மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 3 ஜூலை 2020

உள்ளாட்சித் தேர்தல் தாமதத்துக்கு திமுகதான் காரணம்: தமிழிசை

உள்ளாட்சித் தேர்தல் தாமதத்துக்கு திமுகதான் காரணம்: தமிழிசை

உள்ளாட்சித் தேர்தல் தள்ளிப்போவதற்கு திமுகதான் காரணம் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழகத்தில் உள்ளாட்சிப் பொறுப்புகள் கடந்த 2016, அக்டோபர் 24ஆம் தேதி முதல் காலியாக இருந்து வருகிறது. உள்ளாட்சித் தேர்தலை உடனடியாக நடத்தக்கோரி கே.கே.மகேஷ் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில், நேற்று முன்தினம் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்த தமிழக தேர்தல் ஆணையம், தேர்தலை நடத்த மேலும் மூன்று மாதங்கள் கால அவகாசம் வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது. இதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்ததோடு, உடனடியாகத் தேர்தலை நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

இந்த நிலையில் நேற்று (ஏப்ரல் 23) தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, “உள்ளாட்சித் தேர்தல் தள்ளிப்போனதற்குக் காரணமே திமுகதான். அவர்கள்தான் நீதிமன்றத்துக்குச் சென்று இதை இழுத்தடித்தனர். திமுக ஆட்சிக்காலத்திலும் பலமுறை உள்ளாட்சித் தேர்தல் குறிப்பிட்ட காலத்துக்குள் நடக்காமலும் போயிருக்கிறது” என்று குற்றம்சாட்டினார்.

உள்ளாட்சித் தேர்தல் விரைவாக நடைபெற வேண்டும் என்பதில் எங்களுக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால், எதற்காக தள்ளிப்போனது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும் என்ற தமிழிசை, “வார்டு மறுவரையறை செய்து, உள்ளாட்சித் தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட்டு தேர்தல் சரியாக நடைபெற வேண்டும். எவ்வளவு விரைவாக நடத்த முடியோ அவ்வளவு விரைவாக நடத்தினால் நல்லது” என்று கருத்து தெரிவித்தார். ஓட்டப்பிடாரம் தொகுதி இடைத் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

செவ்வாய், 23 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon