மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 23 ஜன 2021

புகளூர் உயர்மின் கோபுரத் திட்டம்: நீதிமன்றம் தடை!

புகளூர் உயர்மின் கோபுரத் திட்டம்: நீதிமன்றம் தடை!வெற்றிநடை போடும் தமிழகம்

புகளூரிலிருந்து கொண்டு செல்லப்படும் இரண்டு உயர்மின் கோபுரத் திட்டங்களைச் செயல்படுத்த இடைக்காலத் தடை விதித்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நேற்று உத்தரவிட்டுள்ளது.

உயர்மின் கோபுரங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் விவசாயச் சங்கங்களின் கூட்டு இயக்கம் சார்பாக உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் கரூர் மாவட்டம், கோடந்துரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பழனிசாமி தாக்கல் செய்த பொதுநல மனுவில், “திருப்பூர் மாவட்டம் புதிய புகளூரிலிருந்து பழைய புகளூர் (பரமத்தி) வரையும், புதிய புகளூரிலிருந்து திருவலம் வரை பவர்கிரீட் நிறுவனத்தால் இரண்டு உயர்மின் கோபுர திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளன.

இதை விளைநிலங்களில் அமைப்பதற்கு முன்பாக உயர்மின் கோபுரங்கள் அமைக்கப்படும் இடங்களுக்கு அருகில் வசிக்கும் உழவர்கள் மற்றும் உயிரினங்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை தயாரிக்காமல் திட்டங்களைச் செயல்படுத்த கூடாது” என்று தெரிவித்திருந்தார்.

இவ்வழக்கு நேற்று (ஏப்ரல் 24) நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, இரண்டு திட்டங்களையும் 50 சதவிகித்துக்கு மேல் திட்டப்பணிகள் முடிந்திருந்தால் அதைத் தொடரலாம் எனவும், அதற்குக் கீழே திட்டப்பணிகள் இருந்தால் அந்தத் திட்டங்களை நிறுத்திவைக்க வேண்டும் (மேற்கண்ட இரண்டு திட்டங்களிலும் 10 சதவிகித திட்டப்பணிகள் மட்டுமே நிறைவு பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது) எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அதேசமயம் உயர்மின் கோபுரங்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், மாற்று வழியில் கேபிள்களாகச் செயல்படுத்துவது குறித்தும் மத்திய, மாநில அரசுகள் மற்றும் பவர்கிரீட் நிறுவனம் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை வரும் ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். 10 சதவிகிதப் பணிகள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டுள்ளதால் உயர் நீதிமன்றத்தின் உத்தரவால் அத்திட்டத்தின் பணிகள் நிறுத்திவைக்கப்படும்.

வியாழன், 25 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது