மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 24 செப் 2020

ஸ்டீவ் ஜாப்ஸின் குழந்தைகளும் ஆப்பிள் ஐபாடும்!

ஸ்டீவ் ஜாப்ஸின் குழந்தைகளும் ஆப்பிள் ஐபாடும்!

நவீனா

உலகம் முழுவதும் டிஜிட்டல்மயமாக்கப்பட்டுள்ள இன்றைய சூழலில் இணையமும் சமூக வலைதளங்களும் இல்லாமல் சக மனிதர்களோடு உரையாடுவதும், அவர்களின் வாழ்க்கை முறைகளைத் தெரிந்துகொள்வதும், நம்மை பற்றிய விஷயங்களை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்வதும் சற்றுக் கடினமான காரியமாகத்தான் மாறிவிட்டது. நேரில் சந்தித்து, பழகி, நட்பை வளர்த்துக்கொள்ளும் பலரையும் அன்றாடம் நேரில் மட்டுமே சந்தித்து உரையாடுவது என்பது இயலாத ஒன்று.

வெவ்வேறு நாடுகள், ஊர்கள், மொழிப் பின்புலத்தைச் சேர்ந்தவர்களைக்கூடச் சமூக வலைதளங்கள் ஒன்றிணைக்கின்றன. ஒருவர் மற்றவருடன் தொடர்பில் இருக்கப் பெரும் உதவி புரிகின்றன. சமூக வலைதளங்களைப் பயன்படுத்தித் தங்கள் பொருட்களை விற்பனை செய்பவர்களும், தங்கள் திறமைகளை உலகுக்கு வெளிக்காட்டியவர்களும், பல புதிய வாய்ப்புகளை உருவாக்கிக் கொண்டவர்களும் ஏராளமானவர்கள் இருக்கின்றனர்.

ஆனால், இப்படிப்பட்ட ஏதேனும் ஒரு குறிக்கோளோடு அல்லது ஏதேனும் ஒரு தேவைக்காகச் சமூக வலைதளங்களைத் திறம்படப் பயன்படுத்திவருபவர்கள் வெகு சிலரே. மீதமுள்ளவர்கள் எவர் ஒருவரையாவது கண்காணிக்கவோ அல்லது எல்லோரும் பயன்படுத்துவதால் நாம் பயன்படுத்தாமல் இருப்பது தவறு என்கிற எண்ணத்தால் தூண்டப்பட்டோ சமூக வலைதளங்களில் கணக்குகளைத் தொடங்குகின்றனர்.

சமூக வலைதளங்களில் கணக்குகளைத் தொடங்கிய பின்னர், பெரும்பாலானவர்கள் அதில் முழுமையாக மூழ்கிவிடுவதைப் பார்க்க முடிகிறது. தனது குடும்பம், உறவினர்கள் என மற்றவர்களோடு செலவிடப்பட வேண்டிய நேரம் முழுவதையும் வலைத்தளங்களிலேயே செலவிட ஆரம்பித்துவிடுகின்றனர். அதிக எண்ணிக்கையிலான வலைதள நட்புகளை ஏற்படுத்திக்கொள்வதிலும், அவர்களோடு உரையாடுவதிலும் அதிக முனைப்பு காட்ட ஆரம்பித்துவிடுகின்றனர். இந்த எண்ணம் அதீதமாக வளர்ந்து ஒரு கட்டத்தில் குடும்பத்தில் உள்ளவர்களையே தனது போக்குக்கு இடையூறாக எண்ணுமளவுக்கு முற்றிவிடுவதையும் சிலரிடம் பார்க்க முடிகிறது.

இந்த நிலையில் சமூக வலைதளங்கள் தனி மனிதனுக்கும் சமூகத்துக்கும் இடையில் ஒரு சுவராக மாறிவிடுகின்றன. வலைதளங்கள் காட்டும் சமூகத்தையே உண்மையானது என நம்பி, நிசர்சனத்தை விட்டு வெகு தொலைவுக்கு அவர்கள் நகர்த்தப்படுகிறார்கள்.

இந்த வலைதளங்களைப் பயன்படுத்துபவர்கள் சிலர் இவ்வாறு உளவியல் ரீதியாகப் பாதிக்கப்படுவதன் தாக்கம் பல தளங்களில் எதிரொலிப்பதால் இந்தச் சூழலை மேம்படுத்தவும், அதில் ஈடுபடும் மனிதர்களில் செயல்பாட்டை ஒழுங்குபடுத்தவும் வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. இந்தப் புள்ளியில்தான் இத்தகைய அறிவியல் முன்னேற்றங்களுக்குப் பின்புலமாக இருந்தவர்கள் இந்த அறிவியலை எவ்வாறு பயன்படுத்துகின்றனர் என்பதை உற்று நோக்க வேண்டியதாகிறது.

ஃபேஸ்புக்கின் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்குக்கு (Mark Zuckerberg) ஃபேஸ்புக் கணக்கு இருப்பது எல்லோரும் அறிந்த ஒன்றுதான். அவருடன் பலரும் ஃபேஸ்புக் நண்பர்களாகவும் இருக்கின்றனர். “மார்க் ஃபேஸ்புக்கைப் பயன்படுத்துகிறார், நான் மார்க்கோடு ஃபேஸ்புக் நண்பராக இருக்கிறேன்” என்றெல்லாம் பலரும் பெருமையாகப் பேசுவதைப் பார்த்திருப்போம். தனது கண்டுபிடிப்பான முகநூலை அவர் பயன்படுத்துவதில் எந்தவோர் ஆச்சரியமும் இல்லையென்றாலும், அவர் முகநூலுக்கும், தனது குடும்பத்திற்குமான பங்களிப்பை எவ்வாறு வரையறுத்துக்கொள்கிறார் என்பதே இங்கு முக்கியம்.

முகநூலையே பிரதான வாழ்வாக்கிக்கொண்டு, அதிலிருந்து ஆண்டுதோறும் கோடிக்கணக்கில் வருமானம் ஈட்டும் மார்க், தனக்குக் குழந்தை பிறந்தபோது மூன்று மாத காலம் தனது ஃபேஸ்புக் கணக்கை டிஆக்டிவேட் (Deactivate) செய்துவிட்டு தனது மனைவி மற்றும் குழந்தையுடன் மட்டுமே தனது நேரத்தைச் செலவிடப்போவதாக அறிவித்தார்.

2010இல் ஸ்டீவ் ஜாப்ஸ் (Steve Jobs) ஆப்பிள் ஐபாடுகளை அறிமுகம் செய்துவைத்து, அதன் திறன் குறித்து உரையாற்றும்போது, “தற்போது பயன்பாட்டில் இருக்கும் ஸ்மார்ட்போன்கள், லேப்டாப்களைக் காட்டிலும் இந்த ஐபாடுகள் பன்மடங்கு திறனுடன் வேலை செய்யக்கூடியவை, அவற்றைவிடச் சிறந்த பிரவுஸிங் அனுபவத்தைத் தர வல்லவை” என்று குறிப்பிட்டார். அதை உடனே வாங்கிப் பயன்படுத்துவதற்குப் பலரும் முனைப்போடு காத்திருந்தனர்.

உலகம் முழுவதும் ஆப்பிள் ஐபாடுகளின்மேல் கவனம் செலுத்திக்கொண்டிருந்த நேரம், ‘நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிகையிலிருந்து ஐபாடுகள் குறித்த பேட்டிக்காக ஒரு பத்திரிகையாளர், ஸ்டீவ் ஜாப்ஸை அணுகுகிறார். பேட்டியின் முடிவில் பத்திரிகையாளர் அவரிடம், “உங்கள் குழந்தைகள் ஐபாடுகளை மிகவும் விரும்பிப் பயன்படுத்துவார்கள்தானே?” என்று கேள்வி எழுப்புகிறார். அதற்கு ஸ்டீவ் ஜாப்ஸ், “இல்லை, எங்கள் வீட்டில் குழந்தைகள் ஐபாடுகளைப் பயன்படுத்துவதே கிடையாது. அவர்கள் எவ்வளவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும் என்பதைப் பெரியவர்கள் நாங்கள் எங்கள் கட்டுப்பாட்டிலேயே வைத்திருக்கிறோம்” என்று பதிலளித்தார்.

மனிதர்களின் தேவைகள் எவையெவை என்பதை இன்றைய சூழலில் தொழில்நுட்ப வளர்ச்சி மட்டுமே தீர்மானிக்கக்கூடிய கட்டத்துக்கு மனித வாழ்க்கை நகர்த்தப்பட்டுவிட்டது. எந்தவோர் அறிவியல் முன்னேற்றமும் குடும்பத்தையும், சமூகத்தையும் தனி மனிதனிடமிருந்து பிரித்து வைப்பதற்காக உருவாக்கப்படுவதில்லை, மாறாக அவர்களை சமூகத்தின் சிறந்த அங்கமாக மாற்றும் நோக்குடனே உருவாக்கப்படுகிறது. ஆனால், அதைப் பயன்படுத்துவோரின் கையில்தான் அதன் நோக்கம் வழிதவறிப் போக நேர்ந்துவிடுகிறது. தொழில்நுட்பத்தின் கட்டுப்பாட்டில் நாம் இருக்கிறோமா, இல்லை தொழில்நுட்பம் நம் கட்டுப்பாட்டில் இருக்கிறதா என்பதை நாம் சுயபரிசோதனை செய்து பார்க்க வேண்டிய கட்டாயமும் இன்று அதிகரித்துள்ளது.

சமூக வலைதளங்களின் மீது மோகம் எங்கிருந்து வந்தது?

வியாழன், 25 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon