வாக்குச்சாவடிகளில் அதிக வாக்குகள் பதிவாகின்றனவா? நகரமோ, கிராமமோ, இயலாமையாலோ, ஈடுபாடு இல்லாததாலோ வாக்குச்சாவடிக்கு வராதவர்களின் நலன்களுக்காகவும் சேர்த்துதான், வருகிற மக்கள் வாக்களிக்கிறார்கள் என்ற பாராட்டுதலை ஒதுக்கிவிடாமலேதான் இந்தக் கேள்வி எழுகிறது.

“நம்ம ஆளு”, “நம்ம ஆளுக” என்ற சொற்கள் நகரப் பகுதிகளைவிட கிராமப் பகுதிகளில்தான் அதிகமாக புழங்குகின்றன என்பது மறுக்க முடியாதது. தேர்தல் நேரத்தில் இந்தச் சொற்கள் இன்னும் அதிகமாக புழங்குகின்றன. ஓட்டு கேட்டு வருகிறவர்களும் கூசாமல் இந்தச் சொற்களை வீசுகிறார்கள், ஓட்டுப்போடப் போகிறவர்களும் தயங்காமல் இந்தச் சொற்களை எடுத்துக்கொள்கிறார்கள். நம்ம ஆளு, நம்ம ஆளுக என்ற சொல்லாடல்களுக்கு, அகராதியில் தேடாமலே, “நம்ம சாதி ஆளு”, “நம்ம சாதிக்கார ஆட்கள்” என்ற பதவுரைகளே உள்ளன.

ஊரில் அல்லது கிராமத்தில் ஆதிக்கப் பிரிவினராக அதிக எண்ணிக்கையில் உள்ள சாதியைச் சேர்ந்தவர்களிடம், குறிப்பிட்ட வேட்பாளர் அவர்களது சாதியைச் சேர்ந்தவராக அறிமுகப்படுத்தப்படுகிறார். ஏற்கெனவே அவர் ஊர்க் கோயில் விழா, குலதெய்வக் கொண்டாட்டம், கல்யாணம், காதுகுத்து, சாதிச் சங்கக் கூட்டம் எனப் பல்வேறு வடிவங்களில் நடந்திருக்கக் கூடிய சமூகக் கூடுகைகளில் அவர்களது ஆளாக அறிமுகமாகியிருப்பார். அவர்களும் தங்களுடைய ஆளாக, தங்களிடையே இருந்து மேலே செல்கிறவராகப் பார்க்கிறார்கள்.

மிக முக்கியமாக, காலங்காலமாக, வீடு வீடாக, சடங்கு சடங்காக ஊட்டப்பட்டு ஊட்டம் ஏற்றப்பட்டு வந்திருக்கிற சாதிப் பெருமையோடு அடையாளப்படுத்தப்பட்டு இதுவெல்லாம் நடைபெறும். சாப்பாட்டுக்கே வழியில்லை என்றாலும் சாதிப் பெருமையைக் காக்க உயிரையும் கொடுப்போம் என்ற வறட்டுக் கௌரவம் தொட்டில் பருவத்திலிருந்தே புகட்டப்படுவதாயிற்றே (உயிரையும் கொடுப்போம் என்ற கௌரவம்தானே உயிரையும் எடுப்போம் என்ற கொடூரமாக மாறுகிறது?).

ஆதிக்கம் செலுத்துகிற ஒரு சாதியைச் சேர்ந்தவர்கள் தங்களுடைய பிரதிநிதி பற்றிய ஒரு முடிவுக்கு வருகிறபோது, அதே ஊரில் அடக்கப்பட்டு வந்திருக்கிற சாதியைச் சேர்ந்தவர்களும் ஒரு முடிவுக்கு வருகிறார்கள். அவர்களிடையேயும் “இவரு நம்ம ஆளு”, “நம்ம ஆளுக ஒரே முடிவா எடுக்கணும்” என்ற உரையாடல்கள் நடத்தப்படும். கௌரவத்திற்காக இல்லை என்றாலும், தாங்கள் மதிக்கப்பட வேண்டும், தங்களுடைய வலிமை என்னவென்று உணரப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்புகள் அங்கே இருக்கும். ஆதிக்கப் பிரிவினர் எடுக்கும் முடிவையும், அடக்கப்பட்ட பிரிவினர் எடுக்கும் முடிவையும் சாதிய முடிவு என்று தராசு முள்ளை சமநிலையில் நிறுத்திவிட் முடியாது.

இந்த உணர்வுகள் மேலோங்கிய நிலையில், அதிகபட்ச வாக்குகளைப் பதிவு செய்வதுதான் தங்களுடைய அதிகாரத்தை உறுதிப்படுத்தும் என்று ஆதிக்கப் பிரிவினர் முடிவெடுக்கிறார்கள். அதேபோல், அதிகபட்ச வாக்குகளைப் பதிவு செய்வதுதான் தங்களுடைய வலிமையை வெளிப்படுத்தும் என்று அடக்கப்பட்ட பிரிவினரும் முடிவெடுக்கிறார்கள். இந்த இரண்டு முடிவுகளும், இதர அரசியல் நிலைமைகளோடும் உள்ளூர் நிலவரங்களோடும் சேர்ந்து கிராமப்புறங்களில் வைக்கப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்களுக்குக் கூடுதல் வேலை தருகின்றன.

இதர உள்ளூர் நிலவரங்கள் என்பதற்குள் பணப்பட்டுவாடாவும் அடங்குகிறது. முற்காலத்தில், உள்ளூர் அரச மரத்தடிப் பஞ்சாயத்தில் ஒரு முடிவு சொல்லப்பட்டு, சம்பந்தப்பட்டவர்கள் அதற்குக் கட்டுப்படுவதாக வெற்றிலை மீது சத்தியம் வாங்கப்படும். அந்த வெற்றிலை சத்தியத்தை யாரும் மீற மாட்டார்கள். மீறினால் குடும்பத்திற்கோ, ஊருக்கோ ஏதாவது கேடு நடக்கும் என்ற அச்சம் இருக்கும். மீறுவது தலைக்குனிவு என்ற கௌரவப் பிரச்சினை அதில் சேர்ந்துகொள்ளும். மீறுவோரைச் சமூக விலக்கம் செய்கிற கொடுமை பற்றிய நினைவும் இணைந்துகொள்ளும்.

திரைப்படங்களில் பார்க்கிற நாட்டாமைகளின் மரத்தடிப் பஞ்சாயத்து வேறு வேறு வடிவங்களில் தொடரத்தான் செய்கிறது. மரத்தடிக்குப் பதிலாக மன்ற அலுவலகம், உள்ளூர்ப் பெரிய ஆளின் வீடு, கோயில் பூசை என இடங்கள் மாறியிருக்கின்றன. பேசுபொருள் ஒன்றுதான். அது தேர்தலாகவும் இருக்கலாம், வாழ்க்கைத் துணையைத் தேர்வு செய்தவர்களைப் பிரித்து வைப்பதாகவும் இருக்கலாம்.

இவ்வாறு சாதிக் கட்டுமானத்தின் அடிப்படையில் தங்களது வாக்குகள் யாருக்கு என ஒரு பிரிவினர் முடிவு செய்கிற போது, வீம்புக்காகவோ, வேறு வழியில்லாத நிலைமை கருதியோ இன்னொரு பிரிவினரும் சாதிக் கட்டுமானத்தின் அடிப்படையில் தங்களுடைய வாக்குகள் யாருக்கு என முடிவு செய்கிறார்கள். இது ஆளுமைச் சாதி, அடக்கப்பட்ட சாதி என்ற இரண்டு பிரிவுகளுக்கு இடையேதான் நடக்க வேண்டும் என்பதில்லை. ஊரில் இரண்டு பெரிய சாதிகளைச் சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள் என்றால், அவர்களுக்கு இடையேயும், தங்களது குடிப் பெருமையை நிலைநாட்டவும், தங்களது தேவைகளை நிறைவேற்றவும் “நம்ம ஆளு”, “நம்ம ஆளுக” என்ற கண்ணோட்டமும் போட்டியும் இருக்கும். சில நேரங்களில் இந்த இரண்டு பிரிவினருமே கட்சி அடிப்படையில் ஒரே வேட்பாளரை ஆதரிக்க முடிவு செய்யக்கூடும். அவர்கள் ஓட்டு போட்டு விடுவார்கள் என்று இவர்கள் சும்மா இருந்துவிடுவதில்லை, இவர்கள் ஓட்டுப் போடாமல் இருக்க மாட்டார்கள் என்று அவர்கள் விட்டுவிடுவதில்லை.

மத அடிப்படையிலான தலையீடுகளும் இருக்கின்றன. கோயில் விளக்குப் பூஜைகள், பள்ளிவாசல் போதனைகள், தேவாலய ஜெபங்கள் போன்ற கூடுகைகளில் இதே நம்ம ஆளு, நம்ம ஆளுக கண்ணோட்டங்கள் கற்பிக்கப்படுகின்றன.

ஆகப் பெரும்பாலும் இப்படி சமூக கௌரவம் என்ற கண்ணோட்டம்தான் தீர்மானிக்கிறது என்றாலும், சில நேரங்களில் ஊரை உருக்குலைத்துச் சென்ற புயல் போன்ற இயற்கைத் தாக்குதல்களின்போதும், ஊரை உருக்குலைக்க வருகிற செயற்கைத் திட்டங்களுக்கு எதிரான போராட்டங்களின்போதும் தங்களை அலட்சியப்படுத்தியவர்களுக்குப் பாடம் கற்பிக்க கிடைத்திருக்கிற வாய்ப்பை தவறவிட்டுவிடக் கூடாது என்ற சமூக அக்கறைக் கண்ணோட்டமும் தேர்தலில் கூடுதலாகப் பங்கேற்க வைக்கிறது. நகர்ப்புறவாசிகளில் ஒரு பகுதியினர் யாருக்கு ஓட்டுப் போட்டு என்ன நடக்கப் போகிறது, வெற்றி பெற்று பதவிக்குப் போகிறவர்கள் அவர்கள் நினைப்பதைத்தான் செய்யப் போகிறார்கள் என்று நினைத்து, தேர்தல் நாளில் சட்டப்படியான விடுமுறையை மட்டும் பயன்படுத்திக் கொண்டு சும்மா இருப்பதைப் போல பெரும்பகுதி கிராமப்புற மக்கள் இருந்துவிடுவதில்லைதான்.

ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுவது என்றால் வாக்குப்பதிவு செய்வது மட்டுமல்ல, ‘நோட்டா’ பட்டனில் விரல் வைக்காமல் இருப்பது மட்டுமல்ல. குறிப்பிட்ட கட்சி அல்லது அணியின் கொள்கையை அலசி அதன் அடிப்படையில் முடிவு செய்வதுதான் அரசியல் முதிர்ச்சி. சாதிக் கட்டுப்பாட்டின் அடிப்படையில், சரியானதொரு வேட்பாளருக்கே ஆதரவளிக்க முடிவு செய்தால்கூட, அது ஆரோக்கியமான அரசியல் அல்ல. ஜனநாயக உரிமையை உறுதிப்படுத்தி, ஜனநாயகக் கடமையை முறையாக நிறைவேற்றுகிற அரசியல் பக்குவத்தை நோக்கிச் செல்வதற்கு ஊரக வாக்குகள் அதிகமாகப் பதிவாவது ஏன் என்பது குறித்த விவாதங்களும் பங்களிக்கும்.

புதன், 24 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon