மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 8 ஜூலை 2020

இணையத்தில் தொழில் வாய்ப்புகள்! - காம்கேர் கே.புவனேஸ்வரி

இணையத்தில் தொழில் வாய்ப்புகள்! - காம்கேர் கே.புவனேஸ்வரி

எந்தப் பாதையில் உங்கள் பயணம்? - 50

கம்ப்யூட்டர் மற்றும் இன்டர்நெட்டை வைத்துக் கொண்டு சொந்தமாகச் செய்யக்கூடிய சில தொழில்வாய்ப்புகளை அறிமுகப்படுத்துகிறேன். இதற்காகவே ‘படித்த வேலையா, பிடித்த வேலையா?’ என்ற புத்தகத்தை எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகம் மூலம் வெளியிட்டுள்ளேன். அதிலிருந்து சில குறிப்புகளை இங்கு பட்டியலிடுகிறேன்.

கம்ப்யூட்டரில் டைப்பிங் / டேட்டா என்ட்ரி

கம்ப்யூட்டரில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் டைப் செய்யத் தெரிந்திருந்தால், பதிப்பகங்கள், பத்திரிகைகள், டேட்டா என்ட்ரி நிறுவனங்கள் போன்றவற்றுக்கு ஜாப் வொர்க் செய்து கொடுத்து மாதம் 10,000 ரூபாய் வரை வீட்டிலிருந்தபடி சம்பாதிக்கலாம்.

கம்ப்யூட்டரில் அக்கவுன்ட்ஸ்

கம்ப்யூட்டரில் அக்கவுன்ட்டிங் சாஃப்ட்வேர்களைக் கற்றுவைத்துக் கொண்டால், மாநகரங்களைத் தவிர்த்துச் சிறிய கிராமப்புறங்களிலும், சிறிய நகரங்களிலும் வீட்டிலிருந்தபடி சிறிய கடைகளில், வியாபார நிறுவனங்களில், கம்ப்யூட்டர் இல்லாத இடங்களில் அவர்களை அணுகி, அவர்களது அக்கவுன்ட்ஸை கம்ப்யூட்டரில் பராமரிக்கும் வேலையை வாங்கிச் செய்யலாம்.

கம்ப்யூட்டர் பயிற்சி மையங்கள்

மனிதர்கள் இருக்கும்வரை கல்வியும் இருக்கும். அது போல, கம்ப்யூட்டர் பயிற்சி மையங்களும் இருக்கும். பள்ளியிலும், கல்லூரியிலும் கம்ப்யூட்டர் கற்றுக் கொடுக்கப்பட்டாலும், பயிற்சி மையங்களில் சேர்ந்து பயிற்சி எடுத்துக் கொள்வது என்பது இன்றைய காலகட்டத்தில் அவசியமாக உள்ளது.

வேலைக்குச் செல்பவர்களும், இல்லத்தரசிகளும், வயதானவர்களும் கூட இன்று கம்ப்யூட்டரின் அடிப்படையைக் கற்றுக் கொள்ள ஆர்வமாக உள்ளனர். அவர்களும் நம்பி இருப்பது கம்ப்யூட்டர் பயிற்சி மையங்களைத்தான்.

நல்ல திறமையான, அனுபவமிக்க ஆசிரியர்களைக் கொண்டு நடத்தப்படும் கம்ப்யூட்டர் பயிற்சி மையங்களுக்கு என்றும் அழிவே இல்லை. எனவே, கம்ப்யூட்டர் பயிற்சி மையங்களைத் தொடங்கி நடத்துவதும், பயிற்சி மையங்களில் வேலைக்குச் செல்வதும் இன்றையச் சூழலில் என்றில்லாமல், என்றுமே வரவேற்கப்படும் விஷயமாகவே இருக்கும்.

மெடிக்கல் டிரான்ஸ்கிரிப்ஷன்

வெளிநாடுகளில் உள்ள மருத்துவமனைகளில் பணிபுரியும் டாக்டர்கள், அன்றாடம் அவர்கள் பார்க்கும் நோயாளிகளின் குறிப்புகளையும், அதற்கான மருத்துவப் பணிகள் பற்றிய செய்திகளையும் கம்ப்யூட்டரில் பதிவு செய்து விட்டுக் கிளம்பி விடுவர். அவர்களது பகல் பொழுதில் நடைபெறும் மருத்துவப் பணிகளின் குறிப்புகளை நம் நாட்டில் இருக்கும் நபர்கள் புரிந்துகொண்டு ரிப்போர்ட்டுகளைத் தயார் செய்துவிடுவார்கள். இந்த வேலையை நம் நாட்டில் இரவு நேரங்களில் செய்து முடித்து, அவர்களது பகல் பொழுதில், அதாவது அடுத்த நாள் காலையில் டாக்டர்களின் பார்வைக்கு ரிப்போர்ட்டுகள் சென்றுவிடுமாறு அனுப்பி வைக்கப்படும். இவ்வாறு டாக்டர்களின் குறிப்புகளை வைத்துக் கொண்டு ரிப்போர்ட்டுகளைத் தயார் செய்யும் வேலைக்குப் பெயர்தான் மெடிக்கல் டிரான்ஸ்கிரிப்ஷன். இந்தப் பணியையும் வீட்டில் இருந்தபடி செய்து கொடுக்க முடியும்.

இ-பப்ளிஷிங்

பப்ளிஷிங் என்றால் தகவல்களைப் பதிப்பித்தல் என்றும், வெளியிடுதல் என்றும் பொருள் கொள்ளலாம். இ-பப்ளிஷிங் என்றால் இன்டர்நெட்டில் தகவல்களை வெளியிடும் முறை என்று எடுத்துக்கொள்ளலாம். அச்சில் உள்ள புத்தகங்களை வெப்சைட்டில் இ-புத்தகங்களாகப் பதிப்பிக்கும் முறைக்கு இ-பப்ளிஷிங் என்று பெயர். இந்தப் பணியையும் எளிதாகக் கற்றுக் கொண்டு, இ-புத்தகங்களை வெளியிடும் பதிப்பகங்களை அணுகி ஆர்டர் எடுத்துச் சம்பாதிக்கலாம்.

இப்போதெல்லாம் அமேசான் போன்ற ஆன்லைன் வெப்சைட்டுகளில் இ-புக்ஸ் வெளியிடுவதில் பலர் ஆர்வம் காட்டுகிறார்கள். அதுபோன்ற தளங்களில் எழுத்தாளர்களின் புத்தகங்களை இ-புக்ஸ்களாக வெளியிட ஆலோசனை கொடுத்தும் பணம் சம்பாதிக்கலாம்.

ஆன்-லைன் டியூஷன்

குறிப்பாகப் பள்ளி மாணவர்களுக்கு, டியூஷனுக்குச் செல்வது என்பது முழு நேரப் பள்ளி நேரத்துக்கு ஈடாக இருக்கிறது என்று கூடச் சொல்லலாம். பள்ளி முடித்து விட்டு வந்ததும், இயற்பியல், வேதியல், கணிதம் என்று வரிசையாக டியூஷன் செல்வதற்கும், வருவதற்கும்தான் நேரம் இருக்கிறது.

இன்னும் சொல்லப் போனால், விடியற்காலை டியூஷன்களும் இருக்கின்றன. எல்லா சப்ஜெக்ட்டுகளுக்கும் ஒரே இடத்தில் டியூஷன் மாஸ்டர்கள் இருந்துவிட்டால் பரவாயில்லை. இல்லையேல் அதற்கும் வெவ்வேறு இடங்களுக்கு அலைய வேண்டியிருக்கும். இது போன்ற சங்கடங்களைத் தவிர்க்க கம்ப்யூட்டர், இன்டர்நெட் தொழில்நுட்ப வளர்ச்சியின் உச்ச கட்டத்தில் இருக்கும் இன்று உட்கார்ந்த இடத்திலிருந்தே வகுப்புகளை எடுக்கவும், வகுப்புகளைக் கவனிக்கவும் வாய்ப்புகள் வந்துவிட்டன.

ஆன் லைன் டியூஷன் என்ற வசதிதான் அது. இதை டியூஷன் எடுக்க ஆர்வம் இருக்கின்ற யார் வேண்டுமானாலும் கற்றுக்கொண்டு வீட்டிலிருந்தபடி சம்பாதிக்க முடியும்.

டிடிபி

காகிதங்களில் தகவல்களை வடிவமைக்க உதவுகின்ற தொழில்நுட்பத்துக்கு டிடிபி என்று பெயர். டிடிபி என்பதை ஆங்கிலத்தில் DTP என்று அழைக்கிறோம். Desk TOP Publishing என்பதன் சுருக்கமே DTP எனப்படுகிறது.

பெரும்பாலான பதிப்பகங்கள் இன்று தங்கள் புத்தகங்களை லே-அவுட் செய்யும் பணியை விரைவாக முடித்துத் தருகின்ற தனியார் டிடிபி பணியாளர்களைக் கொண்டே செய்து முடிக்கின்றன. இத்தொழிலில் நேர்மையும், குறித்த நேரத்துக்குள் பணியை முடிக்கின்ற திறனும் இருந்துவிட்டால் போதும், பணத்தை அள்ளலாம்.

டெக்ஸ்டைல் டிசைனிங்

நெசவு செய்யக்கூடிய எல்லாவிதமான துணி வகைகளிலும், கம்ப்யூட்டர் மூலம் டிசைன் செய்வதற்கென்றே கண்டுபிடிக்கப்பட்ட தொழில் நுட்பம் ‘டெக்ஸ்டைல் டிசைனிங்’ என்றழைக்கப்படுகிறது. கிரியேடிவிடிதான் இத்துறையின் மிகப் பெரிய முதலீடு. போட்டோஷாப் போன்ற சாஃப்ட்வேர்களிலேயே டெக்ஸ்டைல் டிசைனிங் செய்ய முடியும்.

வெப் டிசைனிங்

இன்டர்நெட்டில் வெப் சைட்டுகளில் உள்ள வெப் பக்கங்களில் தகவல்களை முறையாக வடிவமைத்து வெளிப்படுத்தும் வேலையே வெப் டிசைனிங் எனப்படுகிறது. கம்ப்யூட்டர் மற்றும் இன்டர்நெட் மொழிகளைக் கற்றுக் கொண்டு, கிரியேடிவிடியுடன் செயல்பட்டால் போதும், இத்தொழிலிலும் நல்ல வருமானம் பார்க்க முடியும்.

கட்டட வடிவமைப்பில் கம்ப்யூட்டர்

கட்டட வடிவமைப்பிலும் கம்ப்யூட்டர் தனக்கென ஒரு முத்திரை பதித்து வருகிறது. இதற்கு CAD, Auto CAD போன்ற சாஃப்ட்வேர் உதவுகிறது. இவற்றைக் கற்றுக் கொண்டால், ரியல் எஸ்டேட் துறையில் கட்டட கான்ட்ராக்டர்களை அணுகி ஆர்டர் எடுத்து வருமானம் ஈட்ட முடியும்.

மல்டி மீடியா

நமது கற்பனைக்கு எட்டாத ஒரு கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுப்பதுதான் அனிமேஷன். உதாரணத்துக்குக் குரங்கைப் போன்ற ஒரு படத்தை அச்சு அசலாக வரைவதை விடக் குரங்கைக் கார்ட்டூனாக்கி வெளிப்படுத்தும்போது கிடைக்கின்ற உயிர்ப்பு அதிகப்படியானது. அனைவரையும் கவர்ந்திழுக்கக்கூடிய சக்தி வாய்ந்தது.

இப்படி ஓர் உருவத்தை வரைந்தோ அல்லது போட்டோ எடுத்தோ வெளிப்படுத்தும்போது, அது அசைவற்ற ஒரு படமாக மட்டுமே கருதப்படுகிறது. இதே படத்தை அசைவுகளுடன் வெளிப்படுத்தும்போது, அது அனிமேஷன் செய்யப்பட்ட படமாகிவிடுகிறது. அல்லது அனிமேஷனுடன் கூடிய படமாகிவிடுகிறது.

மல்டி மீடியாவின் அடிப்படை ஆதாரமாக உள்ள அனிமேஷன் துறையில் ஏராளமான வேலை மற்றும் தொழில் வாய்ப்புகள் உள்ளன.

கிரியேடிவிடி

இது ஒன்றுதான் இத்துறையின் மிகப்பெரிய முதலீடு. கார்ட்டூன் அனிமேஷன் நிறுவனங்கள், கல்வி சம்பந்தப்பட்ட மல்டிமீடியா சிடிக்கள் தயாரிக்கும் நிறுவனங்கள், APP தயாரிக்கும் நிறுவனங்களை அணுகினால், இத்துறையில் பெரிய அளவில் சம்பாதிக்க முடியும்.

மாணவச் செல்வங்களுக்கு வாழ்த்து!

நேர்மை, உழைப்பு, நேரம் தவறாமை, சமயோசிதம் மற்றும் கிரியேடிவிடியுடன் உங்கள் திறமை, படிப்பு, ஆர்வம் இவற்றை அடிப்படையாக வைத்து வாழ்க்கையில் ஜெயித்துக்காட்டுங்கள்.

வாழ்த்துகள் மாணவச் செல்வங்களே!

கற்போம்… கற்பிப்போம்!

(முற்றும்)

செவ்வாய், 23 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon