மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 3 ஜூலை 2020

மோடியை எதிர்த்து பிரியங்கா: காங்கிரஸ் திட்டம்!

மோடியை எதிர்த்து பிரியங்கா: காங்கிரஸ் திட்டம்!

பிரதமர் மோடியை எதிர்த்து வாரணாசியில் பிரியங்கா காந்தி போட்டியிடுவதற்கு 50:50 வாய்ப்புகள் இருப்பதாகக் காங்கிரஸ் கட்சி வட்டாரத்திலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் சகோதரியான பிரியங்கா காந்தி இந்த ஆண்டு ஜனவரியில் தன்னை அரசியலில் முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். உத்தரப் பிரதேச கிழக்கு பிராந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார். மக்களவைத் தேர்தலையொட்டி பிரியங்கா காந்தி நாடு முழுவதும் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் பிரதமர் நரேந்திர மோடியை எதிர்த்து அவர் போட்டியிடலாம் எனக் கடந்த இரு வாரமாக யூகங்கள் பரவி வருகிறது. ராகுல் காந்தி அனுமதித்தால் தான் வாரணாசியில் போட்டியிடுவேன் என்று வயநாட்டில் பிரியங்கா காந்தியும் கூறியிருந்தார். மேலும், பிரியங்கா காந்தி வாரணாசியில் போட்டியிட வேண்டும் என்ற கோரிக்கை காங்கிரஸ் தொண்டர்களிடம் வலுத்து வருகிறது.

இந்நிலையில் பிரியங்கா காந்தியை வாரணாசியில் போட்டியிட வைப்பது குறித்து காங்கிரஸ் மேலிடத்தில் ஆலோசனைகள் நடந்து வருவதாக அக்கட்சி வட்டாரத்திலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பெயர் குறிப்பிட விரும்பாத நபர் ஒருவர் இதுகுறித்து என்.டி.டி.வி. ஊடகத்திடம் பேசுகையில், “காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் பிரியங்கா காந்தியை வாரணாசியில் போட்டியிட வைப்பது குறித்து ஆலோசித்து வருகின்றனர். அவர் வாரணாசியில் போட்டியிடுவதற்கு 50:50 வாய்ப்புகள் உள்ளன. தேர்தலில் கிடைக்கும் வெற்றி தோல்விகளைப் பற்றி பிரியங்கா காந்திக்கு எந்தவிதமான கவலையும் இல்லை என்று அவர் நிர்வாகிகளிடம் தெரிவித்துள்ளார்” என்றார்.

இதுதொடர்பாக கடந்த வாரத்தில் ராகுல் காந்தியிடம் தி இந்து ஊடகம் கேள்வியெழுப்பியபோது, “உங்களுடைய சஸ்பென்ஸுக்கு நான் பதில் சொல்லாமல் கடந்து செல்கிறேன். சஸ்பென்ஸ் என்பது எப்போதுமே கெட்ட விஷயம் அல்ல” என்று சூசகமாகப் பதிலளித்திருந்தார். இந்நிலையில் தற்போது பிரியங்கா காந்தியை வாரணாசியில் களமிறக்கக் காங்கிரஸ் ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. வாரணாசி தொகுதிக்கு ஏப்ரல் 22 முதல் 29 வரை வேட்பு மனுத்தாக்கல் நடைபெறுகிறது. கடைசி கட்டத் தேர்தல் நடக்கும் மே 19ஆம் தேதி வாரணாசிக்கு வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலைப் பொறுத்தவரையில் வாரணாசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி 5,81,022 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றிருந்தார். 2,09,238 வாக்குகளைப் பெற்று இரண்டாவது இடத்தை ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் பிடித்திருந்தார். காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்ட அஜய் ராய் 75,614 வாக்குகளைப் பெற்று மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டார். இதனால் இத்தொகுதியில் இம்முறை பிரியங்கா காந்தியை வேட்பாளராகக் களமிறக்கி போட்டியை அதிகரிக்கலாம் என்ற எண்ணத்தில் காங்கிரஸ் தலைமை ஆலோசனையில் ஈடுபட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

புதன், 24 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon