மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 25 செப் 2020

இடைத் தேர்தல்: அமமுக வேட்பாளர்களுக்குப் பரிசுப் பெட்டி!

இடைத் தேர்தல்: அமமுக வேட்பாளர்களுக்குப் பரிசுப் பெட்டி!

நடைபெறவுள்ள நான்கு தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடும் அமமுக வேட்பாளர்களுக்குப் பரிசுப் பெட்டி சின்னத்தைத் தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.

மக்களவை மற்றும் 18 தொகுதி சட்டமன்ற இடைத் தேர்தலில் போட்டியிடும் அமமுக வேட்பாளர்களுக்கு குக்கர் சின்னத்தை வழங்க வேண்டும் என்று தினகரன் விடுத்த கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம், வேறொரு பொது சின்னத்தை வழங்க உத்தரவிட்டது. அதன்படியே அமமுகவின் 59 வேட்பாளர்களுக்கும் பரிசுப் பெட்டி சின்னத்தைத் தேர்தல் ஆணையம் ஒதுக்கியது.

இதற்கிடையே காலியாக இருந்த திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலூர், ஓட்டப்பிடாரம் ஆகிய தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் அறிவித்தது தேர்தல் ஆணையம். மக்களவைத் தேர்தல் முடிந்த கையோடு கட்சியைப் பதிவு செய்ய விண்ணப்பம் அளித்து, நான்கு தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்த தினகரன், மீண்டும் பரிசுப் பெட்டி சின்னத்தைக் கேட்டு தேர்தல் ஆணையத்தை நாடினார். இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தாக்கல் செய்தார்.

இந்த நிலையில் அமமுக சார்பில் போட்டியிடும் நான்கு வேட்பாளர்களுக்கும் பரிசுப் பெட்டி சின்னத்தை ஒதுக்கி தேர்தல் ஆணையம் நேற்று (ஏப்ரல் 24) உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக தினகரனின் வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் கூறுகையில், “பரிசுப் பெட்டி சின்னத்தைக் கேட்டு, கடந்த 16ஆம் தேதி தினகரன் கடிதம் எழுதியிருந்தார். மேலும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்தும் விதமாக நான்கு தொகுதி அமமுக வேட்பாளர்களுக்குப் பரிசுப் பெட்டி சின்னத்தைத் தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

அமமுக சார்பில் அரவக்குறிச்சி தொகுதியில் சாகுல் ஹமீது, சூலூர் தொகுதியில் சுகுமார், ஓட்டப்பிடாரம் தொகுதியில் சுந்தர்ராஜன், திருப்பரங்குன்றத்தில் மகேந்திரன் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.

புதன், 24 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon