மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 3 ஜூலை 2020

இலங்கை: பாதுகாப்புச் செயலாளர் ராஜினாமா செய்ய வலியுறுத்தல்?

இலங்கை: பாதுகாப்புச் செயலாளர் ராஜினாமா செய்ய வலியுறுத்தல்?

இலங்கை பாதுகாப்புச் செயலாளர் மற்றும் காவல்துறைத் தலைவர் ஆகியோர் ராஜினாமா செய்ய அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறிசேனா வலியுறுத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

இலங்கையில் கடந்த 21ஆம் தேதி முதல் 9 இடங்களில் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டது. மேலும் வெடிகுண்டு நிரப்பிய வேன், லாரி ஆகியவை இலங்கைக்குள் சுற்றுவதாகக் கூறப்படும் நிலையில் அங்கு போலீசார், பாதுகாப்புப் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து ஆங்காங்கே வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

இலங்கை நிலவரம் குறித்து பல்வேறு கருத்துகளும், செய்திகளும் வெளியாகி வரும் நிலையில், குண்டுவெடிப்பில் தொடர்புடையதாகக் கூறி 60 பேர் வரை கைது செய்யப்பட்டிருப்பதாகவும், இதில் ஒரு பெண் உட்பட 9 பேர் தற்கொலைப்படையை சேர்ந்தவர்கள் என்று குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) கண்டறிந்துள்ளதாகவும் இலங்கை காவல் துறை செய்தித் தொடர்பாளர் ரூவன் குணசேகரா தெரிவித்திருக்கிறார். கைது செய்யப்பட்டவர்களில் 32 பேர் சிஐடி காவலில் இருப்பதாகவும், இவர்கள் அனைவரும் இலங்கை குடியுரிமை பெற்றவர்கள் என்றும் ரூவன் குணசேகரா குறிப்பிட்டிருக்கிறார்.

சிறிசேனா நடவடிக்கை?

இலங்கை தாக்குதல் குறித்து ஏற்கனவே எச்சரிக்கப்பட்டும் அதுதொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததால் மக்கள் அதிருப்தியில் இருக்கும் நிலையில், காவல் துறைத் தலைவர், பாதுகாப்புச் செயலாளர் ஆகியோர் பதவியை ராஜினாமா செய்ய அதிபர் மைத்ரிபால சிறிசேனா வலியுறுத்தியிருப்பதாக இலங்கை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இலங்கையில் அடுத்த சில தினங்களுக்குள் பாதுகாப்பு பிரிவில் மறு சீரமைப்பு மேற்கொள்ளவுள்ளதாக அதிபர் நேற்று தெரிவித்திருந்த நிலையில் இன்று இந்த தகவல் வெளியாகியிருக்கிறது.

இலங்கையில் தாக்குதல்கள் நடப்பதற்கான சாத்தியங்கள் குறித்துப் பாதுகாப்பு அமைப்புகளுக்கு முன்கூட்டியே தகவல் தெரிந்திருந்தாலும், இது குறித்து முன்கூட்டியே தனக்குத் தகவல் தெரிவிக்கப்படவில்லை என்று சிறிசேனா குற்றம்சாட்டியுள்ளதாகவும் தெரிகிறது. இந்நிலையில் நாளை அவரது தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, பாதுகாப்புத் துறை துணை அமைச்சர் ரூவன் விஜயவர்தனே, குண்டுவெடிப்பு தொடர்பாகத் தீவிரமாக விசாரணை நடந்து வருவதாகக் கூறிய நிலையில், விசாரணை மேற்கொள்வதற்காக அமெரிக்காவின் ஃபெடரல் பியூரோ ஆஃப் இன்வஸ்டிகேஷன் (எஃப்பிஐ) இலங்கை வந்திருப்பதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதர் அலைனா தெப்லிட்ஸ் இன்று தெரிவித்திருக்கிறார்.

இதற்கிடையில், இலங்கையில் உயிரிழந்த இந்தியாவைச் சேர்ந்த எஸ்.ஆர்.நாகராஜ், எச்.சிவகுமார், கே.ஜி. ஹனுமந்தாரியப்பா, கே.எம். லக்ஷ்மிநாரயணா, எம்.ரங்கப்பா, வி.துளசி ராம், ஏ. மார் கவுடா, எச்.புட்டராஜு மற்றும் ஆர் லக்ஷ்மன் கவுடா ஆகியோரது உடல்களை இந்தியா கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக இந்திய உயர் ஆணையம் தெரிவித்திருக்கிறது. நான்கு தனி விமானம் மூலம் இவர்களது உடல் பெங்களூர் மற்றும் ஹைதராபாத் விமான நிலையங்களுக்குக் கொண்டுவரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதன், 24 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon