கருக்கலைப்பு காலத்தை உயர்த்த கோரிய வழக்கில் பதில் அளிக்க மத்திய அரசுக்குச் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை பதிவாளர் தரப்பில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதில், “கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி நாளிதழ் ஒன்றில் கருக்கலைப்பு தொடர்பான செய்தி ஒன்று வெளியிடப்பட்டிருந்தது. அதில் கருக்கலைப்பு சட்டத்தில் திருத்தம் செய்வது தொடர்பான விவகாரம் அமைச்சரவையின் ஒப்புதலுக்காக வைக்கப்பட்டிருக்கிறது என்று கூறப்பட்டிருந்தது. கருக்கலைப்பு சட்டம் 1971இன்படி, 20 வாரங்களுக்கு உட்பட்ட கருவைக் கலைக்க அனுமதி உண்டு. ஆனால், 20 வாரங்களுக்குப் பின்னர் தான் கருவின் உடல் மற்றும் மனவளர்ச்சி குறைபாடு குறித்துத் தெரியவரும். இதனால் கருவைக் கலைப்பதற்கு நீதிமன்ற அனுமதியை நாடவேண்டியுள்ளது. இதற்கிடையே கருக்கலைப்புக்கு அனுமதி வழங்கப்படாமல், அந்தக் குறைபாடுகளுடன் பிறக்கும் குழந்தைகள், சமூகத்தில் மிகுந்த சிரமத்துக்கு ஆளாவதோடு, அவர்களின் பெற்றோர்களும் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
“2014ஆம் ஆண்டு கருக்கலைப்புக்கான கால வரம்பை 24 வாரங்களாக உயர்த்திய பரிந்துரை அமைச்சரவையின் ஒப்புதலுக்காகக் காத்திருப்பில் உள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனை அறிக்கை ஒன்றில், 20 வாரங்களைக் கடந்த கருவைக் கலைப்பதற்கு ஒவ்வொரு மாதமும் 3 முதல் 4 பெற்றோர்கள் வரை அனுமதி கேட்பதாகக் கூறப்பட்டுள்ளது. பாலியல் வன்கொடுமைகளால் பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கும் 20 வாரங்கள் கடந்த கருவைக் கலைப்பதற்கு நீதிமன்ற அனுமதி தேவைப்படுகிறது. நாட்டில் 2016ஆம் ஆண்டில் 38,947 பாலியல் வன்முறைகள் நடந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்படும் சிறுமிகளுக்குப் பிறக்கும் குழந்தைகளின் வாழ்வு இறப்பைவிடக் கொடூரமான முறையில் உள்ளது” என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
எனவே, கருக்கலைப்பு சட்டத்தில், கருக்கலைப்புக்கான கால வரம்பை 20 வாரத்திலிருந்து 24 வாரங்களாக உயர்த்த வேண்டும். பாலியல் வன்கொடுமைகளில் பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்குக் கருக்கலைப்பு செய்ய காலவரம்பு நிர்ணயிக்கக் கூடாது. ஊரக மற்றும் கிராமப்புறங்களில் கர்ப்பிணிகள் கருவின் உடல் மற்றும் மனவளர்ச்சி குறித்துத் தெரிந்துகொள்ள இயந்திரங்கள் வைக்க வேண்டும். கருக்கலைப்பு செய்யும் பெண்களுக்கு மனநல ஆலோசனை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் மனுவில் முன்வைக்கப்பட்டிருந்தன.
இந்த மனுவை நேற்று (ஏப்ரல் 24) விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் எஸ்.எஸ்.சுந்தர் இந்த மனு தொடர்பாக மத்திய சுகாதார மற்றும் குடும்பநலத் துறை செயலர், இந்திய மருத்துவக் கழக பொதுச் செயலர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஜூன் 26ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.