மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 3 ஜூலை 2020

இலங்கை குண்டுவெடிப்பு: தமிழகத்தில் அஞ்சலி!

இலங்கை குண்டுவெடிப்பு: தமிழகத்தில் அஞ்சலி!

இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்குத் தமிழகத்தில் சென்னை உட்பட பல்வேறு இடங்களில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இலங்கையில் ஈஸ்டர் தினமான கடந்த ஞாயிறு அன்று பல்வேறு இடங்களில் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 320க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அங்கு தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இந்தத் தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் பொறுப்பேற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையில் கொழும்புவில் செய்தியாளர்களைச் சந்தித்த அந்நாட்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே, இலங்கை குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக இந்திய உளவுத் துறை முன்கூட்டியே எச்சரித்ததாகத் தெரிவித்திருக்கிறார். தொடர்ந்து பேசிய அவர், இந்தத் தாக்குதல் தொடர்பான விசாரணையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. நியூசிலாந்து மசூதி தாக்குதல் சம்பவத்துக்கும் இந்த தாக்குதலுக்கும் தொடர்பு இருக்க வாய்ப்பு இருக்கிறது. எனினும் அதுபற்றி உறுதியாகக் கூற முடியாது. முன்னெச்சரிக்கை விடுத்தும் பாதுகாப்பைப் பலப்படுத்தாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க நேரிடும்.

இந்தத் தாக்குதலில் வெளிநாட்டினரின் சதி இருப்பதாகக் கூறப்படுவதால், சர்வதேச நாடுகளின் உதவியை கோரியுள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.

இலங்கைத் தாக்குதலைத் தொடர்ந்து தமிழக கடலோர பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருக்கிறது. கடல் மார்க்கமாகத் தாக்குதல் நடத்தப்படலாம் என்று உளவுத் துறை எச்சரிக்கை விடுத்ததையடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. சென்னை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் கடற்படைக்குச் சொந்தமான கப்பல்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளன.

இந்த நிலையில் பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று கடற்படை அதிகாரிகளுடன் பாதுகாப்பு தொடர்பாக ஆலோசனை நடத்தியுள்ளர். இதில், கடற்படை தளபதி சுனில் லன்பா, கடற்படை துணைத் தளபதி கரம்பீர் சிங் மற்றும் கடலோரக் காவல்படை இயக்குநர் ஜெனரல் ராஜேந்திர சிங் உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர்.

இந்த நிலையில் இலங்கையில் உயிரிழந்தவர்களுக்குத் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அஞ்சலி செலுத்தப்பட்டது. இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்தைக் கண்டித்து திருச்செந்தூர் ஆலந்தலை மீனவர்கள் நேற்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் கூட்டமைப்பு சார்பில், திருச்செந்தூர் தேரடி திடலில் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டிருக்கிறது.

இதுபோன்று சென்னை பெசன்ட் நகரில் பொதுமக்கள் மெழுகுவத்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். அப்போது அவர்கள் தண்ணீர் தீவு என்று அழைக்கக்கூடிய இலங்கை கண்ணீரால் நிரம்பி இருக்கிறது என்று கூறி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்தனர்.

திருநெல்வேலி மாவட்டக் கடற்கரை கிராமங்களான உவரி, பெருமணல், கூத்தங்குழி, கூட்டப்புளி, உள்ளிட்ட கிராம மக்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல், குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி நிறைவேற்றினர். பின்னர், மெளன ஊர்வலம் சென்று அஞ்சலி செலுத்தினர்.

புதன், 24 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon