மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 24 ஏப் 2019

ரஞ்சன் கோகாய் மீது பொய்ப்புகார்: ஆவணங்கள் சமர்ப்பிப்பு!

ரஞ்சன் கோகாய் மீது பொய்ப்புகார்: ஆவணங்கள் சமர்ப்பிப்பு!

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருப்பது பொய்யானது என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள வழக்கறிஞர் உத்சய் பெயின்ஸ் அதற்கான ஆவணங்களை இன்று நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தினால் ரூ.1.5 கோடி தருவதாகச் சிலர் தன்னை அணுகியதாகவும், ஆனால் அதைத் தான் வாங்க மறுத்துவிட்டதாகவும் 20ஆம் தேதி தனது பேஸ்புக் பக்கத்தில் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் உத்சய் பெயின்ஸ் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். தலைமை நீதிபதியை ராஜினாமா செய்ய வைப்பதற்கான முயற்சியாக அவர் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருப்பதாகவும், இதுதொடர்பான ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பேன் என்றும் அவர் கூறியிருந்தார். இதன்படி அவர் உச்சநீதிமன்றத்தில் ஏப்ரல் 22ஆம் தேதி தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிபதிகள், ஏப்ரல் 24ஆம் தேதிக்குள் இதுகுறித்து உரிய விளக்கம் அளிக்குமாறு நேற்று நோட்டீஸ் அனுப்பியிருந்தனர்.

இதனையடுத்து வழக்கறிஞர் உத்சய் பெயின்ஸ் இன்று காலையில் உச்ச நீதிமன்றத்தில் தன்னிடம் பேரம் பேசியதற்கான ஆவணங்களை சீலிடப்பட்ட கவரில் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார். இந்த விவகாரத்தில் பல குற்றச்சாட்டுகள் இருப்பதாகவும், இதுதொடர்பாக ஆலோசிக்க சிபிஐ இயக்குநர், டெல்லி காவல் ஆணையர் மற்றும் புலனாய்வுப் பிரிவு இயக்குநர் இன்று நண்பகல் 12.30 மணிக்கு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகுமாறும் நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு உத்தரவிட்டது. இதனடிப்படையில் மூவரும் இன்று நண்பகல் 12.30 மணிக்கு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி நீதிபதிகளைச் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு மீண்டும் 3.30 மணியளவில் இந்த வழக்கின் விசாரணை தொடங்கியது. வழக்கறிஞர் உத்சய் பெயின்ஸ் நீதிமன்றத்தில் அளித்துள்ள தகவல்களை வாக்குமூலமாகப் பதிவு செய்து அளிக்க வேண்டும் அப்போது என நீதிபதிகள் உத்தரவிட்டனர். நாளை காலை வாக்குமூலம் தாக்கல் செய்வதாக அவர் உறுதியளித்தார். ”தலைமை நீதிபதி மீதான குற்றச்சாட்டு பொய்யாக மட்டும் இருந்தால் பொறுத்துக்கொள்ள மாட்டோம்; குற்றச்சாட்டின் உண்மைத் தன்மையைக் கண்டறியவில்லை எனில் நீதித்துறை மீதான நம்பகத்தன்மை போய்விடும்” என்று கூறிய அருண் மிஸ்ரா வழக்கு விசாரணை நாளை தொடரும் என்று கூறி ஒத்திவைத்தார்.

ரஷ்யா செல்லும் ரஞ்சன் கோகாய்?

பாலியல் புகாரில் சிக்கியுள்ள இந்தியத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மே 14 முதல் 18 வரை ரஷ்யாவில் நடைபெறும் செயிண்ட் பீட்டர்ஸ்பெர்க் சர்வதேச சட்ட மன்றத்தின் மாநாட்டில் கலந்துகொள்ள ரஷ்யா செல்லவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ரஞ்சன் கோகாய் இந்த மாநாட்டுக்கு சென்றார் என்றால் இந்தியத் தலைமை நீதிபதி ஒருவர் இந்த மாநாட்டில் பங்கெடுப்பது இதுவே முதன்முறையாகும். 2017ஆம் ஆண்டில் நடைபெற்ற இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி இம்மாநாட்டில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

4 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

காவலருடன் வாக்குவாதம்: வழக்கறிஞர் விரைவில் கைது!

4 நிமிட வாசிப்பு

காவலருடன் வாக்குவாதம்: வழக்கறிஞர் விரைவில் கைது!

புதன் 24 ஏப் 2019