மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 3 ஜூலை 2020

காலாவைப் புகழும் பாலிவுட் இயக்குநர்!

காலாவைப் புகழும் பாலிவுட் இயக்குநர்!

பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் இயக்குநர் பா.இரஞ்சித்தை அழைத்து அவரது காலா திரைப்படம் குறித்துப் பாராட்டியுள்ளார்.

பாலிவுட் இயக்குநர்களில் தமிழ் சினிமாவை உன்னிப்பாக கவனித்துவருபவர்களில் முக்கியமானவர் அனுராக் காஷ்யப். அவரது முக்கியத் திரைப்படமான கேங்ஸ் ஆஃப் வாஸிபர் திரைப்படத்திற்கு சசிக்குமார் இயக்கத்தில் வெளியான சுப்பிரமணியபுரம்தான் ஊக்கமாக இருந்ததாகக் கூறியுள்ளார். தமிழ் சினிமா இயக்குநர்களின் பலருடன் தொடர்பில் இருக்கும் அனுராக் இமைக்கா நொடிகள் திரைப்படம் மூலம் தமிழில் நடிகராக அறிமுகமானார்.

தற்போது பா.இரஞ்சித்தை மும்பைக்கு அழைத்து சந்தித்துள்ளார். இரஞ்சித் தான் இயக்கும் படங்கள், தயாரிக்கும் படங்கள் குறித்துப் பகிர்ந்துள்ளார். அனுராக் காலா படத்தைப் பற்றி மிகவும் சிலாகித்து பேசியுள்ளார்.

இந்தச் சந்திப்பை தொடர்ந்து இரஞ்சித் தனது ட்விட்டர் பக்கத்தில், “அன்பான அனுராக் காஷ்யப் உங்கள் படங்களின் தீவிர ரசிகன் நான். இந்த மாலையை உங்களுடன் செலவிட்டது மிக்க மகிழ்ச்சியளிக்கிறது. காலா திரைப்படம் உங்களுக்கு விருப்பமாக இருந்தது எனக்கு பெருமையளிக்கிறது. நல்ல கலந்துரையாடலுக்கும், விருந்துக்கும் மிக்க நன்றி” என்று பதிவிட்டுள்ளார்.

அதை ரீட்விட் செய்துள்ள அனுராக் , “காலாவை காலதாமதமாக பார்த்துள்ளேன். உங்களது அனைத்துப் படங்களையும் நான் பார்க்க ஆவலாக உள்ளேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இரஞ்சித் தற்போது பழங்குடி மக்களின் தலைவர் பிர்சா முண்டாவின் வாழ்க்கையைப் படமாக்குவதற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளார் . அத்துடன், நீலம் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் ஒரே நேரத்தில் இரு படங்களை தயாரித்து வருகிறார்.

புதன், 24 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon