மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 24 செப் 2020

உங்க பாஸ்வேர்டு ஹேக்கர்ஸ் லிஸ்ட்ல இருக்கா?

உங்க பாஸ்வேர்டு ஹேக்கர்ஸ் லிஸ்ட்ல இருக்கா?

சுமி கிருஷ்ணா

உங்க ஸ்மார்ட்போன்ல இருக்குற, ஒவ்வொரு மொபைல் அப்ளிகேஷனுக்கும் நீங்க பயன்படுத்துற பாஸ்வேர்டு எவ்வளவு ஸ்ட்ராங்கா இருக்குன்னு உங்களுக்குத் தெரியுமா? ‘123456’ இது உங்களோட பாஸ்வேர்டா இருந்தா, உங்களோட சேர்ந்து உலகம் முழுக்க கிட்டத்தட்ட 2 கோடியே 30 லட்சம் பேர் இதை பாஸ்வேர்டா பயன்படுத்துறாங்க.

டெக்னாலஜியோட வளர்ச்சி, புதிய புதிய கண்டுபிடிப்புகள்னு ஒருபக்கம் வெகு வேகமா நாம வளர்ந்திட்டே போனாலும், இன்னொருபக்கம், அதே அறிவையும் அறிவியலையும் பயன்படுத்தி, குற்றச்செயல்களையும் டெக்னிக்கலா செய்றவங்களும் அதிகமாகிட்டேதான் இருக்காங்க. பஸ்ல போகும்போது பர்ஸைத் திருடிட்டாங்க, ரோட்ல நடந்து போகும்போது செயினை அறுத்திட்டாங்க, வீடு புகுந்து பீரோல இருந்த பணத்தைத் திருடிட்டாங்க, பேங்க்கையே கொள்ளை அடிச்சிட்டாங்கனு எல்லாம் பேசின காலம் ஓடிப்போச்சு. உங்களோட வங்கிக் கணக்கில் நீங்க போட்டு வெச்சிருக்கிற பணத்தைத் திருடணும்னா, பேங்க் வரைக்கும் போய், அங்கே இருக்கிறவங்களை எல்லாம் கத்தியோ, துப்பாக்கியோ காட்டி மிரட்டி, லாக்கரை ஒடைச்சுப் பணத்தை எடுக்குற அளவுக்குக் கஷ்டப்பட வேண்டியது எல்லாம் இல்லை. ஒரு லேப்டாப் அல்லது ஒரு செல்போனை வெச்சிட்டு உட்கார்ந்த இடத்தில் இருந்தே, உங்களைப் பத்தின அத்தனை தகவல்களையும் ஒருத்தரால திருட முடியும். அதை வெச்சு உங்களுக்குத் தெரியாமலோ, சந்தேகம் வராமலோ உங்களோட பணத்தை எல்லாம் கொள்ளையடிக்க முடியும்.

பேங்க் அக்கவுன்ட்ல பாதுகாப்பா வைக்கப்பட்ட பணத்துக்கு, டிஜிட்டல் பாதுகாப்பு ஒரு பாஸ்வேர்டு மட்டும்தான். இணையதள பயன்பாட்டாளர்களோட எண்ணிக்கைல சீனாவுக்கு அடுத்தபடியா இரண்டாவது இடத்துல இந்தியா இருக்கு. மொத்த மக்கள்தொகைல 30 சதவிகிதம் பேர், அதாவது கிட்டத்தட்ட 37 கோடி மக்கள் தினமும் இன்டர்நெட் பயன்படுத்துறாங்க. அதே மாதிரி இந்தியாவில சைபர் க்ரைம்களோட எண்ணிக்கையும் அதிகமாகிட்டே வருது. இதுக்கு பல காரணங்கள் இருந்தாலும் ஒரு முக்கிய காரணம், உங்க ஸ்மார்ட்போனை நீங்க சரியா பாதுகாக்காததுதான்.

அழகு மட்டும் போதுமா?

ஒரு ஸ்மார்ட்போன் பார்க்க அழகா இருக்கணும்னு, அதுக்கு அழகான உறை, டெம்பர் கிளாஸ்னு வாங்கி மாட்டி அதைப் பத்திரப்படுத்துறதுலயும், அழகுபடுத்துறதுலயும் காட்டுற ஆர்வத்தைப் பலரும் போன்ல இருக்கிற தகவல்களைப் பாதுகாக்கப் பயன்படுத்துறது இல்ல. அதனால, வெளிய சொல்லக்கூட முடியாத பல குற்றங்களும் தினம் தினம் நடந்துகிட்டு இருக்கு. யாரும் நம்மளோட ஸ்மார்ட்போனை ஹேக் செய்ய முடியாத அளவுக்கு நாம பயன்படுத்துற பாஸ்வேர்டு இருக்க வேண்டியது அவசியம்.

எளிமையில் இருக்கு ஆபத்து!

NCSC எனப்படும், இங்கிலாந்தில் உள்ள National Cyber Security Center வெளியிட்டுள்ள ஓர் ஆய்வு அறிக்கையின்படி, பல மில்லியன் மக்கள் ஒரே பாஸ்வேர்டு பயன்படுத்துறாங்க. அது ஹேக் செய்ய ரொம்ப எளிமையாகவும் இருக்கு. அவங்க கணக்குப்படி 2 கோடியே 32 லட்சம் மக்கள் ‘123456’ என்பதையும் 77 லட்சம் மக்கள் ‘123456789’ என்கிறதையும் பாஸ்வேர்டா பயன்படுத்துறாங்க. கீபோர்ட்ல இருக்க முதல் வரிசை ஆங்கில எழுத்துகளான ‘qwerty’ங்கிற வார்த்தைய 38 லட்சம் மக்கள் பயன்படுத்துறாங்க. இது பரவாயில்லை; password-ங்கிறதயே பாஸ்வேர்டா 36 லட்சம் மக்கள் பயன்படுத்துறாங்க. இதே மாதிரி ‘1111111’, 12345678 ,abc123, 1234567, password1, 12345, 1234567890, 123123, 000000, 1234, 1qw3e4r5t, Qwertyuiop,123 போன்றவற்றையும் பல லட்சம் மக்கள் பாஸ்வேர்டா வெச்சிருக்காங்க. இந்த லிஸ்ட்ல சுவாரஸ்யமான சில வார்த்தைகளும் இருக்கு.

கிட்டத்தட்ட 10 லட்சம் மக்கள் Monkeyங்கிற வார்த்தையையும், 9 லட்சம் மக்கள் Dragonங்கிற வார்த்தையையும், யாருக்கும் தெரியாத சீக்ரட்னு நெனச்சு பயன்படுத்திட்டு இருக்காங்க. 'iloveyou'ங்கிறத பாஸ்வேர்டா பயன்படுத்துறவங்களோட எண்ணிக்கை மட்டும் 16 லட்சம் .

ashley, michael, daniel, jessica, charlie இவை எல்லாம், லட்சக்கணக்கானவர்களால் பாஸ்வேர்டா யூஸ் பண்ணப்படுற பொதுவான பெயர்கள். liverpool, chelsea, arsenal, manutd, everton இவை எல்லாம் பல்லாயிரக்கணக்கான ஃபுட்பால் ரசிகர்கள் பயன்படுத்துற வார்த்தைகள். பொதுவா பயன்படுத்தப்படுற டாப் 5 மியூசிஷியன்ஸ் சம்பந்தப்பட்ட வார்த்தைகள்ல blink182, 50cent, eminem, metallica, slipknot போன்றவை இடம் பெற்றிருக்கு. superman, naruto, tigger, pokemon, batman, இவை Top five லிஸ்ட்ல இருக்கிற கேரக்டர்ஸோட பெயர்கள்.

இப்படி யாருக்கும் தெரியாதுன்னு நம்பி சிலர் பயன்படுத்துற சீக்ரெட் பாஸ்வேர்டு, அதே நம்பிக்கையோட பல காலமா பலரும் பயன்படுத்திட்டு இருக்காங்க. இது உங்களைப் பற்றிய தகவல்களை திருடுறதுக்கும், தவறா பயன்படுத்துறதுக்கும் எளிமையான வழிகளை ஹேக்கர்களுக்குத் திறந்துகொடுக்குது. NCSC வெளியிட்ட ஆய்வு முடிவுகளோட அடிப்படைல வெறும் 15% இணைய பயன்பாட்டாளர்கள் மட்டும்தான் பாதுகாப்பா இணையத்தை பயன்படுத்துறாங்க. அதிர்ச்சியூட்டும் விதமா 42% பேர் இன்டர்நெட் வழியான fraud மூலமா தங்களோட பணத்தை இழந்திருக்காங்க. மிகக் குறைவான மக்கள் மட்டுமே வலிமையான கடவுச்சொற்களைப் பயன்படுத்துறதா ஆய்வு முடிவுகள் சொல்லுது.

ஐயயோ! நம்ம பாஸ்வேர்டுகூட லிஸ்ட்ல இருக்கேனு பயப்படாம, உங்களால ஞாபகம் வைக்க முடிந்த, யாராலும் கண்டுபிடிக்க முடியாத மூன்று வார்த்தைகளை இணைத்து உங்களுடைய பாஸ்வேர்டை உருவாக்கிக்கோங்க. சொற்கள், குறியீடுகள், எண்கள் ஆகியவற்றின் கலவையா இருந்தா பாஸ்வேர்ட் ஸ்ட்ராங்கா இருக்கும்.

ஸ்ட்ராங் பாஸ்வேர்டு என்பது நீங்க ஏமாற்றப்படாம இருக்கவும், பாதுகாப்பான இணையதளப் பயன்பாட்டுக்கும் நிச்சயம் உங்களுக்கு உதவியா இருக்கும்.

வியாழன், 25 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon